சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா நடித்துள்ள படம் `பராசக்தி'. சிவகார்த்திகேயனின் 25வது படமாக உருவாகியுள்ள இப்படம் ஜனவரி 10ம் தேதி வெளியாகவுள்ளது. படத்தின் புரமோஷனாக வள்ளுவர் கோட்டத்தில் படத்தின் செட் வைக்கப்பட்டு நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், சமீபத்தில் இயக்குநர் சுதா அளித்த பேட்டி ஒன்றில் படம் பற்றி பல விஷயங்களை பகிர்ந்திருந்தார். மேலும் ரஜினிகாந்துக்கு ஒரு கதை வைத்திருப்பதாக அவர் கூறிய பதில் வைரலானது.
அந்தப் பேட்டியில் நீங்க எப்போது முழு காதல் கதையை இயக்குவீர்கள் எனக் கேட்கப்பட "அந்தக் கதையைத்தான் நான் சிவாவிடம் முதலில் கூறினேன். அதேபோல என் நெருங்கிய தோழி அஞ்சலி மேனன் ஒரு கதையை எழுதினார், பின்பு தூக்கி எறிந்தார், பிறகு மீண்டும் எழுதுகிறார். அவர் எனக்காக ஒரு காதல் கதை எழுதி வருகிறார். இவை இல்லாமல், தெலுங்கில் ஒரு நாவல் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அதுவும் முழுக்க முழுக்க ஒரு காதல் கதை தான். எனக்கு காதல் கதைகள் மிகவும் பிடிக்கும். அப்படியான படங்கள் எடுக்க தான் எனக்கு ஆசை.
ஒரு பெரிய ஹீரோவை வைத்து ஒரு காதல் படம் செய்ய வேண்டும் என்பதுதான் என் ஆசை. அது ரஜினி சார். அவரை வைத்து ஒரு முதல் மரியாதை போன்ற படத்தை எடுக்க வேண்டும் என பெரிய ஆசை உள்ளது. அது எனது நீண்ட கால ஆசை. அதற்கான கதையும் என்னிடம் இருக்கிறது, அது இன்னும் கொஞ்சம் முழுமை பெற எழுத வேண்டும். எனக்கு காதல் கதைகள் செய்ய வேண்டும், எல்லா விதமான கதைகளும் செய்ய வேண்டும். சீக்கிரமே சினிமாவில் இருந்து ஓய்வு பெற வேண்டும். நான் மிகவும் சோர்வடைந்துவிட்டேன்" என்றார்.