ஜனநாயகன் படம் போல்.. கருப்பு படத்துக்கு வந்த சிக்கல்? முதல்வரை நாட திட்டம்!
ஆர்.ஜே. பாலாஜி இயக்கிய, 140 கோடி செலவில் உருவான கருப்பு படம் நீண்ட தாமதத்திற்கு பின் இன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திடீர் ரத்தால் தயாரிப்பாளர்கள் மனவேதனையில் உள்ளனர். அரசு அனுமதியுடன் சிறப்பு காட்சிகள் திட்டமிடப்பட்டிருந்தாலும், வெளியீட்டு நிலை தெளிவில்லாமல், எதிர்கால தமிழ் படங்களும் பிரச்சனையின்றி வெளியாவது கடினம் என தயாரிப்பாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
நடிகர் சூர்யா நடித்துள்ள 'கருப்பு' திரைப்படம் வெளியீட்டு நாளிலேயே சர்ச்சையில் சிக்கியிருப்பது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இன்று (மே 14) படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், காலை 9 மணி சிறப்பு காட்சிகள் திடீரென ரத்து செய்யப்பட்டதாக தயாரிப்பு தரப்பில் வெளியான அறிவிப்பு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் திரிஷா நாயகியாக நடித்துள்ளார். நீண்ட கால தாமதங்களுக்கு பிறகு உலகம் முழுவதும் இன்று படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டிருந்தது. மேலும் முதல் இரண்டு நாட்களுக்கு சிறப்பு காட்சிகளுக்கும் தமிழக அரசு அனுமதி வழங்கியிருந்ததால், ரசிகர்கள் உற்சாகமாக முன்பதிவுகளை செய்திருந்தனர். பல திரையரங்குகளில் டிக்கெட் விற்பனையும் வேகமாக நடைபெற்றது.
ஆனால் அதிகாலை நேரத்தில் தயாரிப்பாளர் எஸ்.ஆர். பிரபு வெளியிட்ட பதிவு ரசிகர்களை குழப்பத்தில் ஆழ்த்தியது. "தவிர்க்க முடியாத காரணங்களால் காலை 9 மணி காட்சிகள் ரத்து செய்யப்படுகின்றன" என்ற விளக்கம் மட்டுமே வெளியிடப்பட்டதால், படம் முழுமையாக வெளியாகுமா அல்லது மீண்டும் தாமதமா என்ற கேள்விகள் எழுந்தன.
மேலும், கருப்பு படத்தின் இயக்குனர் RJ பாலாஜி விரைவில் படம் வெளியாகும் என கண்ணீர் மல்க வீடியோ வெளியிட்டுள்ளார்.
இந்த நிலையில், கருப்பு பட தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபுவுக்கு ஆறுதல் தெரிவிக்கும் வகையில் சக தயாரிப்பாளர்கள் ஒன்றிணைந்தனர்.
அப்போது பேசிய தயாரிப்பாளர் சிவா, கருப்பு திரைப்படம் தவிர்க்க முடியாத காரணங்களால் வெளியாக வில்லை என்றும் வட மாநிலங்களில் சில திரையரங்களில் வெளியானதால் அங்கு தொடர்பு கொண்டு படத்தை திரையிட வேண்டாம் என்று கூறியாக அவர் தெரிவித்தார்.
மேலும், ஜனநாயகன் திரைப்படம் போல் கருப்பு திரைப்படமும் இணையத்தில் வெளியாகும் அபாயம் இருப்பதாகவும் அவர் வேதனை தெரிவித்தார்.
அதுமட்டுமில்லாமல், படம் வெளியாவது குறித்து தெளிவான விளக்கமளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதோடு, 140 கோடியில் இப்படம் எடுக்கப்பட்டதாகவும் எதிர்காலத்தில் வரும் படங்கள் எந்தவொரு பிரச்னையும் இல்லாமல் வெளியாவது கடினம் என்றும் அந்த சுழுலுக்கு தமிழ் சினிமா தள்ளப்பட்டு விட்டதாக அவர் கவலை தெரிவித்தார்.

