விஜய் நடிப்பில் அவரது கடைசி படமாக வெளியாகவுள்ளது `ஜனநாயகன்'. ஹெச் வினோத் இயக்கியுள்ள இப்படத்தில் மமிதா பைஜூ, பாபி தியோல், பூஜா ஹெக்டே, ப்ரியாமணி, பிரகாஷ்ராஜ் எனப் பலரும் நடித்துள்ளனர். ஜனவரி 9ம் தேதி இப்படம் வெளியாகவுள்ள நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் படம் பற்றி பல விஷயங்களை பகிர்ந்துள்ளார் ஹெச் வினோத்.
இப்படத்திற்கான வாய்ப்பு எப்படி அமைந்தது எனக் கூறும்போது "Passion ஸ்டூடியோஸ் சுதன், நண்பர் சந்தோஷ் ஆகியோரிடம் ஒருமுறை பேசிய போது, `விஜய் சாரோட கடைசிப் படத்துக்குக் கதை கேட்குறாங்க' என்கிற தகவலை கூறினார்கள். உடனே விஜய் சாரின் மேனேஜர் ஜெகதீஷை தொடர்புகொண்டு, 'தலைவா, சார் கதை கேட்குறாராமே' என கேட்டேன். உடனே அவர் `இருக்குதா? எனக் கேட்டார். 'இருக்குது' என சொன்னதும் விஜய் சாருடன் சந்திப்பு நடந்தது, 'ஜனநாயகன்' உருவானது. அவருக்குக் கதை ரொம்பப் பிடித்திருந்தது.
படத்தின் தயாரிப்பாளரான கே.வி.என். நிறுவனத்தின் வெங்கட் கே.நாராயணா சாரிடம் கதை சொல்ல அனுப்பி வைத்தார்கள். விஜய் சார் அரசியல் வருகையை மனதில் வைத்து கதையில் சில விஷயங்கள் சேர்த்திருக்கிறேன். தயாரிப்பாளர் இதையெல்லாம் ஏற்றுக் கொள்வாரா என்ற தயக்கம் இருந்தது. அவரிடம் கதையை சொல்லி முடித்துவிடு, என்னென்ன மாற்றங்கள் செய்திருக்கேன் என்பதையும் சொன்னேன். கேட்டுட்டு உற்சாகமாகி, அவரும் நிறைய இன்புட்ஸ் கொடுத்தார், சில அரசியல் இன்புட்ஸும் கொடுத்தார். அப்படி ஒரு தைரியமான தயாரிப்பாளர்" என்றார்.
விஜயை இயக்கிய அனுபவம் பற்றி கூறும் போது " 'ஜன நாயகன்' அவரது கடைசிப் படம் என அறிவித்த பிறகே படப்பிடிப்புக்குக் கிளம்பினோம். அதனால் இது அவர் கடைசிப் படம் என்ற அழுத்தமே இல்லை, 'ஜன நாயகன்' மொத்தப் படப்பிடிப்பு 100 நாள்கள் தாண்டியிருந்தாலும், அவரை மட்டுமே 84 நாள்கள் ஷூட் செய்ததில் எனக்கு 84 விஜய் சார் படங்கள் பார்த்த மாதிரி இருந்தது. அவர் ஒரு கம்ப்ளீட் ஸ்டார் ஆக்டர். தவிர, அவர் ஒரு பக்கா டைரக்டர். அவருக்கு லைட்டிங், லென்ஸிங், ஷாட் தொடர்ச்சினு ஒரு இயக்குநருக்குத் தெரிய வேண்டியதைவிட அதிகமாகவே தெரிந்திருக்கிறது. அவர் கேமரா முன்னாடி நின்ற ஒவ்வொரு நாளுமே மகிழ்ச்சிகரமான தருணங்களாக இருந்தன. நாம் ஒரு சீன் எழுதி அவருக்குக் கொடுத்திருக்கோம். அதில் அவர் என்ன மாதிரியான பர்ஃபாமென்ஸ் பண்ணப் போகிறார் என பார்ப்பது மகிழ்ச்சிகரமான அனுபவம், அதனால்தான் அவரை ஒவ்வொரு நாளும் ஷூட் செய்யும்போதும், ஒவ்வொரு படம் பார்த்த மாதிரி இருக்கிறது என சொன்னேன். நாம் நேரில் பார்க்கும் விஜய் சார் வேறு, தனிப்பட்ட ரீதியில் பழகும் விஜய் சார் வேறு. கேமரா முன்னாடி வந்துவிட்டால் அவர் இன்னும் வேறு அவதாரம் எடுப்பார். ஒரு ஸ்டாரை, செயற்கைத்தனம் இல்லாத ஒரு aura-வை உணரமுடியும்" என்றார்.
