Ilaiyaraaja 50 Years of Ilaiyaraaja
கோலிவுட் செய்திகள்

என்னை இசைக்கடவுளாக பார்ப்பவர்கள் பார்த்துக்கொள்ளட்டும்! - இளையராஜா | Ilaiyaraaja 50

சுத்தமான இடத்தில் இருந்து அந்த ஸ்வரங்கள் பிறக்கின்றன. என் மனதில் இசையமைக்கையில் வேறு எந்த நினைவும் இருக்காது. மிகவும் வெற்றிடமாக இருக்கும்.

Johnson

இசைத்துறையில் 50 ஆண்டு நிறைவு கொண்டாடும் இளையராஜா, தன்னுக்கு வருடமே இல்லை, தினமும் வேலை செய்கிறேன் என்கிறார். பால்கியின் தமிழ் படத்துக்காக பாடல் பதிவு செய்து வருவதாகவும், ரசிகர்கள் இசைக்கடவுள் என அழைப்பது அவர்களின் அன்பு, மதிப்பு என்பதையும் கூறுகிறார். இசை புனிதமான இடத்திலிருந்து வரும், நான் இல்லாவிட்டாலும் இந்த மக்கள் கொண்டாட்டம் தொடரும் என நம்பிக்கை தெரிவிக்கிறார்.

இசைத்துறையில் தனக்கென ஒரு சாம்ராஜ்ஜியம் படைத்த இளையராஜாவுக்கு இது சினிமாவில் 50ம் ஆண்டு. அவரின் முதல் படமான அன்னக்கிளி 1976ம் ஆண்டு இதே நாளில் (மே 14) வெளியானது. இதனை முன்னிட்டு இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய இளையராஜா "உங்களுக்கு தான் 50 வருடம், எனக்கெல்லாம் வருடமே இல்லவே இல்லை. தினமும் வேலை செய்கிறேன். இப்போது பால்கியின் தமிழ் படத்துக்காக பாடல் ரெக்கார்ட் செய்து வருகிறேன். இப்போது பாடகியை பாட வேண்டாம் ஒய்வு எடுங்கள், நான் இல்லாமல் பாடினால் திருத்தம் சொல்ல முடியாது என சொல்லிவிட்டு வந்திருக்கிறேன். வருடம் தான் போய்க்கொண்டே இருக்கிறது தவிர நான் அங்கேயே தான் இருக்கிறேன். நான் எப்படி வந்தேனோ இன்னுமும் அப்படியே சென்று கொண்டிருக்கிறேன். அதை தவிர எனக்கு ஒன்றும் தெரியாது. இந்த நேரத்தில் இதனை நினைவு வைத்து எனக்கு வாழ்த்து சொல்வது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. நீங்கள் இருக்கிறீர்கள் அதனால் நான் இருக்கிறேன்." என்றார்.

Ilayaraja

அடுத்து 75வது வருடத்திற்கு நாங்கள் மீண்டும் வருவோம் என செய்தியாளர் கூற "சொல்வது தான் சொல்கிறீர்கள் ஒரு 100ஆக சொல்லக்கூடாதா." என்று பேசி கலகலப்பாக்கினார். "எல்லோரும் உங்களை இசைக்கடவுளாக பார்க்கிறார்களே?" என்று கேட்டதும் "அவர்கள் தானே பார்க்கிறார்கள். கடவுளுக்கு தான் கடவுள் என்ற நினைப்பு இருக்குமா? இருக்காது. இசைக்கடவுளாக பார்க்கிறார்கள் என்றால் பார்த்துக்கொள்ளட்டும். அதில் எனக்கு ஒன்றும் குறைச்சல் இல்லை. அதனால் அவர்கள் ஒன்றும் கூடி போவது இல்லை. அவர்கள் என்னை அவ்வளவு மதிக்கிறார்கள் என்ற அன்பு தான் இதில் தெரிகிறது. இது எப்படி என்றால், ஒரு மனிதனுக்கு ஆறுதல் சொல்ல யார் இருக்கிறார்? அவன் துக்கத்தை துச்சமாக தூக்கி எரிய ஆயுதம் இருக்கிறதா? இல்லையே. குழந்தை கூட இசை கேட்டு தூங்குகிறது. இதை எல்லாம் நானா செய்கிறேன். இதற்காகவா போட்டேன், இயக்குநர் சூழலை சொன்னார்கள் போட்டேன். அந்தப் பாடல் என்னை அப்படி செய்தது, இப்படி செய்தது என சொல்கிறீர்கள். அந்த பாடல் என்ன செய்கிறதோ அதில் என்னுடைய வேலை இல்லை.

சுத்தமான இடத்தில் இருந்து அந்த ஸ்வரங்கள் பிறக்கின்றன. என் மனதில் இசையமைக்கையில் வேறு எந்த நினைவும் இருக்காது. மிகவும் வெற்றிடமாக இருக்கும். கோவிலில் கூட நிலைகொள்ளாத மனதை, ஜனனி ஜனனி என்ற பாடல் நிலையாக்குகிறது. அந்த அமைதியை நான் சொன்ன ஒரு விஷயம் கொடுக்கிறது என்றால் அந்தப் பாடல் தோன்றும் முன் அது எங்கே இருந்தது என்ற கேள்வியும் வருகிறது. அப்படி புனிதமான விஷயங்கள் வருவதால் தான் என்னை என்னென்னவோ சொல்லி கொண்டாடுகிறார்கள். இந்த மக்கள் கொண்டாட்டம் என்றென்றும், நான் இல்லாமல் போனாலும் கூட தொடரும் என்பது எல்லோருக்கும் நன்றாக தெரியும்." என்றார்.

ilayaraja symphony london

அன்னக்கிளி படத்திற்கு இசையமைத்த அனுபவத்தை நினைவுகூற சொன்னதும் "ஜி கே வெங்கடேஷிடம் உதவியாளராக சேர்ந்து 250 படங்களுக்கு மேல் வேலை செய்துவிட்டேன். பின்னர் எனக்கு என ஒரு படம் அமையும் போது எப்படி பாடலை துவங்குவது என்ற கேள்வி வந்தது. ஜி கே வெங்கடேஷிடம் இருந்த போது இந்த கேள்வி எல்லாம் வந்ததே இல்லை. பாடல் வரிகள் வந்துவிட்டது, அதனை எப்படி பாடலாக்கலாம் என யோசிப்பேன். வரிகளை படித்த பின் இது ஒரு பெண்ணின் விரக தாகத்தை கூறுகிறது என்பதால் ஒரு ஹம்மிங்கில் துவங்கலாம் என வடிவமைத்தேன். இப்படி ஒவ்வொரு வரியையும் படித்து அது எப்படி விஷுவலாக வரும் என்பதை யோசித்து அதற்கு ஏற்ப இசையமைத்தேன். ஒவ்வொரு பாடலையும் நான் இப்படி இசையமைத்ததால் தான் இன்று வரை அவை உயிரோடு இருக்கின்றன." என்றார் இளையராஜா.