நிவேதிதா சதீஷ், சினிமாவில் இருந்து விலக நினைத்தபோது, 'ஓ பட்டர்ஃப்ளை' படத்தின் கதாபாத்திரம் அவருக்கு புதிய நம்பிக்கையை அளித்தது. 'கேப்டன் மில்லர்' படத்தின் கடினமான அனுபவத்திற்குப் பிறகு, இந்த புதிய படம் அவருக்கு மனநிறைவை அளித்தது.
ஜோதிகா நடித்த `மகளிர் மட்டும்' படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் நிவேதிதா சதீஷ். அதன் பின்னர் `சில்லுக்கருப்பட்டி', `செத்தும் ஆயிரம் பொன்', `உடன்பிறப்பே', `கேப்டன் மில்லர்' எனப் பலப் படங்களில் நடித்துள்ளார். இவர் தற்போது நடித்துள்ள `ஓ பட்டர்ஃப்ளை' படம் மார்ச் 6ம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு சமீபத்தில் நடைபெற்றது.
அதில் பேசிய நிவேதிதா சதீஷ் "கேப்டன் மில்லர் படம் உடல்ரீதியாகவும் உணர்வு ரீதியாகவும் மிகவும் கடினமான படம். கிட்டத்தட்ட 1 வருடம் அந்த படத்தில் பணியாற்றி நிறைய கற்றுக்கொண்டேன். ஆனால் நான் எதிர்பார்த்த பலன் எனக்கு கிடைக்கவில்லை என்று தோன்றியது. சினிமா நமக்கு சரிப்பட்டு வருமா அல்லது வேறு ஒரு துறையில் கவனம் செலுத்தலாமா, ஏன் நாம் இதில் நேரத்தை வீணடிக்கிறோம் என்று தோன்றியது. சினிமாவில் இருந்து சிறிது காலம் விலகி இருக்கலாம் என்று நினைத்தேன். அந்த சமயத்தில் தான் ஓ பட்டர்ஃப்ளை படம் எனக்கு வந்தது. நான் இதுவரைக்கும் கேட்ட நரேஷன்களில் அது சிறப்பாக இருந்தது. இந்தக் கதையை சொல்வதே மிகவும் கடினமான ஒன்று. ஆனால் அவ்வளவு அழகாக அந்த கதையை கூறினார் விஜய். மிகவும் ஆழமான ஒரு கதாபாத்திரம். நான் வாழ்க்கையில் அப்போது இருந்த நிலைமையும், இந்தப் பாத்திரத்தின் தன்மையும் ஒரே மாதிரி இருந்தது.
இந்த படம் பண்ணலாம் என்று முடிவு எடுத்த பிறகு நிறைய ரிகர்சல் செய்தோம். படம் ஆரம்பிக்கலாம் என கிளம்பும்போது எனக்கு ஒரு அறுவை சிகிச்சை இருந்தது. அப்போது மறுபடி இந்த வேலையை நாம் தொடர வேண்டுமா என்ற கேள்வி வந்தது. படக்குழு நினைத்து இருந்தால் வேறு நடிகையை கமிட் செய்திருக்கலாம், ஆனால் எனக்காக காத்திருந்தனர். என்னுடைய தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குநருக்கு நன்றி. இந்த படம் ஒரு புதிய ஜானரில் உருவாகியுள்ளது. இந்த படம் மனித உணர்வுகள் பற்றி பேசுகிறது. இந்த படத்தை பார்த்து வெளியே வரும் போது நல்ல ஒரு மனதுடன் வெளியே வருவீர்கள் என்று நம்புகிறேன்." என்றார்.