தெலுங்கு சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர் தமன். பல முன்னணி இயக்குநர்களின், நடிகர்களின் படங்களில் இவரே பணியாற்றுகிறார். இவர் சமீபத்தியில் அளித்த பேட்டியில், அவர் மேல் காப்பி அடிக்கிறார் என்ற விமர்சனம் இருப்பது பற்றிய கேள்வி கேட்கப்பட்டது. அதற்குஒ பதில் சொன்ன தமன், "எனக்கு காப்பி அடிக்கத் தெரியாது. அதனால்தான் மாட்டிக் கொள்கிறேன். இன்ஸ்பிரேஷன் சரி. ஆனால், சிலர் அப்பட்டமாக காப்பி அடிப்பார்கள். அப்படி காப்பி அடித்தவர்கள் காலத்தில் யூடியூப், எக்ஸ், இன்ஸ்ட்டா எல்லாம் இல்லை. இப்போது நாம் எங்கிருந்தாவது இன்ஸ்பையரானால் அதை நான் சரியாக செய்யவில்லைபோல. அதனால் அப்படியே வந்துவிடுகிறது.
இப்போதுள்ள மேம்பட்ட மென்பொருட்கள் எல்லோரிடம் உள்ளது. ஒரே சவுண்டை எல்லோராலும் தயாரிக்க முடியும். எனவே அதிலிருந்து யார் புதுமையாகச் செய்கிறார்கள் என்பதையே பார்க்க வேண்டும். நாம் உருவாக்கும் இசையை ’சஷாம்’ என்ற செயலியில் பதிவேற்றினால், அதனை வேறு யாரும் பயன்படுத்தி இருக்கிறார்களா எனச் சொல்லிவிடும், சிலமுறை காட்டாது. பாடல் வெளியானபிறகு வேறு யாராவது பயன்படுத்தி இருப்பது தெரியவரும். அதை யாராவது பின்னர் குறிப்பிடுவார்கள்.
சில சமயம் வேறு மாதிரிகூட நடக்கும். `பிசினஸ்மேன்' படத்தில் Pilla Chao பாடலை Bella Ciao பாடல் மாதிரியே வேண்டும் என இயக்குநர் பூரி ஜெகன்நாத் கேட்டதால், அப்படி செய்து கொடுத்தேன். படத்தின் மற்ற பாடல்களைப்போடத் தெரிந்த எனக்கு இந்தப் பாடலை மட்டும் காப்பி அடிக்க வேண்டிய அவசியம் என்ன இருக்கிறது?
ஆனால் அப்போது ட்ரோல் பற்றி எல்லாம் நான் யோசிக்கவில்லை. பார்த்தால் அது செய்திகளில்கூட வந்தது. அப்போதுதான் நாம் முக்கியமான இடத்தில் இருக்கிறோம், இன்னும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என புரிந்தது" என்றார்.