இந்திய திரையுலகின் பிரபல இசையமைப்பாளர் இளையராஜா. இவருக்கு பல்வேறு விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. தற்போது அஜந்தா-எல்லோரா சர்வதேச திரைப்பட விழாவில் பத்மபாணி விருது வழங்கப்பட உள்ளது. ஜனவரி 28 முதல் பிப்ரவரி 4 வரை 11வது அஜந்தா-எல்லோரா சர்வதேச திரைப்பட விழா, மஹாராஷ்டிரா, சத்ரபதி சம்பாஜிநகரில் நடைபெற உள்ளது. எட்டு நாட்கள் நடைபெறும் இந்த விழாவில், கிட்டத்தட்ட 70 படங்கள் திரையிடப்படும் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனவரி 28ஆம் தேதி நடைபெறும் விழாவின் தொடக்க விழாவில், தேசிய மற்றும் சர்வதேச கலைஞர்கள், பல்வேறு துறைகளைச் சேர்ந்த பிரபலங்கள் மற்றும் திரைப்பட ஆர்வலர்கள் முன்னிலையில், இசைக்கலைஞருக்கு விருது வழங்கப்படும் என்று ஏற்பாட்டாளர்கள் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தனர். திரைப்பட விமர்சகர் லத்திகா பட்கோன்கர் (தலைவர்), திரைப்பட தயாரிப்பாளர்கள் அசுதோஷ் கோவாரிகர், சுனில் சுக்தாங்கர் மற்றும் சந்திரகாந்த் குல்கர்னி ஆகியோர் அடங்கிய குழு இளையராஜாவை விருதுக்கு தேர்வு செய்துள்ளது. அவருக்கு பத்மபாணி நினைவுப் பரிசு, கௌரவ கடிதம் மற்றும் ரூ.2 லட்சம் ரொக்கப் பரிசு வழங்கப்படும். இந்த விருதை இதற்கு முன் பாடலாசிரியர் ஜாவேத் அக்தர், மூத்த இயக்குநர்-எழுத்தாளர் சாய் பரஞ்ச்பை மற்றும் நடிகர் ஓம் பூரி உள்ளிட்டோர் பெற்றுள்ளனர்.
7,000க்கும் மேற்பட்ட பாடல்கள், 1,500க்கும் மேற்பட்ட படங்கள் என ஐந்து தசாப்தங்களுக்கும் மேலாக, இசை உலகை ஆள்பவர் இளையராஜா. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி மற்றும் மராத்தி உள்ளிட்ட பல்வேறு இந்திய மொழிகளில் அவர் இசையமைத்த இசை, பெரிய அளவில் பாராட்டுகளை பெற்றுள்ளது. இப்போது இந்த விருது அதில் மேலும் ஒரு பெருமையாக சேர உள்ளது.