சமீபகால சினிமாவில் படங்களுக்கு திரையரங்கு கிடைக்காதது, பெரிய பட்ஜெட் படங்கள் சென்சார் சான்றிதழ் கிடைக்க தாமதங்களால் தள்ளிப்போவது எனப் பல சிக்கல்கள் நிலவி வருகிறது. `ஜனநாயகன்' தள்ளிப்போவது குறித்து திரை பிரபலங்கள் பலரும் தங்கள் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர். இப்போது இயக்குநர் கார்த்திக் சுப்பராஜும் தன் கருத்தை பதிவிட்டுள்ளார்.
அவரின் பதிவில் "ஒரு சினிமா ரசிகனாக என் எண்ணங்கள், சுயாதீன திரைப்படம் `சல்லியர்கள்' படத்திற்கு திரையரங்கு கிடைக்கவில்லை. விஜய் சாரின் `ஜனநாயகன்' போன்ற பெரிய பட்ஜெட் படம் சென்சார் தாமதங்களால் நாளை வெளியாகவில்லை. நாளை மறுநாள் வெளியாகவிருக்கும் `பராசக்தி' என்ற பெரிய படத்திற்கும் சென்சார் சிக்கலால் முன்பதிவு துவங்கவில்லை. இது சினிமாவுக்கு கடினமான காலம். திரையரங்குகள் சின்ன பட்ஜெட் படங்களுக்கு ஆதரவு தரவேண்டும். ஏனெனில் சாட்டிலைட் சேனல்கள் மற்றும் ஓடிடி தளங்கள் சுயாதீன படங்கள் மற்றும் சின்ன பட்ஜெட் மீது ஆர்வம் காட்டுவதில்லை, தியேட்டர் மட்டுமே வருமானத்துக்கு ஒரே வழி. இந்த சூழலில் சின்ன பட்ஜெட் படங்களுக்கு தியேட்டர் தராதது, சினிமாவை கொலை செய்வதற்கு சமம்.
பெரிய படங்களுக்கு கண்டிப்பான சென்சார் வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்பது இயக்குநர்களின் மீது பெரிய அழுத்தத்தை கொடுக்கிறது. அதுவும் ரிலீஸ் தேதி ஏற்கெனவே அறிவித்துவிட்டு படங்களுக்கு அது பெரிய சுமையை தருகிறது. இப்போது இந்தியா மற்றும் ஓவர் சீஸ் வழிமுறைப்படி 3 மாதங்களுக்கு முன் சென்சாருக்கு படத்தை கொடுப்பது என்பது சாத்தியமில்லாத ஒன்று. இது இன்னும் நெறிமுறைப்படுத்தப்பட்டு எளிமையான செயல்முறைகள் வேண்டும். இல்லை என்றால் பெரிய படங்கள் தள்ளிப் போய் மெல்ல மெல்ல இந்த துறை மோசமாகிவிடும். எனவே ரசிக மோதல்கள், அரசியல் காரணங்கள், தனிப்பட்ட உள்நோக்கங்கள், வெறுப்பு பிரச்சாரம் எல்லாவட்றையும் தள்ளி வைத்துவிட்டு கலையையும், சினிமாவையும் காப்பதற்காக சினிமா குடும்பமாக இணைந்து செயல்படுவோம்" எனக் குறிப்பிட்டுள்ளார்.