`ஜனநாயகன்' தெலுங்குப் படமான ‘பகவந்த் கேசரி'யின் ரீமேக்கா எனக் கேட்கப்பட "இசை வெளியீட்டு விழாவில் பேசியதை இங்கே மறுபடியும் சொல்கிறேன். இந்தக் கதை 'பகவந்த் கேசரியின் ரீமேக்கோ, அதிலிருந்து சில காட்சிகளை எடுத்து ரீமேக் செய்திருக்கிறார்களா, அல்லது அதில் உள்ள ஒரு காட்சியை மட்டும் எடுத்து ரீமேக் செய்திருப்பார்களா இப்படி எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும். இதைப் பற்றி படம் பார்க்க வருபவர்கள் கவலைப்பட வேண்டாம் என நினைக்கிறேன். ஏன்னென்றால், இது ஒரு தளபதி படம் 'இது ரீமேக் படம். நான் ஏற்கெனவே அந்தப் படத்தைப் பார்த்துட்டேன். அப்புறம் ஏன் இதைப் பார்க்கணும்' என்கிற எண்ணம் சில பேருக்கு இருக்கும். அல்லது, சிலருக்குக் கோபம்கூட இருக்கும். அவர்களுக்கு ஒரு விஷயம் சொல்கிறேன். நீங்கள் ஒரு ஷோ மட்டும் காத்திருங்கள். அந்த ஷோவில் உங்களுக்கு விடை தெரிந்துடும். அடுத்தடுத்து டீசர், டிரெய்லர், பாடல்கள் வெளிவரும். அதில் ஓரளவுக்கு உங்களுக்குத் தெரிய வரும். இந்த விஷயத்தில் என்னால் 'ஆமாம்' என்றோ 'இல்லை' என்றோசொல்ல முடியாது." என்றார்.
விஜயின் அரசியல் வருகை பற்றி கேட்டதும் "இதில் என்னுடைய தனிப்பட்ட கருத்தாக என்ன சொல்ல முடியும்? அவருக்கு அரசியலுக்கு வரும் எண்ணம் இருக்கிறது என எத்தனையோ வருடங்களுக்கு முன்னரே நமக்குத் தெரியும். 'தலைவா' படத்திற்கு முன்பே அவரது ரசிகர் மன்றங்களை அரசியலுக்கான இயக்கமாகத் தானே நடத்தி இருந்தார்கள். அதனால் அவர் அரசியலுக்கு வந்ததில் ஆச்சர்யம் எதுவும் இல்லை. அவர் வரவில்லை என்றால் தான் நான் ஆச்சரியப்பட்டிருப்பேன். அவருக்கு எந்த விஷயத்திலும் ஒரு உறுதியான பிடிவாதம் இருக்கிறது. ஒன்றை எடுத்துவிட்டால், அதைச் செய்து முடிப்பார். அவர் சினிமாவுக்கு வருவதற்கு முன் ஏகப்பட்ட அவமானங்கள், நெருக்கடிகள் என எல்லாவற்றையும் சந்தித்திருக்கிறார். ஆனால் அந்தத் தோல்விகளில் இருந்து பாடம் கற்றுக்கொண்டு அதற்கான திறனையும், உழைப்பையும் போட்டு மேலே எழுந்து வந்திருக்கிறார். அந்த மாதிரி அரசியலுக்கு வந்திருக்கிறார்" என்றார் ஹெச் வினோத்.