"என் அசிஸ்டென்ட் சட்டையை பிடித்துவிட்டான்.." வைரலாகும் மிஷ்கினின் பேச்சு! | Mysskin
தமிழ் சினிமாவில் கவனிக்கப்படக்கூடிய இயக்குநர்களில் ஒருவர் மிஷ்கின். பல சிறப்பான படங்களை கொடுத்த இவர் இப்பொழுது நடிகராகவும் சில படங்களில் நடித்துவிட்டார். அதேபோல இவரது மேடை பேச்சுகளும் அதிகம் கவரக்கூடியது. அப்படி சில மாதங்களுக்கு முன்பு De Sales International Film & Media Academy நிகழ்வில் பேசிய இவரது பேச்சு இப்போது அதிகம் இணையத்தில் வலம் வந்து கொண்டிருக்கிறது.
அந்த மேடையில் மிஷ்கின் பேசியது இதுதான் "நான் எப்போதும் ஷார்ப்பாக கட் செய்ய ஆசைப்படுவேன். படத்தொகுப்பாளருக்கும் எனக்கும் பெரிய சண்டைகள் எல்லாம் வரும். அதனாலேயே மார்ட்டின் ஸ்கார்ச்சி படங்களை எடிட் செய்யும் போது அவரின் எடிட்டர் தெல்மா ஷூமேக்கர் `மார்ட்டி நீ அறையை விட்டு வெளியே செல்' எனக் கூறிவிடுவாராம். அதற்கு அப்படியே நேர் எதிர் நான். எடிட்டருடன் நான் அமர்ந்து, அவரை டார்ச்சர் செய்துதான் எடிட்டிங் நடக்கும். முடிந்த அளவு புது எடிட்டரை தான் வைத்துக் கொள்வேன். லெனின் மாதிரி ஆட்களிடம் செல்லமாட்டேன். ஏனென்றால் அவர் என்னை வெளியே போ எனச் சொல்லிவிடுவார்.
எது இப்போதைய நடைமுறை என்பதை தெரிந்து கொள்ளவே ரொம்ப நாள் ஆகிறது. இப்போதெல்லாம் 3 மணிநேர படங்களை எல்லாம் பார்க்க ஆடியன்ஸ் தயாராக இல்லை. என்னுடைய படத்தை (டிரெயின்) 2 மணிநேரம் 50 நிமிடங்கள் கட் செய்திருந்தேன். தாணு சார் `தம்பி கொஞ்சம் கம்மி பண்ணி கொடுங்க' என்றார். 2 மணிநேரம் 40 நிமிடங்களாக கட் செய்தேன், என் பசங்க எல்லாம் என்னுடன் சண்டை. மறுபடி இன்னும் கொஞ்சம் கட் பண்ண சொன்னார் என சொன்னேன், என் அசிஸ்டென்ட் சட்டையை பிடித்துவிட்டான். `இல்லடா வைரத்தை இன்னும் தீட்டுவோம் நன்றாக இருக்கும்' எனக் கூறினேன். 2 மணிநேரம் 30 நிமிடங்கள் கொடுத்தேன், அவருக்கு ரொம்ப மகிழ்ச்சி. ஒரு நான்கு நாட்கள் கழித்து இன்னும் கொஞ்சம் கட் பண்ணி கொடுக்க சொன்னார். எனக்கு மிகவும் சோர்வாகிவிட்டது, பசங்களை பார்த்தேன் 'பாத்தீங்களா சார் நாங்கள் சொன்னோமே' என்ற மாதிரி பார்த்தார்கள். எனவே என்னுடைய உதவி இயக்குநர்கள் இல்லாத ஒரு நாளில் எடிட்டரை அழைத்து, 2 மணிநேரம் 23 நிமிடங்களாக சுருக்கினேன். இப்போது படம் மிகவும் கூர்மையாக இருக்கிறது"

