பாரி இளவழகன் இயக்கி நடித்து 2024ல் வெளியான படம் `ஜமா'. சேத்தன், அம்மு அபிராமி எனப் பலரும் நடித்திருந்த இப்படத்துக்கு இளையராஜா இசையமைத்திருந்தார். தெருக்கூத்தில் பெண் வேடம் கட்டி நடிக்கும் ஒரு கூத்து கலைஞனின் வாழ்க்கையை பற்றி பேசிய படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.
தற்போது இவர் அடுத்ததாக இயக்கி, நடித்துள்ள புதிய படத்தில் ரம்யா ரங்கநாதன், சேத்தன், வைரல் யூடியூபர் பரிதாபங்கள் கோபி, இஸ்மத் பானு, சுதர்சன் காந்தி உடன் முக்கிய கதாபாத்திரத்தில் ரோஜா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். சென்னையின் பெரம்பூர் பகுதியை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்தப் படைப்பு, அனைத்து வயதினரும் குடும்பத்துடன் ரசிக்கும் வகையிலான ஜாலியான குடும்பப்படமாக உருவாகியிருக்கிறது.
‘மண்டேலா’, ‘மாவீரன்’ இசையமைப்பாளர் பரத் சங்கர் இசை, ‘அருவி’, ‘சக்தி திருமகன்’ பட ஒளிப்பதிவாளர் ஷெல்லி கேலிஸ்ட் ஒளிப்பதிவு, பார்த்தா படத்தொகுப்பு, மகேந்திரன் கலை இயக்கம் என வலுவான கூட்டணி இணைந்து இப்படத்தை உருவாக்கி வந்தனர். விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்பு நேற்றோடு நிறைவடைந்துள்ளது. விரைவில் இப்படத்தின் தலைப்பு, ரிலீஸ் தேதி உள்ளிட்டவை அறிவிக்கப்படும் என தகவல். இப்படம் கோடை வெளியீடாக வெளியாகவுள்ளது.