விஷ்ணு விஷால், செல்வராகவன், ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிப்பில் பிரவீன் கே இயக்கி சமீபத்தில் வெளியான படம் `ஆர்யன்'. அக்டோபர் 31 திரையரங்கில் வெளியான இப்படம் ஒரு க்ரைம் த்ரில்லர் படமாக அமைந்தது. இப்படத்தின் க்ளைமாக்ஸுக்கு வந்த எதிர்மறை கருத்துக்களை கவனத்தில் கொண்டு அதனை மாற்றியுள்ளனர். இது பற்றி இன்று நடைபெற்ற `ஆர்யன்' பட நன்றி தெரிவிப்பு விழாவில் கலந்து கொண்ட விஷ்ணு விஷால் விரிவாக பேசி உள்ளார்.
விஷ்ணு விஷால் பேசிய போது "ராட்சசன் படத்தின் எடிட்டிங் நடந்த போது, நான் இருக்கவில்லை. அந்தப் படத்தின் இயக்குநரும், தயாரிப்பாளருமே எடிட்டருடன் உட்கார்ந்து பணியாற்றினார்கள். ஆர்யன் படத்தில் நானும் இருந்த போது, ரொம்ப நியாயப்படுத்தினால் சரியாக இருக்குமா என்ற விவாதம் இருந்தது. ராட்சசன் படத்தில் ஏன் அவன் சைக்கோ ஆனான் என்பதற்கு காரணம் அதிகமாக வைத்திருந்தோம். நீங்கள் பார்க்காத 10 நிமிடமும் எங்களிடம் இருக்கிறது. அதை வைத்து மிகவும் நியாயப்படுத்தி, அவனை நல்லவனாக்க வேண்டாம் என முடிவு செய்தோம். அதை குறைக்க இயக்குநர் ராமிடம் நான் 3 மாதங்கள் தொடர்ந்து பேசினேன். அந்த முடிவு சரியாக தான் அமைந்தது.
இந்தப் படத்தை பொறுத்தவரை அந்த கதாபாத்திரம் சொல்லும் விஷயங்கள் சரியாக இருந்தது. எனவே இதனை நியாயப்படுத்தலாமா வேண்டாமா என்ற விவாதம் நடந்தது. அப்போது இதனை நியாயப்படுத்தலாம் என முடிவுக்கு வந்தோம். பல திரையிடல்களும் நடத்தினோம். அப்போது யாருக்கும் இது குறையாக தெரியவில்லை. ரிலீசுக்கு பிறகுதான் இந்த விஷயம் வெளியே வந்தது.
நான் கதையில் தலையிட்டேனா எனக் கேட்டீர்கள், சினிமா என்பது ஒரு கூட்டு முடிவு தான். சில சமயம் அது சரியாக அமையும், சில நேரம் தவறாக முடியும். ஆனால் அதை உடனடியாக புரிந்து சரி செய்கிறோமா என்பதே விஷயம். மேலும் தலையிடுவது என்பது என்னை பொறுத்தவரை ஒரு ஹீரோவாக பொறுப்பு எடுத்துக் கொள்வது என நினைக்கிறேன். அது என் தயாரிப்பில் உருவாகும் படம் மட்டுமல்ல. இந்தப் படமாக இருந்தாலும், அதில் என் பொறுப்பும் உண்டு என நினைப்பேன். தியேட்டருக்கு பார்வையாளர்கள் வரும் போது வெறும் இயக்குநருக்காக வரவில்லை. நடிகருக்காகவும் வருகிறார்கள். படம் நல்லா இல்லை என்றால் முதலில் திட்டுவது ஹீரோவை தான். எனவே முதலில் அது என்னுடைய பொறுப்பு தானே. அதனால் தான் என்னுடைய பல படங்கள் வெற்றிப்படமாக இருக்கிறது. இல்லை என்றால் அதன் பாதை மாறிவிடும். இதனால் தான் பெரிய இயக்குநர்களுடன் என்னால் பணியாற்ற முடியவில்லை. அவர்கள் என் பேச்சை கேட்பார்களா என்ற தயக்கம் தான் காரணம்.
இப்படத்தின் க்ளைமாக்ஸ் பற்றி நிறைய விவாதம் எங்களுக்குள்ளேயே நடந்தது. ஒரு விஷயத்தை நியாயப்படுத்தலாம், வேண்டாம் என்ற இரு தேர்வுகள் இருந்தது. பார்வையாளர்களுக்கு இப்படி இருந்தால் பிடிக்கும் என நினைத்து ஒன்றை வைத்தோம். ஆனால் அதுதான் இப்போது நெகட்டிவ் விஷயங்களை பெறுகிறது. அதையும் நாங்கள் கவனித்து படத்தில் இருந்து நீக்கி, அதனை மாற்றி இருக்கிறோம். அந்த க்ளைமாக்ஸ் தான் முதலில் நாங்கள் வைப்பதாக இருந்தோம். இன்றிலிருந்து அந்த க்ளைமாக்ஸ் தான் திரையரங்கில் ஓடும். இப்போதும் நாங்கள் என்ன சொல்ல விரும்பினோமோ அதுவே தான் கிளைமாக்ஸ். ஆனால் 5 நிமிடம் இருந்த காட்சி 2.5 நிமிடமாக மாறியுள்ளது. மேலும் அதை வேறு ஒரு பாத்திரம் சொல்லும் படியாக மாற்றி இருக்கிறோம்" என்றார்.