அதர்வா, ப்ரீத்தி முகுந்தன், கயாடு லோஹர், ஃபகத் பாசில், ராம்கி, தமன் எனப் பலரும் நடித்துள்ள படம் `இதயம் முரளி'. இப்படம் ஜூலை 10ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், நேற்று இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் பேசிய அதர்வா, "இந்தப் படத்தில் இரண்டு வருடம் பயணித்திருக்கிறோம். பள்ளி மாணவராக நடிக்கையில், பள்ளி மாணவராக மாறினோம், கல்லூரி மாணவராக நடிக்கையில், கல்லூரி மாணவராக மாறினோம். நடித்த அனைவரும் நண்பர்களும் ஆகிவிட்டோம்.
தமன் பெரிய இடைவெளிக்குப் பின் நடித்திருக்கிறார், அதற்கு நன்றி. ப்ரீத்தி முகுந்தன் மற்றும் கயாடு இருவரும் சிறப்பான நடிப்பைக் கொடுத்திருக்கிறார்கள். ’இதயம் முரளி’ மிகவும் மனதுக்கு நெருக்கமான படம். அதற்கு நான் ஆகாஷுக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும். அவர், பல படங்களைத் தயாரித்தாலும், அவருக்கு மிகவும் பிடித்தமானது என்ன என எனக்குத் தெரியும். இதில், இத்தனை நடிகர்கள் இருக்கிறோம் என்றால், அதற்குக் காரணம் ஆகாஷ்தான். படத்துக்கு ஒரு நல்ல ஒளிப்பதிவாளர் கிடைத்தாலே, சிறப்பான ஒளிப்பதிவு கிடைக்கும். இந்தப் படத்தில் மனோஜ் சார் மற்றும் சாய் என இருவர் கிடைத்திருக்கிறார்கள். இந்தப் படம் கண்டிப்பாக அனைவருக்கும் பிடிக்கும் என நம்புகிறேன். குடும்பத்தோடு படத்தைப் பாருங்கள்" என்றார்.