jailer vs leo
jailer vs leo file image
கோலிவுட் செய்திகள்

ஜெயிலரிடம் தோற்றுவிட்டதா லியோ…? ரூ.540 கோடியோடு முடிந்த வசூல் விவரம்! இன்றே கடைசி நாள்

யுவபுருஷ்

ஜெயிலரும்.. லியோவும்.. வசூல் விவரங்கள்! 

லோகேஷ் - விஜய் கூட்டணியில் பிரம்மாண்டமாக உருவாகி கடந்த அக்டோபர் 19ம் தேதி பெரிய ஓபனிங்குடன் திரைக்கு வந்த லியோ திரைப்படம், ஆரம்பம் முதலே வசூல் வேட்டையில் கோரத்தாண்டமாடியது. அது எந்த அளவுக்கு இருந்தது என்றால், முதல் நாளில் மட்டும் உலகம் முழுவதும் 148 கோடி ரூபாயை படம் வசூலித்திருந்தது. அதனைத் தொடந்து 7 நாள் முடிவில் 461 கோடியை தாண்டியது. 12 நாட்கள் ஆனபோது மொத்தமாக 541 கோடி ரூபாயை கடந்தது.

இன்னொருபக்கம் பார்த்தால், நடிகர் ரஜியின் ஜெயிலர் திரைப்படம், முதல்நாள் வசூல் 100 கோடியை தாண்டிய நிலையில், ஒரு வாரத்தில் ரூ. 375 கோடியை வசூல் செய்தது. மேலும் 12 நாளில் சுமார் 510 கோடி ரூபாயை தொட்டதாக கூறப்படுகிறது. மேலும் 16 நாள் முடிவில் 525 கோடி ரூபாயை கடந்ததாக தயாரிப்பு நிறுவனம் அதிகார்ப்பூர்வமாக அறிவித்தது.

லியோ படத்தின் விமர்சனங்கள் கலவையானதாக இருந்தாலும், தாங்கள்தான் பாக்ஸ் ஆஃபிஸ் கிங் என்று சிலாகிக்கத்தொடங்கினர் ரசிகர் படை. அவர்களின் உற்சாகத்திற்கு ஏற்றடிதான் முதல் 12 நாட்களில் படமும் வசூல் வேட்டையாடியது. படத்தின் பாக்ஸ் ஆபிஸ் குறித்த விவரங்களை தயாரிப்பு நிறுவனமான செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ கடந்த 31ம் தேதி வரை வெளியிட்டு வந்த நிலையில், கடந்த 9 நாட்களாக சத்தமில்லாமல் சைலண்டாக இருந்து வருகிறது.

இன்றே கடைசி நாள்!

பெரிய எதிர்பார்ப்புடன் வெளியான இந்த படம் தமிழ்நாட்டில் மட்டும் சுமார் 900க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் ஓடியது. இதனால், முதல் 2 வாரத்திலேயே படத்தை அதிகபட்சமான ரசிகர்கள் பார்த்துமுடித்தனர். குறிப்பிடவேண்டிய விஷயம் என்னவெனில், விஜய்க்கான ஃபேமிலி ஆடியன்ஸும் குவியத்தொடங்கினர். இந்த படம் வரும்போது, வேறு எந்த படமும் திரைக்கு வராத நிலையில், தனி ஆளாக வசூல் வேட்டையாடினார் ‘லியோ’.

ஆனால், தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதை முன்னிட்டு கார்த்தியின் ‘ஜப்பான்’ ராகவா லாரன்ஸ் மற்றும் எஸ்.ஜே சூர்யா கைகோர்த்துள்ள ‘ஜிகர்தண்டா 2’, விக்ரம் பிரபுவின் ‘ரெய்டு’ உள்ளிட்ட படங்கள் இன்று (நவ.10) திரைக்கு வருகின்றன. இதனால், 50 - 100 ஸ்கிரீன்கள் மட்டுமே இன்று முதல் லியோ திரைப்படத்துக்கு ஒதுக்கப்படும் என்று தெரிகிறது. ஏற்கெனவே பெரும்பாலான ஆடியன்ஸ் படத்தை பார்த்துவிட்டதும் இதற்கு காரணமாக பார்க்கப்படுகிறது. அந்த வரிசையில், லியோ படத்தின் வசூல் குறித்த விவரங்கள் இன்றோ அல்லது நாளையோ அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்த தருணத்தில்

எங்கு சறுக்கியது லியோ? ஜெயிலர் வென்றது எப்படி? 

என்பதையும் பார்ப்போம்!

ரஜினி தொடர்ந்து தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற பல மொழிகளைச் சேர்ந்த முக்கிய சூப்பர் ஸ்டார்கள் ஜெயிலரில் கைகோர்த்திருந்ததும், படத்தின் இசையும், அது படைக்கப்பட்ட விதமும் 20 நாட்களைத்தாண்டி ஜெயிலர் படத்தை ஓட வைத்தது. அந்தந்த மொழிகளைச் சேர்ந்த ரசிகர்கள் தங்களது நாயகர்களை கொண்டாடி கொளுத்தினர். மோகன்லால், சிவராஜ்குமார் போன்றோரை மட்டுமன்றி, ஜெயிலரில் வில்லனாக மிரட்டிய விநாயகனை கொண்டாடி மகிழ்ந்தனர். இதுமட்டுமல்லாது, முழு ஸ்கிரீன்களிலும் இன்றி குறைந்த ஸ்கிரீனுடன் ஓடிய ஜெயிலர் நேர்மறை விமர்சனத்தால், ஒரு சில தியேட்டர்களில் 50 நாட்களைக் கூட தொட்டு ருசித்தது.

ஆனால், மொத்தமுள்ள அனைத்து ஸ்கிரீனிலும் வெளியான லியோ படம், பெரிய ஓபனிங்காலும், கலவையான விமர்சனத்தாலும் சற்று தேக்கநிலையை எட்டியதாக தெரிகிறது. இருந்தபோதிலும் பார்த்திபன் - லியோ என்று இருவேறு முகங்களில் கோபம், அழுகை, காதல் என்று அனைத்திலும் நடிப்பால் மிளிர்ந்த தங்களது நாயகன் விஜய்யை ரசிகர் படை கொண்டாடி தீர்த்து வருகிறது.

வெற்றியாளர் யார்? 

ஜெயிலர், லியோ இரு படங்களும் 500 கோடி பாக்ஸ் ஆபிஸை கடந்தாலும், யார் முந்தி என்பதை இன்னமும் ரசிகர்கள் விவாதமாக்கி வருகின்றனர். ஜெயிலர் படம் ஒட்டுமொத்தமாக 600 கோடி ரூபாயை தாண்டியது. லியோவும் 600 கோடி ரூபாய் வசூலை தாண்டியதாக கூறப்பட்டாலும், தயாரிப்பு நிறுவனத்தால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. இதனால், அதிகாரப்பூர்வ அறிவிப்பு வராதவரை, பந்தயத்தில் ஜெயிலரே வெற்றியாளர்.