இந்திய சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான். சமீபத்தில் அவர் அளித்த பேட்டி ஒன்றில், அவர் இசையில் உருவான `Chhaava' படம் பிரிவினைவாதம் பேசும் படமாக இருந்தது பற்றி கேட்கப்பட்டது.
அதற்கு பதில் அளித்த ரஹ்மான் "இன்றைய காலகட்டத்தில் படங்கள் என்ன நோக்கத்தில் எடுக்கப்படுகிறது எனக் கண்டுபிடிக்க முடிவதில்லை. சில படங்கள் தீய நோக்கங்களுக்காக எடுக்கப்படுகின்றன. அப்படியான படங்களை நான் தவிர்க்கப்பார்க்கிறேன். அது (Chhaava) கூட பிரிவினையை பேசும் படம் தான், பிரிவினையை பேசி பணம் சம்பாதித்தது. ஆனால் அதன் மையக்கரு துணிச்சலைக் காட்டுவது என்று நான் நினைக்கிறேன். ஆனால் மக்கள் அதை விட புத்திசாலிகள் என்று நான் நிச்சயமாக நினைக்கிறேன். திரைப்படங்கள் மக்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தும் என நீங்கள் நினைக்கிறீர்களா? அவர்களுக்கு மனசாட்சி என்று ஒன்று உள்ளது, அது உண்மை என்ன, எது திரிபு என்ன என்பதை அறிந்திருக்கிறது" என்றார்.
இந்தக் கருத்தை எதிர்த்து தனது இன்ஸ்டா பக்கத்தில் கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார் பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத். அதில் ரஹ்மான் வெறுப்புணர்வு உள்ளவர் எனவும், தனது படத்துக்கு அவர் இசையமைக்க மறுத்தது பற்றியும் குறிப்பிட்டுள்ளார். அப்பதிவில் "அன்புள்ள ரஹ்மான் ஜி, நான் ஒரு காவி கட்சியை ஆதரிப்பதால் திரையுலகில் நான் முன்முடிவோடு அணுகப்படுவதையும், நிறைய பாரபட்சத்தையும் எதிர்கொள்கிறேன், ஆனால் உங்களை விட பாரபட்சமும் வெறுப்பும் கொண்ட ஒருவரை நான் சந்தித்ததில்லை என்று நான் சொல்ல வேண்டும். நான் இயக்கிய Emergency கதையை உங்களுக்கு சொல்ல விரும்பினேன். ஆனால் கதை கேட்பதை விடுங்கள், என்னை சந்திக்க கூட நீங்கள் மறுத்தீர்கள். நீங்கள் ஒரு பிரச்சார படத்தின் ஒரு பகுதியாக இருக்க விரும்பவில்லை என்று என்னிடம் கூறப்பட்டது. ஆனால் Emergency ஒரு தலைசிறந்த படைப்பு என்று விமர்சகர்கள் பாராட்டினார்கள். இன்னும் சொல்லப்போனால் எதிர்க்கட்சித் தலைவர்கள் கூட நான் படத்தை அணுகி இருந்த விதத்தை பாராட்டி எனக்கு கடிதங்களை அனுப்பினர். ஆனால் உங்கள் கண்ணை மட்டும் வெறுப்பு மறைத்தது. உங்களுக்காக நான் வருந்துகிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார் கங்கனா.