‘கருப்பு’ குறித்து விமர்சகர்கள் மக்களின் மனநிலையிலிருந்து விலகி உள்ளதாக ஆர்.ஜே. பாலாஜி குற்றம்சாட்டுகிறார். படம் பிடித்ததாக சொல்வோரை விமர்சகர்கள் கேலி செய்வது தவறு என அவர் கூறி, பார்வையாளர்களின் பிணைப்பை மதிக்க வேண்டும் என வலியுறுத்துகிறார். 99% மக்களுக்காக எடுத்த இந்த படத்தை 1% விமர்சனங்கள் பாதிக்காது, ஆனால் விமர்சகர்களை மதிக்கிறேன் என்றும் அவர் விளக்குகிறார்.
சூர்யா நடிப்பில் ஆர்.ஜே.பாலாஜி இயக்கியுள்ள படம் `கருப்பு'. இப்படத்தில் த்ரிஷா, ஸ்வாசிகா, ஷிவதா, இந்திரன்ஸ் எனப் பலர் நடித்துள்ளனர். மே 15ம் தேதி வெளியான படத்துக்கு வசூலும், வரவேற்பும் மிக பெரிய அளவில் கிடைத்துள்ளது. விமர்சன ரீதியாக கலவையான விமர்சனங்களே கிடைத்துள்ளது.
இது குறித்து சமீபத்திய நேர்காணலில் பேசிய இயக்குநர் ஆர் ஜே பாலாஜி "முதல் முறையாக எனக்கு விமர்சகர்களிடம் இருந்து எந்த அங்கீகாரமும் தேவை இல்லை என உணர்ந்தேன். நான் அவற்றை பார்க்கவும் இல்லை. 98 சதவீத தமிழ்நாட்டு மக்கள் இந்தப் படத்தை கொண்டாடுகிறார்கள். ஆனால் விமர்சகர்கள் இந்த முறை மக்களின் மனநிலையில் இருந்து முற்றிலும் வேறுபட்டு இருக்கிறார்கள். நான் கிரிக்கெட் வர்ணனனையும் செய்கிறேன். ஒரு நாள் அதற்கு நான் போகவில்லை என்றால், ஏன் நேற்று வரவில்லை என கேட்கிறார்கள். ஏனென்றால் என்னுடைய வேலை அவர்களுக்கு நெருக்கமான ஒன்றாக மாறி இருக்கிறது. அதேவேளையில் சமூக வலைத்தளங்களில் அதனை விமர்சிக்கவும் செய்வார்கள். அந்த ஒரு சதவீதத்தினர் என்னை பாதிப்பதில்லை.
இந்தப் படத்தை பொறுத்தவரை, விமர்சகர்கள் பொது சிந்தனையோடு ஒத்து போகவில்லை என்பது ஒருபுறம், படம் பிடித்திருக்கிறது என சொல்பவர்களை அவர்கள் திட்டுகிறார்கள். ஓ இதை கூட நீ ரசிக்கிறாயா என்பது போல் பேசுகிறார்கள். என்னை பொறுத்தவரை பார்வையாளர்களை மிகவும் மதிக்க வேண்டும். அவர்களுக்கு இந்தப் படம் மீது ஒரு பிணைப்பு ஏற்பட்டு தான் பிடித்திருக்கிறது. அதை நீங்கள் நிராகரிப்பதோ, இந்தப் படம் பிடித்திருக்கிறது என சொல்வதை எதிர்ப்பதோ சரி அல்ல. எனக்கு விமர்சகர்கள் மீது பெரிய மதிப்பு உண்டு.
சில மாதங்கள் கழித்து அவர்களின் விமர்சனங்களை பார்த்து, நான் என்னுடைய தவறுகளை திருத்திக் கொள்வேன். ஆனால் இந்தப் படம் பார்வையாளர்களுக்கு மட்டும் தான் என்பது முன்பே தீர்மானிக்கப்பட்டது. முழுப்படத்தையும் பார்வையாளர்கள் நின்று கொண்டே பார்த்ததை நான் ஆச்சர்யமாக உணர்ந்தேன். என்னுடைய படத்திற்கு இப்படி நடக்கிறது என வியப்பாக இருந்தது. நான் இந்தப் படத்தை 99 சதவீத மக்களுக்காக எடுத்தேன். அவர்கள் கொண்டாடுகிறார்கள். படத்தை குறை சொல்லும் அந்த 1 சதவீதத்தினரை இப்போதைக்கு நான் கவனிக்கப் போவதில்லை, அதேநேரம் மதிக்காமலும் இருக்கப்போவதில்லை." என்றார்.