செய்தியாளர் புனிதா பாலாஜி
இயக்குநர் ராமின் பறந்து போ திரைப்படம் ஒருபுறம்.. சித்தார்த்தின் 3BHK திரைப்படம் மறுபுறம்.. இப்படி, தமிழ் சினிமாவின் திரையரங்குகளை மகிழ்ச்சியும், நெகிழ்ச்சியுமாக மாற்றியிருக்கின்றன, அண்மையில் வெளியான புதிய திரைப்படங்கள்.. போதைப் பொருள் கடத்தல், கேங்ஸ்டர்களுக்குள் சண்டை, ரத்தம் தெறிக்கும் வன்முறை நிறைந்த படங்களுக்குதான் சந்தை மதிப்பு அதிகம் என்ற பிம்பத்தை, இப்படங்களை உடைத்துள்ளன.
சமூகம் குறித்து சீரியஸான பார்வையில் படங்களை உருவாக்கும் ராம், சிவாவுடன் இணைந்து பறந்து போ எனும் காமெடி படத்தை உருவாக்கியிருக்கிறார்.. படம் தொடங்கியது முதல், முடியும் வரையில் வயிறு வலிக்க சிரிக்கிறார்கள் மக்கள்.
சொந்தமாக வீடு கட்ட நினைக்கும் சாமானிய குடும்பத்தின் கனவுகளை காட்சிகளாக்கியிருக்கிறார், இயக்குநர் ஸ்ரீகணேஷ்.. சூர்யவம்சம் படத்தில் ஒரே பாடலில் பணக்காரர்கள் ஆன சரத்குமாரையும்-தேவையானியையும், படம் முழுக்க கஷ்டப்பட வைத்துவிட்டார்களே என கிண்டலான மீம்களையும் இணையத்தில் பார்க்க முடிகிறது.
விக்ரம் பிரபுவின் லவ் மேரேஜ் படத்தையும் குறிப்பிட வேண்டும். திருமண வயதை கடந்தும் திருமணம் ஆகாமல் இருக்கும் இளைஞனின் கதையை மையமாக வைத்து உருவாகியிருக்கிறது, இத்திரைப்படம்.. ஒவ்வொரு குடும்ப நிகழ்வுகளிலும் நாம் காணும் மனிதர்களை எல்லாம் கதாபாத்திரங்களாக மாற்றி காட்சிகளில் உலவ விட்டிருக்கிறார், இயக்குநர் சண்முக பிரியன்..
இவ்வரிசையில், அபிஷன் ஜீவிந்தின் டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படத்தை குறிப்பிடாமல் இருக்கமுடியாது.. இந்த ஆண்டு வெளியான படங்களில், அதிக அளவிலான மக்களை திரையரங்கு நோக்கி படையெடுக்க வைத்தது, டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம்.. ஓடிடி வந்தாலும், இணையத்தில் படங்கள் வெளியானாலும், திரையங்கில் குடும்பத்தோடு படம் பார்ப்பது தனி மகிழ்ச்சி என்பதை, இதுபோன்ற படங்களே மீண்டும் நிரூபிக்கின்றன.