நடிகர் தனுஷ் சமீபத்தில் நடைபெற்ற துபாய் வாட்ச் வீக் ( Dubai Watch Week) என்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டிருக்கிறார். அந்த நிகழ்வில் தனுஷிடம் சில கேள்விகளை தொகுப்பாளர் கேட்க அதற்கு பதில் அளித்தார்.
உங்கள் குடும்பம் சினிமா பின்புலம் கொண்டதாக இருந்தும், உங்களுக்கு செஃப் ஆக தான் விருப்பம் என கூறி இருந்தீர்களே. அது ஏன்? பின்பு அந்த எண்ணம் எப்படி மாறியது?
"சிறுவயதில் இருந்தே நான் சினிமா உலகில் இருந்து தள்ளியே இருந்தேன். என் அப்பா எப்போதும் பிஸியாக இருந்தார். அவருடன் என்னால் நேரம் செலவிட முடிந்ததில்லை. சில காரணங்களால் எனக்கு சினிமா மீது ஆர்வம் இல்லை. ஆனால் எனக்கு சமையல் என்பது ஒரு கலை என்ற எண்ணம் எப்போதும் இருந்தது. நான் 12 வயது சிறுவனாக இருந்த போது, ஆம்லெட் செய்து என் தந்தைக்கு கொடுத்தேன். அவர் சாப்பிட்டு இன்னொன்று கேட்டார். அதை எனக்கான அங்கீகாரமாக எடுத்துக் கொண்டேன். அன்று நான் செஃப் முடிவு செய்தேன், ஆனால் ஆகவில்லை. இன்று நான் இருக்கும் இடத்தை நினைக்கையில், நான் ஆசிர்வதிக்கப்பட்டவனாக உணர்கிறேன். ஆனாலும் எனக்குள் செஃப் ஆகவில்லையே என்ற ஏக்கம் ஒரு சிறிய பொறியாக உறுத்துகிறது"
உங்களுக்கு முதன் முதலில் பிடித்த வாட்ச் எது?
"நான் காதல் கொண்ட ஒரு வாட்ச் என்றால், என்னுடைய அம்மா முதன் முதலில் எனக்கு வாங்கி கொடுத்த அந்த வாட்ச் தான். ஸ்கூல் படிக்கும்போது அந்த வாட்ச்சை அம்மா எனக்கு வாங்கி கொடுத்தார். அதன் விலை ஒரு டாலரை குறைவானது தான். அதற்கு பெயர் எல்லாம் கிடையாது. அது ஒரு பிளாஸ்டிக் வாட்ச். டிஜிட்டலில் நேரம் காட்டும். அதில் லைட் எரியும். பேட்டரி ரொம்ப சின்னதாக இருக்கும். நான் எளிய பின்னணியில் இருந்து வந்தவன் தான். அந்த பேட்டரி முடிந்துவிட்டால் வாட்ச் வேலை செய்யாது. அந்த வாட்சில் நிறைய கலர்கள் இருக்கும். நானும் எனது அக்காக்களும் ஊதா, மஞ்சள் என மாறி மாறி கட்டிக்கொள்வோம்.
பேட்ரி முடிந்து வாட்ச் வேலை செய்யவில்லை என்றாலும், அந்த வாட்ச்சை நான் கட்டிக்கொண்டு ஸ்கூலுக்கு செல்வேன். அந்தளவிற்கு எனக்கு அந்த வாட்ச் பிடிக்கும். இன்னும் அந்த வாட்ச்சை நான் பத்திரமாக வீட்டில் வைத்திருக்கிறேன். அது இப்போது வேலை செய்யாதுதான், ஆனாலும் வைத்திருக்கிறேன். இப்போது வரைக்கும் எனக்கு பிடித்த, மறக்க முடியாத ஒரு வாட்ச் என்றால் அதுதான். மனிதர்கள் வளரும் போது முதலில் அவர்களுக்கு வீடியோ கேம் பிடிக்கும், பின்பு கார்கள் பிடிக்கும், குறிப்பிட்ட வயதுக்கு பிறகு உண்மையான காதலை நாம் உணர்வது போல தான், வாட்ச் மீது பிரியம் வைப்பதும்"
உங்களுடைய பாடல் இன்னும் என்னுள் ஒலித்துக் கொண்டிருக்கிறது. அதை எழுதும் போது, அது இவ்வளவு பெரிய வரவேற்பு பெரும் என நினைத்தீர்களா?
"நேர்மையாக சொல்வதென்றால், இல்லை. அதை ஒரு ஜோக்காக நினைத்து செய்தோம். நாங்கள் வேறொரு பாடலை உருவாக்கி கொண்டிருந்த போது இந்த ஐடியா (கொலவெறி) வந்தது. சிறிது நேரம் அதில் பணியாற்றி பிறகு வேண்டாம் என தூக்கி ஓரமாக வைத்துவிட்டோம். பிறகு ஒரு நாள் சேவ் செய்து வைத்திருந்த Why This Kolaveri d பாடலை ஓப்பன் செய்து கேட்டோம். இது Funny ஆக இருக்கிறது என தோன்றியது. மேலும் Funnyயான விஷயம் எப்போதும் வரவேற்பு பெரும் என என் இசையமைப்பாளரிடம் சொன்னேன். எனவே அதில் பணியாற்றினோம். அந்தப் பாடல் பொறுத்தவரை நான் எதிர்பார்த்தது உள்ளூரில் அது வெற்றியடையும் என்பது தான்.
நான் தமிழ்நாட்டில் இருந்து வருகிறேன். நாங்கள் தமிழ் பேசுவோம். தமிழ் உலகின் பழமையான மொழிகளுள் ஒன்று. ஆனால் அந்தப் பாடல் தமிழில் இருக்காது, தங்கிலீஷில் எழுதினோம். அப்படித்தான் பாடல் உருவானது. அந்தப் பாடலில் இருந்து நான் தப்பித்து ஓட நினைக்கிறேன். ஆனால் அது என்னை துரத்தி வந்து கொண்டே இருக்கிறது. பாடல் வெளியாகி பத்து ஆண்டுகள் கடந்து விட்டது. ஆனாலும் அதனிடம் நான் தோற்றுக் கொண்டே இருக்கிறேன். இந்திய சந்தையில் வைரல் மார்க்கெட்டிங் என்ற விஷயத்தை Re define செய்தது அந்தப் பாடல். Kolaveri dக்கு பிறகு தான் வைரல் பற்றிய புரிதல் எங்களுக்கு கிடைத்தது. அதனை உருவாக்கியதில் பெருமை கொள்கிறேன். அதே சமயம் அது எவ்வளவுக்கு வரமோ, அதே அளவில் சாபமும் கூட"
நீங்கள் அடுத்து வாங்க விரும்பும் வாட்ச் எது?
" `FP Journe Francis Ford Coppola' எடிஷன் வாட்ச் இருக்கிறது. அதில் முள் இருக்காது ஒரு கை மட்டும் இருக்கும். அது வினோதமான முறையில் நேரம் காட்டும், அதை முதலில் பயில வேண்டும். ஆனால் அது மிக அழகான ஒன்று. அதை வாங்க வேண்டும்" எனக் கூறியதும் இன்னொரு விருந்தினர் Kevin O'Leary "அந்த வாட்ச் வகையில் முதல் முதலில் உருவாக்கப்பட்ட பீஸ், டிசம்பர் 6ம் தேதி நியூயார்க்கில் ஏலத்திற்கு வருகிறது" எனக் கூற "அதில் நான் கலந்து கொள்ள இன்னும் 10 வருடங்கள் உழைக்க வேண்டும்" என்றார் தனுஷ்.