விஜய் சேதுபதி, 'முத்து என்கிற காட்டான்' வெப் சீரிஸின் புரமோஷனில், 'மெரி கிறிஸ்மஸ்' போன்ற படங்கள் வெளியான போது பாராட்டப்படாதது வேதனை என்கிறார். படம் வெளியான சமயத்தில் பாராட்டப்படாமல், பின்னர் பாராட்டுவது உண்மையான மகிழ்ச்சியை தராது என அவர் கூறினார். இது அவருக்கு மிகுந்த மனவேதனையை ஏற்படுத்துகிறது.
விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள சீரிஸ், `முத்து என்கிற காட்டான்' வெப் சீரிஸ். `ஆண்டவன் கட்டளை', `கடைசி விவசாயி' படங்களுக்குப் பிறகு இந்த சீரிஸ் மூலம் நடிகர் விஜய் சேதுபதி மற்றும் இயக்குநர் M. மணிகண்டனின் மேஜிக் கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது. மணியுடன் இணைந்து அஜித்குமார் இதனை இயக்கியுள்ளார். மார்ச் 27ம் இந்த சீரிஸ் ஜியோ ஹாட்ஸ்டாரில் வெளியாகவுள்ள நிலையில், அதன் புரமோஷனுக்கு பேட்டிகளை அளித்து வருகிறார் விஜய் சேதுபதி.
அப்படியான பேட்டி ஒன்றில் `மெரி கிறிஸ்மஸ்' போன்ற நீங்க நடித்த சில படங்கள் அப்போது வெற்றி அடையாத போது என்ன தோன்றும் எனக் கேட்கப்பட "ஒரு படம் வெளியான போது கொண்டாடப்படாமல், சில காலம் கழித்து பாராட்டப்படுவது வேதனையானது. பசியில் இருக்கும் போது சோறு போடாமல், பத்து நாள் கழித்து சோறு போட்டுவிட்டு, பத்து நாள் கழித்தாவது சோறு கிடைத்ததே என சொல்லக்கூடாது. பத்து நாட்கள் உயிரோடு இருக்க போராடி 8வது நாளில் நான் இறந்துவிட்டால் என்ன செய்வீர்கள்? நன்றாக இல்லை என்றால் அது வேறு. நன்றாக இருந்தது ஆனால் அன்று பாராட்ட தவறிவிட்டேன் என சொல்வது ரொம்ப பெரிய வேதனை. மேலும் இதில் சரியாக விளம்பரம் செய்யவில்லை, பெரிய படம் போட்டியாக வந்தது என என்ன காரணம் சொன்னாலும் போனது போனதுதான். எனவே தாமதமாக பாராட்டுவதால் பெரிய சந்தோசம் எதுவும் கிடைக்காது.
மெரி கிறிஸ்மஸ் படம் மேல் பெரிய நம்பிக்கை இருந்தது. ஸ்ரீராம் ராகவன் சார் அந்தப் படத்தை நூற்றுக்கணக்கான ஆட்களுக்கு போட்டுக் காண்பித்தார். எல்லோரும் அந்தப் படத்தை கொண்டாடினார்கள். இப்போதும் அந்தப் படத்தை பாராட்டுவார்கள் இருக்கிறார்கள். பல முறை பார்த்தேன் என சொல்பவர்களும் இருக்கிறார்கள். ஆனால் வெளியான போது அந்தப் படம் பெரிய அளவில் வரவேற்கப்படாதது வருத்தம். எனக்கு அது மிகவும் பிடித்த படம். ஒவ்வொரு விஷயத்தையும் அவர் பார்த்து பார்த்து பணியாற்றுவார். அவருடன் பணியாற்றியது மிகவும் சுகமாக இருந்தது." என பதில் அளித்தார் விஜய் சேதுபதி.