Sasikumar My Lord
கோலிவுட் செய்திகள்

"அறிமுக இயக்குநர், தோல்விப்பட இயக்குநருடன் பணியாற்றுவது.." - சசிகுமார் சொன்ன பதில் | Sasikumar

நான் வெற்றிப்பட இயக்குநருடன் இணைந்து பணியாற்றியது ஒரே முறைதான். `நாடோடிகள்' பட வெற்றிக்குப் பிறகு `போராளி' படத்தில் சமுத்திரக்கனி இயக்கத்தில் நடித்தேன்.

Johnson

சசிகுமார், சைத்ரா நடிப்பில் ராஜூ முருகன் இயக்கியுள்ள படம் `மை லார்ட்'. இப்படம் பிப்ரவரி 13ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்தப் படத்தின் புரமோஷனுக்காக பேட்டிகளை அளித்து வருகிறது படக்குழு. அப்படியான ஒரு பேட்டியில் நிறைய புதுமுக மற்றும் தோல்விப்பட இயக்குநர்களுடன் பணியாற்றியது குறித்து பேசியுள்ளார் சசிகுமார்.

My Lord

அந்தப் பேட்டியில், ’ஓர் இயக்குநருடன் பணியாற்றலாம் என்ற முடிவை எடுக்கும்போது, அவரின் முந்தைய படங்கள், அதன் ரிசல்ட் என்ன என்று யோசிப்பது உண்டா’ என்ற கேள்வி கேட்கப்பட, அதற்குப் பதிலளித்த சசிகுமார், "நான் நடித்த படங்களை இயக்கியவர்கள் பெரும்பாலும் புதுமுகம், இல்லை என்றால் தோல்வியடைந்த இயக்குநர்கள். நான் வெற்றிப்பட இயக்குநருடன் இணைந்து பணியாற்றியது ஒரே ஒருமுறைதான். `நாடோடிகள்' பட வெற்றிக்குப் பிறகு `போராளி' படத்தில் சமுத்திரக்கனி இயக்கத்தில் நடித்தேன். அது தவிர மற்ற அனைத்துப் படங்களும் அப்படிதான் செய்திருக்கிறேன். 15 வருடங்களுக்கு முன்பு, `10 இயக்குநரையாவது அறிமுகப்படுத்த வேண்டும் என நினைக்கிறேன்' என்று ஒரு பத்திரிகையில் நான் எழுதி இருப்பேன்.

பின்னர் சமுத்திரக்கனி இயக்கத்தில் நடித்துக் கொண்டிருந்த சமயத்தில், `ஏன் தோல்வி இயக்குநருடன் இணைந்து பணியாற்றுகிறீர்கள்’ எனக் கேள்வி கேட்டார்கள். அதற்கு, `நான் ஒரு டுடோரியல் கல்லூரி வைத்திருக்கிறேன், இங்கு தோல்வியடைந்தவர்கள்தான் வருவார்கள். பாஸ் ஆனவர்கள் வேறு கல்லூரிதான் செல்வார்கள். டுடோரியல் கல்லூரிக்கு ஃபெயில் ஆனவர்கள்தான் வருவார்கள்' என்றேன்.

Sasikumar

அந்த வாய்முகூர்த்தம் பலித்ததோ, என்னவோ அப்படித்தான் இப்போது வரை நடந்துள்ளது. நான் வெற்றி தோல்வி என்றெல்லாம் பார்ப்பதில்லை, கதைதான் முக்கியம். ஒரு படம்தான் தோல்வியடையுமே தவிர, இயக்குநர் தோற்பது கிடையாது. எனவே, நான் அவரது முந்தைய படம் பற்றி சிந்திப்பது கிடையாது, இந்தக் கதை எனக்கு பிடித்திருக்கிறதா என்பதையே பார்ப்பேன்" என்றார்.