Kaushik Vijay
கோலிவுட் செய்திகள்

ஜனநாயகன் ஓடிடி ரிலீஸ் எப்போது? விஜய் பேட்டி கொடுத்துள்ளாரா? - பதில் சொன்ன ஜீ5 கௌஷிக் | Vijay

சில சமயம் ஏதாவது விழாவுக்கு வரும்படி தள்ளிவைத்து கூட வெளியிடுவோம். சில சமயம் தயாரிப்பாளருக்கு சம்மதம் என்றால் முன்பே கூட வெளியிடுவோம். எட்டு வாராம் என்பது ரெண்டு மாதம் தானே, அது பிரச்சனை கிடையாது.

Johnson

அமீன் இயக்கத்தில் சுபாஷ் செல்வம், முனீஸ்காந்த் நடித்துள்ள சீரிஸ் `Kaakee Circus'. இந்த சீரிஸின் செய்தியாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது. ஸீ5 தளத்தில் பொறுப்பில் இருக்கும் கௌஷிக்கிடம்  இந்நிகழ்வில் கேள்விகள் கேட்கப்பட்டது. தயாரிப்பாளர் சங்கத்தில் புதிதாக ஜெயித்து வந்திருப்பவர்கள் நடிகர்களும், இயக்குநர்களும் ஓடிடி படம் மற்றும் வெப் சீரிஸில் நடிக்க கூடாது என சொல்லி இருக்கிறார்களே எனக் கேட்டதும்,

"முன்பே ஒப்பந்தம் செய்திருக்கும் படங்களை முடித்துவிட்டு, பின்னர் நடிக்கலாம் என்று தான் சொல்லி இருக்கிறார்கள். நடிக்கவே கூடாது என்றெல்லாம் சொல்லவில்லை. ஒரு நடிகனாக அவர் எங்கு நடிக்கலாம், நடிக்க கூடாது என்பது அவர்களின் உரிமை, அதை யாரும் தடுக்க முடியாது. ஆனால் அவர்களுக்கு ஏற்கெனவே ஒரு சினிமா ஒப்பந்தம் இருந்தால், அதை விட்டுவிட்டு இங்கு வரக் கூடாது, அதற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்பதை தான் சொல்கிறார்கள். அதற்கு நாங்கள் முழு ஆதரவு தருகிறோம். அதற்கு ஏற்றார் போல் நாங்கள் தேதிகளை வாங்கிக் கொள்வோம். அதேவேளை சீரியல் ஆர்ட்டிஸ்ட், ஓடிடி ஆர்ட்டிஸ்ட், திரைப்பட ஆர்ட்டிஸ்ட் என நாம் பிரிக்க முடியாது. கலைக்கு எந்த பேதமும் கிடையாது.

எல்லா நடிகருக்கும் எல்லா படங்களிலும் வேலை வாய்ப்பு கிடைக்கும் என்ற உத்திரவாதம் இன்று உள்ளதா? ஒரு நடிகன் வாய்ப்பில்லாமல் வீட்டில் அமர்ந்திருக்கிறார் என்றால் அது எவ்வளவு கஷ்டம் என்று அனுபவித்தால் தான் புரியும். எனக்கு தெரிந்து ஓடிடியில் நடிகர்கள் நடிப்பதால் சினிமா பாதிக்கப்படுவது கிடையாது. சில படங்களை விட ஓடிடியில் வரும் கன்டென்ட் நன்றாகவே இருக்கிறது. ஜி5 மட்டுமல்லாது எல்லா ஓடிடியையும் மனதில் வைத்தே சொல்கிறேன். எனவே யார் என்ன நடிக்க வேண்டும் என்பது அவரவர் உரிமை. அதையும் தாண்டி யாரையும் நடிக்க கூடாது என எதிர்த்தால், அதனை எதிர்த்து போராட வேண்டும். இதை தாண்டி ஒரு தளத்தில் வேலை மரியாதை சம்பளம் கொடுக்கிறார்களா என்றால் அதை வரவேற்க வேண்டும்." என்றார்.

Jana Nayagan

திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தில் இருப்பவர்கள் திரைப்படங்களை 8 வாரம் கழித்தே ஓடிடியில் வெளியிட வேண்டும் என சொல்கிறார்கள். ஜனநாயகன் படத்தை நீங்கள் வாங்கி இருக்கிறீர்கள். அந்தப் படமும் எட்டு வராம் கழித்து தான் வருமா? எனக் கேட்கப்பட்ட "ஜனநாயகன் பொறுத்தவரையில் அது வெளியாகும் தேதி இன்னும் யாருக்கும் தெரியவில்லை. அது வெளியாகும் போது அதற்கு எப்படியான ஒப்பந்தம் போட்டிருக்கிறோமோ, அதன்படி சேனல் தலைவர்கள் முடிவெடுப்பார்கள். சில சமயம் ஏதாவது விழாவுக்கு வரும்படி தள்ளிவைத்து கூட வெளியிடுவோம். சில சமயம் தயாரிப்பாளருக்கு சம்மதம் என்றால் முன்பே கூட வெளியிடுவோம். எட்டுவாராம் என்பது ரெண்டு மாதம் தானே, அது பிரச்னை கிடையாது. தியேட்டரில் இருந்து வந்து மூன்று மாதம் கழித்துதான் நாங்கள் வெளியிட்டிருக்கிறோம். அது சிக்கல் இல்லை." என்றார்.

ஜி தொலைக்காட்சிக்கு விஜய் பிரத்யேக பேட்டி அளித்தாகவும், அது தமிழ் புத்தாண்டுக்கு ஒளிப்பரப்பு எனவும் ஒரு தகவல் உள்ளதே? என்றதும் "எனக்கு தெரிந்து அந்தமாதிரி பேட்டி எதுவும் நடக்கவில்லை. புத்தாண்டு அன்று பார்ப்போம், வந்தது என்றால் பார்ப்போம். வரவில்லை என்றால் இல்லை." என்றார் கௌஷிக்.