பிரதீப் ரங்கநாதன் நடித்த `டிராகன்' படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் கயாடு லோஹர். இவர் முன்பே கன்னடம், மலையாளம், தெலுங்கில் நடித்திருந்தாலும், டிராகன் படத்திற்கு பின் மிகவும் பிரபலமானார். இப்படத்தில் நடிக்க கிடைத்த வாய்ப்பு, இதில் நடனம் ஆடியது, படத்திற்கு பிறகு கிடைத்த பாராட்டுகள் எனப் பல விஷயங்களை சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கூறியுள்ளார் கயாடு. அடுத்ததாக சிம்புவுடன் நடிக்கும் படம் பற்றி கேட்கப்பட, தன்னுடைய முதல் தமிழ் படமே சிம்பு படமாக அமைய வேண்டியது என்பது பற்றி கூறியிருக்கிறார்.
`பார்க்கிங்' இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் சிம்பு - சந்தானம் இணைந்து நடிக்கிறார்கள். இப்படத்தில் ஹீரோயினாக நடிப்பது கயாடு லோஹர் என அறிவிக்கப்பட்டது. சமீபத்தில் அளித்த பேட்டியில் "இன்னும் அப்படத்தின் ஷூட்டிங் துவங்கவில்லை. ஆனால் சிம்பு சாருடன் வேறொரு படத்தின் லுக் டெஸ்டில் பணியாற்றினேன்.
அது கௌதம் மேனன் இயக்கத்தில் உருவான `வெந்து தணிந்தது காடு'. அப்போது சிம்பு சாரிடம் என்னை அறிமுகப்படுத்திக் கொண்டேன். அதன் பின்பு அவரை பட பூஜையில் சந்தித்தேன். அப்போது அவரிடம் என்னை நினைவிருக்கிறதா நாம் இணைந்து போட்டோ ஷூட் செய்தோமே? என்றேன். உடனே அவர் ஆமாம் எனக்கு நினைவிருக்கிறது என்றதும், அப்போது உங்களுடன் நடிக்க வாய்ப்பு அமையவில்லை. இப்போது அமைந்திருக்கிறது என சொன்னேன். அவர் குட் மா எனக் கூறி சென்றார். இப்படத்தின் ஷூட் எப்போது துவங்கும் என ஆர்வமாக காத்திருக்கிறேன்." எனக் கூறியுள்ளார் கயாடு.