விஷ்ணு விஷால், ஐஸ்வர்ய லெஷ்மி நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் `கட்டா குஸ்தி 2'. இப்படம் சிறப்பு குழந்தைகளுக்காக ரோகிணி திரையரங்கில் இன்று திரையிடப்பட்டது. இதில் கலந்து கொண்ட விஷ்ணு விஷால் செய்தியாளர்களை சந்தித்தார். அதில் "தமிழ் சினிமாவில் கொண்டாடப்படும் படமாக `கட்டா குஸ்தி 2' மாறியுள்ளது. ஆனால் TVKயை சேர்ந்த ஒரு நபர் மட்டும் தவறாக பேசி இருக்கிறாரே, அதை நீங்கள் பார்த்தீர்களா? உங்கள் கருத்து என்ன?" எனக் கேட்கப்பட்டது.
விஷ்ணு விஷால் அதற்கு பதில் அளித்த போது "அதை நான் பார்த்தேன் கஷ்டமாக இருந்தது என்பதை மட்டும் தான் சொல்வேன். அதை பற்றி விவரமாக பேசி, இதை ஒரு அரசியலாக்க நான் விரும்பவில்லை. படம் மக்களுக்கு பிடித்திருக்கிறது. இதற்கு முன்பு நான் சமூக வலைத்தளங்களில் உள்ள வன்மத்தை பற்றி நான் பேசி இருக்கிறேன். இப்போதும் சொல்கிறேன், ஆன்லைன் வன்மம் எனக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. அதற்கு எதிராக நாம் நிற்க வேண்டும். இந்த முறை நான் நின்றேன், இனிமேலும் நிற்பேன். ஒருவரை குறிவைத்து தாக்குவது சமூகத்திற்கே கேடானது.
நான் ரெட் ஜெயண்ட்டை ஒரு சினிமா நிறுவனமாக மட்டும் தான் பார்க்கிறேன். அவர்கள் சினிமா தயாரிப்பு மற்றும் விநியோகம் செய்கிறார்கள். அவர்கள் எனக்கு 2013ல் இருந்து பழக்கம். 13 ஆண்டு கால நட்பு. என்னுடைய அனுபவம் மிகவும் அன்பானதாக தான் இருந்தது. அதனால் இந்தப் படத்தை அவர்கள் மூலமாக வெளியிட திட்டமிட்டேன். திரும்பவும் சொல்கிறேன் இதை அரசியலாக மாற்றாதீர்கள்." என்றார்.