கென் கருணாஸ் இயக்குநராகவும், ஹீரோவாகவும் அறிமுகமாகும் `யூத்' படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்வு இன்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக நடிகர் தனுஷ் மற்றும் இயக்குநர் வெற்றிமாறன் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வில் கலந்து கொண்ட நடிகர் மற்றும் கென்னின் தந்தை கருணாஸ் பேசிய போது "வெற்றிமாறனுக்கும், தனுஷுக்கும் தான் நன்றி சொல்ல வேண்டும். அவனை ஒரு நடிகனாக அறிமுகப்படுத்திய வெற்றிமாறன், அவனுக்குள் ஒரு திறமையை கண்டுபிடித்து உதவி இயக்குநராக பணியாற்ற வாய்ப்பளித்த தனுஷ் இருவரும் இங்கு வாழ்த்த வந்திருப்பதால் மகிழ்ச்சி.
இதே தனுஷை திருடா திருடி படத்தில் சந்தித்தேன். அப்போது அவருக்கு 19 வயது தான் இருக்கும். அன்று காதல் கொண்டேன் ரிலீஸ் ஆகவில்லை. அது வந்த பின்னர் பார்த்துவிட்டு அவரின் அண்ணன் செல்வராகவனுக்கு நீங்கள் இந்திய சினிமாவிற்கு மிக சிறந்த நடிகனை கொடுத்திருக்கிறீர்கள் என சொன்னேன். அன்று இருந்த மீடியாக்கள் இவரெல்லாம் ஏன் நடிக்க வந்தார் என காயங்கள் கொடுத்தது. இதெல்லாம் மாறும் என நான் நம்பினேன். இன்று இந்த சின்ன வயதிலேயே இரு தேசிய விருதுகள் வென்ற நடிகராக இருக்கிறார். வெற்றிமாறனின் முதல் படமான பொல்லாதவன் படத்தில் நான் நடித்தேன். அவருடனும் துவக்கம் முதலே நல்ல நட்பு.
சினிமா மீது நம்பிக்கை வைத்தால் சினிமா நம்மை கை விடாது என நான் நம்பினேன். அதன் பலன் தான் என் மகன் கென் என நான் நினைக்கிறேன். இந்த 25 வருட சினிமா பயணத்தில் யாரிடமும் எதற்காகவும் நான் போய் நின்றது இல்லை. திறமையை பார்த்து தான் வாய்ப்பு வர வேண்டும். நான் அதிகம் இணைந்து நடித்த ஹீரோ தனுஷ் தான். ஆனால் அவருடன் நான் நடித்தே 16 வருடங்கள் ஆகிவிட்டது. இப்போது `கர' படத்தில் தான் இணைத்துள்ளேன். அந்தப் படத்தில் அவருக்கு அவார்டு கிடைக்கவில்லை என்றால் ஒன்றிய அரசு மேல் வெறுப்பாகிவிடுவேன். நான் பிஜேபியை திட்டுவதால் அவருக்கு விருது கொடுக்காமல் இருக்கக்கூடாது.
நான் யாரிடமும் எதற்காவும் சென்று நின்றது கிடையாது. ஆனால் இவனுக்காக, இது காதல் படம் என்பதால் ஜி.வி யை நேரடியாக படப்பிடிப்பில் சென்று பார்த்து, இதில் பணியாற்ற கேட்டேன். என்னால் முடிந்த சம்பளத்தை கொடுக்கிறேன் என சொன்னேன். அதெல்லாம் ஒன்றும் வேண்டாம், உங்களுக்காக, கென்னுக்காக இந்தப் படத்தை இலவசமாக செய்கிறேன் என சொன்னார். இதற்காக நான் நன்றியுடன் இருப்பேன்.
இது உங்கம்மா எங்கம்மா இல்ல சினிமா. கென்னும் இதை மனதில் வைக்க வேண்டும், எந்த விஷயம் நடந்தாலும் அதை தலைக்கு ஏற்றிக் கொள்ள கூடாது. இன்று நீங்கள் இயக்குநர் ஆனது தவிர்க்க முடியாத சூழல். ஆனால் அதை கற்க சொன்னது தனுஷ் தான். அவர் ஒருவரை தேர்வு செய்கிறார் என்றால் சாதாரணமாக இருக்காது. இன்று அப்படி பலர் பெரிய இடத்தில் இருக்கிறார்கள். அவர்கள் பெயரை சொல்ல விரும்பவில்லை.
ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய்.
என்ற வள்ளுவரின் குரலை சொல்ல விரும்புகிறேன். இதனைவிட பெரிய சந்தோஷத்தை என் மனைவிக்கு ஒரு பிள்ளையாக அவனால் கொடுத்துவிட முடியாது. Im Proud of you my dear son" என்றார்.