தமிழ்நாடு திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், குழந்தை நட்சத்திர அஷ்வத் அஷோக்குமார், 'சூப்பர் டீலக்ஸ்' மற்றும் 'மைடியர் பூதம்' படங்களில் சிறந்த நடிப்புக்கான அங்கீகாரம் கிடைக்காததால் வருத்தம் தெரிவித்தார். நடுவர் குழுவின் பார்வை குறித்த கேள்விகளை எழுப்பிய அவர், தனது திறமையை பார்வையாளர்கள் மதிக்க வேண்டும் எனக் கூறினார்.
2016 - 2022 வரையிலான தமிழ்நாடு அரசு திரைப்பட விருதுகள், சின்னத்திரை விருதுகள் மற்றும் தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர். திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவன மாணவர் விருதுகள் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இவ்விருதுகள் வழங்கும் விழா தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தலைமையில் 13.02.2026 (வெள்ளிக்கிழமை) அன்று சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற உள்ளது. விருது பெற்றவர்கள் நன்றி சொல்லும் அதேவேளையில், இவ்விருதுகளின் மேல் பல கலைஞர்களும் விமர்சனங்களையும் வைக்கின்றனர்.
தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நடித்துவரும் அஷ்வத் அஷோக்குமார், சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான விருது தனக்கு கிடைக்கவில்லை என்ற வருத்தத்தை வீடியோவாக வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் "இப்போது தான் செய்தி எனக்கு தெரிய வந்தது. தமிழ்நாடு திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் சிறந்த குழந்தை நட்சத்திரமாக எனக்கு விருது கிடைக்கும் என நினைத்தேன், ஆனால் இல்லை. 2019ல் வெளியான `சூப்பர் டீலக்ஸ்' படத்தில் ராசுக்குட்டியாக நடித்திருந்தேன். அதற்கு கண்டிப்பாக கிடைக்கும் என நம்பினேன், ஆனால் கிடைக்கவில்லை. சரி அதில் தான் கிடைக்கவில்லை 2022ல் வெளியான `மைடியர் பூதம்' படத்துக்காவது கிடைக்கும் என நினைத்தேன், அதிலும் கிடைக்கவில்லை.
நடுவர் குழுவில் உள்ளவர்கள் இது போன்ற படங்களை பார்க்கிறார்களா இல்லையா என்றே தெரியவில்லை. நடிகர்கள் நடிப்பதற்கான காரணமே, அவர்களுக்கான அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்பதற்காக தான். அது கிடைக்கவில்லை என்றால் நடிப்பதே வீணானதாகிவிடுமே. ஏன் இப்படி அநியாயம் செய்கிறார்கள் என தெரியவில்லை. பார்வையாளர்களாக நீங்கள் கூறுங்கள், இந்த இரண்டு படத்தையும் பாருங்கள், அந்த வயதில், அந்த நடிப்புக்கு மேல் வேறு என்ன தேவை என்று எனக்கு புரியவில்லை." எனப் பேசியுள்ளார்.
2016ம் ஆண்டு `காஷ்மோரா' படத்துக்காக பேபி ஸ்மிர்தி, 2017ம் ஆண்டு `நிசப்தம்' படத்துக்காக வி.சி.சாதன்யா, 2018ம் ஆண்டு `சீதக்காதி' படத்துக்காக கௌதம், 2019ம் ஆண்டு `கேடி என்ற கருப்பு துரை' படத்துக்காக நாகவிஷால், 2020ம் ஆண்டு `கூழாங்கல்' படத்துக்காக செல்லப்பாண்டி, 2021ம் ஆண்டு `ஓ மை டாக்' படத்துக்காக அர்ணவ் விஜய், 2022ம் ஆண்டு `அக்கா குருவி' படத்துக்காக பேபி டாவியா ஆகியோருக்கு சிறந்த குழந்தை நட்சத்திரம் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.