Kasthuri Raja Dhanush, Selvaragan
கோலிவுட் செய்திகள்

தனுஷ் படம்னா நடிப்பேன், செல்வா படம்னா நோ சொல்வேன்! - கஸ்தூரிராஜா சொன்ன கலகல சம்பவம்

நான் இயக்குநராக இருந்த போது நடிப்பு சுலபம் என நினைத்தேன். ஆனால் இப்போதுதான் நடிப்பு எவ்வளவு கஷ்டம் என தெரிகிறது. இயக்குநருக்கு தேவையான விஷயத்தை கொடுக்க வேண்டும் என்ற ஈடுபாடு இருப்பதால், தொடர்ந்து நடிப்பேன்.

Johnson

73 வயதிலும் நடிப்பைத் தொடங்கிய கஸ்தூரிராஜா, ‘ஹபீபி’ படம் தன்னை பல இடங்களில் அறிமுகப்படுத்தி, பாராட்டு விழாக்களில் ரசிகர்கள் கையைப் பிடித்து அழுதபடி வாழ்த்தியதாக கூறுகிறார். சினிமாவைத் தவிர வேறு எதுவும் தெரியாது எனும் அவர், இனி ஓய்வு இல்லாமல் அழுத்தமான கதாபாத்திரங்களில் நடிக்க விரும்புவதாகவும், பேரன்களும் நடிப்பில் வருவதாகவும் கூறினார்.

மீரா கதிரவன் இயக்கத்தில் கஸ்தூரிராஜா நடித்து வெளியான `ஹபீபி' படம் சமீபத்தில் வெளியானது. இப்படத்துக்கு கிடைத்த வரவேற்புக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக செய்தியாளர்களை இன்று சந்தித்த கஸ்தூரிராஜா "தமிழ் சினிமாவில் என்னை ஒரு இயக்குநராக தெரியும். தனுஷ், செல்வராகவனின் அப்பாவாக தெரியும். ஆனால் ஒரு நடிகர் என என்னை தெரிய வைத்ததற்கு ஹபீபி தான் காரணம். அந்தப் படம் என்னை பல இடங்களில் கொண்டு சேர்த்திருக்கிறது, பல பாராட்டு விழாக்களும் நடக்கின்றன. என் கையை பிடித்து அழுது கொண்டே பலர் பேசுகிறார்கள். 25 படங்கள் இயக்கிவிட்டேன், பிள்ளைகளை நல்ல நிலைக்கு கொண்டு வந்துவிட்டேன் இனி ஓய்வு எடுக்கலாம் என நினைத்தேன். அந்த நேரத்தில் என்னை தேடி வந்த படம் தான் இது. இனிமேல் என்ன படங்கள் என்னை தேடி வரும் என ஆவலோடு காத்திருக்கிறேன்.

Kasthuri Raja

நான் சினிமாவுக்கு வந்து 48 வருடங்கள் ஆகிவிட்டன. இந்த 48 வருடங்கள் ஒரு வாழ்க்கை, ஹபீபிக்கு பிறகு இன்னொரு வாழ்க்கை என்று தான் பார்க்கிறேன். சசிக்குமார் நடிக்கும் `எவிட்னஸ்', `DC' படத்தில் லோகேஷ் கனகராஜ்க்கு அப்பாவாக நடித்திருக்கிறேன். இன்னொரு படம் பேச்சுவார்த்தையில் இருக்கிறது. இனி ஓய்வில்லாமல் நடிக்கலாம் என நினைக்கிறேன். அதுவும் அழுத்தமான பாத்திரங்களை தேர்வு செய்து நடிக்க இருக்கிறேன். ஒரு இயக்குநர் நினைத்த விதத்தில் நாம் நடிப்பை கொடுப்பது பெரிய விஷயம். நான் இயக்குநராக இருந்த போது நடிப்பு சுலபம் என நினைத்தேன். ஆனால் இப்போதுதான் நடிப்பு எவ்வளவு கஷ்டம் என தெரிகிறது. இயக்குநருக்கு தேவையான விஷயத்தை கொடுக்க வேண்டும் என்ற ஈடுபாடு இருப்பதால், தொடர்ந்து நடிப்பேன். எனக்கு சினிமாவை விட்டால் வேறு எதுவும் தெரியாது. என்னுடைய பேரன்கள் கூட நடிக்க வருகிறார்கள். ஆனால் அதைவிட பெரிய விஷயம் 73 வயதிலும் நான் நடிக்க வந்திருப்பது."

தனுஷ் இயக்குநராகவும் இருக்கிறார் அவர் படத்தில் நடிக்க அழைத்தால் நடிப்பீர்களா? எனக் கேட்கப்பட "அவர் தேசிய விருது பெற்ற இயக்குநர் அவர் அழைத்தால் போகாமல் இருப்பேனா, போவேன். ஆனால் செல்வராகவன் அழைத்தால் போவேனா என்பது சந்தேகம், அவர் மிகவும் கொடூரமாக நடத்துவார். அவருக்கும் எனக்கும் செட் ஆகவில்லை. புதுப்பேட்டையில் DGP பாத்திரம் கொடுத்தார். எனக்கு வைக்கப்பட்ட க்ளோஸ் அப் காட்சியில் எனக்கு சரியாக நடிக்க வரவில்லை. தனுஷை என்கவுண்டர் செய்யும் DGP பாத்திரம் என சொன்னதும், செண்டிமெண்டாக எது எனக்கு பிடிக்கவில்லை என்பதால் படத்திலிருந்து விலகிக் கொண்டேன். பின்னர் படத்திலேயே அந்த பாத்திரம் இல்லாமல் போய்விட்டது." என்றார்.