சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய ஹிட்டான படம் `அமரன்'. இப்படம் 70வது Filmfare விருது விழாவில், சிறந்த படம், சிறந்த இயக்குநர், சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த ஆல்பம், சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த பின்னணிப் பாடகர், சிறந்த பின்னணிப் பாடகி என எட்டு விருதுகளை வென்றுள்ளது. இந்த நிகழ்வில் விருதுபெற்ற சிவகார்த்திகேயன் பேசியபோது, "இதுதான் என் முதல் Filmfare விருது. 13 வருடங்களுக்கு முன்பு முதன்முதலாக இந்த விழாவுக்கு தனுஷ் சாருடன்தான் வந்தேன். அவர்தான் 'சும்மா வா... ஜாலியாக போயிட்டு வரலாம்' என்று என்னை அழைத்து வந்தார். அப்போது இரண்டாவது வரிசையில் அமர்ந்திருந்தேன். முதல் வரிசை வர 13 வருடங்கள் ஆகியிருக்கிறது.
'அமரன்' படம் கோவா சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டபோது, 'அமரன் எனக்கு தொடர்ந்து கொடுத்துக் கொண்டே இருக்கும்' என்று சொன்னேன். அதேபோல இந்தப் படம் இன்னும் எனக்கு விருதுகளைக் கொடுத்துக் கொண்டேதான் இருக்கிறது. அதற்குக் காரணமான முகுந்த் வரதராஜன் சாரின் குடும்பத்தினருக்கு நன்றி. இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமிக்கு நன்றி. அவர் இவ்வளவு அழகாக எழுதியதால்தான் இதெல்லாம் சாத்தியமானது.
என் தயாரிப்பளார் கமல்ஹாசன் சார். அவர் அத்தனை Filmfare விருதுகள் வாங்க இருக்கிறார். ’எனக்குப் போதும், இனி மற்ற திறமையாளர்களுக்குக் கொடுங்கள்’ எனச் சொல்லும் அளவுக்கு அவர் Filmfare விருதுகள் பெற்றிருக்கிறார். இந்தப் படத்தை ஒப்பந்தம் செய்ய நான் கமல்ஹாசன் சாரின் அலுவலகத்திற்குச் சென்றபோது அங்கிருந்த எக்கச்சக்கமான Filmfare விருதுகளைப் பார்த்தேன். அப்போது அமரனுக்கு விருது கிடைக்க வாய்ப்பிருக்கிறது என நினைத்தேன். இன்று அது கிடைத்திருக்கிறது.
அமரனுக்கு இவ்வளவு பெரிய வெற்றியைக் கொடுத்த ஆடியன்ஸுக்கு நன்றி. நான் ரொம்ப ஜாலியான நபர்தான். ஆனால், என்னைப் பார்த்து ’நீ ஏன் இந்த ரோலில் நடிக்கிறாய்’ எனக் கேட்காமல், ’நன்றாக நடித்திருக்கிறாய்’ என ஏற்றுக் கொண்ட தமிழ் சினிமா ரசிகர்களுக்கு நன்றி. என் ரசிகர்களான சகோதர சகோதரிகளுக்கு நன்றி. குறிப்பாக எவ்வளவு பேர் என்னை அடித்து மிதித்து கீழே தள்ளினாலும், என்னைத் தூக்கி மேடையில் வைத்துக்கொண்டே இருக்கும் ரசிகர்களுக்கு நன்றி. நீங்கள் கைதட்டி கைதட்டி என்னை இன்னும் பல இடங்களுக்கு கூட்டிச் செல்வீர்கள் என நம்பிக்கை இருக்கிறது. உங்களுக்கு பிடித்த சிவாண்ணா இன்று Filmfare விருதுடன் மேடையில் நிற்கிறேன்" என்றார்.