Mysskin web
கோலிவுட் செய்திகள்

”என் தாய் தந்தைக்குக்கூட இவ்வளவு கடமைப்பட்டதில்லை!” - மிஷ்கின் | Mysskin | Bharathiraja

கலைஞர்கள் எப்போதும் இறப்பதே இல்லை. அவர்கள் இருக்கும் காலம் மட்டுமில்லாமல், அவர்கள் படைப்பின் மூலமாக சாகா வரம் பெறுகிறார்கள்.

Johnson

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான பாரதிராஜா (84), கடந்த சில மாதங்களாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்த நிலையில் இன்று அதிகாலை காலமானார். அவருடைய மறைவுக்கு பிரபலங்களும், அரசியல் பிரமுகர்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அவருக்கு அஞ்சலி செலுத்திவிட்டு பேசிய இயக்குநர் மிஷ்கின், “ஆலமரங்கள் இறப்பதில்லை. தமிழ் சினிமா இந்திப் படங்களையும் பிற மொழிப் படங்களையும் பார்த்து சினிமா செய்த காலங்களில், தமிழ் சினிமாவைத் தமிழ் மண்ணை நோக்கி இழுத்துச் சென்ற, வெளிச்சத்தை காட்டிய ஒரு மாபெரும் கலைஞன். தமிழகத்தில் எல்லோரும் ’அம்மா’ என்று கூப்பிடும்போது ’அப்பா’ என்று கூப்பிட வைத்த ஒரே தந்தை. தமிழனுடைய இதயத்தையும், அன்பையும், நேசிப்பையும் வெளிக்காட்டியவர் எங்கள் அன்பு தந்தை பாரதிராஜா.

Bharathiraja

கலைஞர்கள் எப்போதும் இறப்பதே இல்லை. அவர்கள் இருக்கும் காலம் மட்டுமில்லாமல், அவர்கள் படைப்பின் மூலமாக சாகா வரம் பெறுகிறார்கள். அப்படி சாகா வரம் பெற்ற தந்தை பாரதிராஜா இன்று அமைதியாக ஒரு பெட்டிக்குள் அடங்கி இருக்கிறார்.

ஒரு பெரிய ஆலமரம் அமைதியாகி படுத்திருக்கிறது. அந்த ஆலமரத்திலிருந்து வந்த விழுதுகளாக பாக்யராஜ், பார்த்திபன், நாங்கள் என அந்த மரத்தில் தொற்றிக் கொண்டு சினிமாவைக் கற்றுக்கொண்டு அவர் முன்னே தலைவணங்கி நிற்கிறோம். ஒவ்வொரு முறையும் அவரைப் பார்க்கையில் மின்னல் போன்ற அவரது வேகம், மனதில் இருக்கும் விஷயங்களை மறைக்காமல் பேசுவது என்று எல்லா மணித்துளிகளிலும் அவர் கலைஞனாகவே வாழ்ந்தார்.

Mysskin

என் தாய் தந்தைக்குக்கூட நான் இவ்வளவு கடமைப்பட்டதில்லை. எங்கள் தந்தையார் பாரதிராஜாவுக்கு அவ்வளவு கடமைப்பட்டிருக்கிறேன். எப்படி தாய் தந்தை இல்லாம இந்தப் பூமிக்கு நான் வந்திருக்க முடியாதோ, என் தந்தை பாரதிராஜா இல்லாமல் சினிமா என்ற இந்த ஆகாயத்துக்குள் வந்திருக்க முடியாது. வாழ்நாள் முழுக்க அவருக்கு நன்றியோடு இருக்கிறேன். அவரது கால்களை தொட்டு வணங்குகிறேன்" என்றார்.