Shiva Rajkumar 45
கோலிவுட் செய்திகள்

"நான் திரும்பி வருவேனா என்பது கூட..." கண்கலங்க பேசிய சிவராஜ்குமார் | Shiva Rajkumar | 45

2024 டிசம்பர் 18 நான் சிகிச்சைக்காக கிளம்பினேன். அப்போது கண் கலங்கி மிக உணர்ச்சிப்பூர்வமாக இருந்தேன். ரொம்பவும் கஷ்டமாக இருந்தது. ஊடக நண்பர்கள் பலரும் வந்திருந்தார்கள், அவர்களும் அழுதார்கள்.

Johnson

சிவராஜ்குமார், '45' படத்தின் செய்தியாளர் சந்திப்பில், தனது உடல்நலப் பிரச்சினைகள் மற்றும் புனீத் மறைவு குறித்து உணர்ச்சிப்பூர்வமாக பகிர்ந்தார். அவர் சிகிச்சைக்குப் பிறகு திரும்பி வருவேனா என்ற பயம் இருந்தது. மருத்துவர்கள் தெய்வம் போல அவரை மீண்டும் உயிர்ப்பித்தனர். இந்தியா திரும்பியபோது உணர்ச்சிப்பூர்வமாக இருந்தார்.

சிவராஜ்குமார், உபேந்திரா, ராஜ் பி ஷெட்டி நடித்துள்ள படம் `45'. இப்படம் கன்னடத்தில் டிசம்பர் 25 மற்றும் தமிழில் ஜனவரி 1ம் தேதியும் வெளியாகவுள்ளது. இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு நேற்று மாலை நடைபெற்றது. இதில் நடிகர் சிவராஜ்குமார், அவர் உடல்நலம் சரி இல்லாமல் இருந்து சிகிச்சை பெற்று மீண்டது குறித்தும், அவர் சகோதரரும், நடிகருமான புனீத் மறைவு எனப் பல விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.

45 படத்தில் பெண் வேடம் போட்டது பற்றி கேட்கப்பட "அந்த உடை அணிந்து, பெண் தோற்றம் செய்து கொண்டு என் மனைவியின் கையைப் பிடித்துக் கொண்டுதான் செட்டுக்குள் சென்றேன். எல்லோரும் யார் இந்த இரு பெண்கள் என பார்த்தார்கள். மனைவிக்கு மிகுந்த மகிழ்ச்சி" என்றார்.

45

நேரடி தமிழ்ப்படம் நடிப்பீர்களா என்றதும் "ஒரு படத்தை தேர்வு செய்திருக்கிறேன், விரைவில் அது துவங்கும்" என பதில் அளித்தார். பிறகு ஜெயிலர் படத்தில் நீங்கள் நடித்தது போல, உங்களுடைய கன்னட படத்தில் ரஜினியை நடிக்க வைக்கும் எண்ணம் இருக்கிறதா என்று கேட்ட போது "அப்படி செய்யணுமே என செய்யக்கூடாது. அப்படியான படம் அமைய வேண்டும். எனக்கு சலுகை இருக்கிறது என அதை மெத்தெனமாக செய்யக் கூடாது. சின்ன வயதில் இருந்து அவரை பார்த்திருக்கிறேன். அப்படியான படம் அமைந்தால் ரஜினி சாரிடம் கண்டிப்பாக கேட்பேன்" என்றார்.

அரசியலுக்கு போகும் எண்ணமில்லையா எனக் கேட்டதும் "எனக்கு அரசியல் தெரியாது. மக்களுக்கு உதவுவதை செய்கிறேன். அதற்கு அதிகாரம் வேண்டும் என்ற அவசியமில்லை. நாங்கள் அதை யாருக்கு வேண்டுமானாலும் செய்யலாம். அதில் பிரிவினை ஏதும் இல்லை. ஆனால் அரசியல் அப்படி இயங்குவதில்லை" என்றார்.

Shiva Rajkumar

சிகிச்சைக்காக சென்று திரும்பிய பின்பு எப்படி உணர்கிறீர்கள்? வாழ்க்கை பற்றிய பார்வை மாறி இருக்கிறதா? என்று கேட்டதும் "2024 டிசம்பர் 18 நான் சிகிச்சைக்காக கிளம்பினேன். அப்போது கண் கலங்கி மிக உணர்ச்சிப்பூர்வமாக இருந்தேன். ரொம்பவும் கஷ்டமாக இருந்தது. ஊடக நண்பர்கள் பலரும் வந்திருந்தார்கள், அவர்களும் அழுதார்கள். நான் திரும்பி வருவேனா என்பது கூட தெரியாது. மருத்துவர்கள் எவ்வளவு உறுதி கொடுத்தாலும், ஒருவேளை வேறு ஏதாவது நடந்தால் என்ற பயம் இருந்தது. நான், மனைவி, மகள், மகளின் தோழி ஆகியோர் சென்றோம். டிசம்பர் 24ம் தேதி அறுவை சிகிச்சை. அன்று காலை ஒரு மருந்து கொடுத்தார்கள், அதன் பின் மயக்கமாக இருந்தது. அதன் பின் என்ன நடந்தது என எனக்கு தெரியாது.

சிவராஜ் குமார்

5, 6 மணிநேரம் கழித்து கண் விழிக்கும் போது என் மனைவி இருந்தார். அவர் என் கையை பற்றிக் கொண்டார். `நான் திரும்ப உன் கைய பிடிப்பேன்னு நினைச்சு கூட பாக்கல' என்று சொன்னேன். அந்த ஐந்து மணி நேரங்களில் நான் எங்கெங்கோ சென்றேன். நரகத்துக்கு கூட போய் வந்திருப்பேன். மருத்துவர்கள் தெய்வம் போல என்னை திரும்ப கொண்டு வந்தார்கள். உலகமே வேறு மாதிரி தெரிந்தது. அந்த நினைப்பில் இருந்து வெளியே வர 2,3 நாட்கள் ஆனது. இந்தியாவில் கால் வைத்த போது மிகவும் உணர்ச்சிப்பூர்வமாக இருந்தது. யாராவது நலம் விசாரிக்க போன் செய்தால் கூட கண்கலங்கிவிடும். நான் கடவுளுக்கு நன்றி சொல்ல வேண்டும். இது போல ஒரு அன்பு யாருக்கு கிடைக்கும். எவ்வளவு பணம் வேண்டுமானாலும் சம்பாதிக்கலாம், ஆனால் இந்த அன்பை சம்பாதிக்க முடியாது. நான் ஜோகி என்ற பாத்திரத்தில் நடித்திருக்கிறேன். ஜோகி என்றால் வீடு வீடாக சென்று மடிப்பிச்சை கேட்பது என்று பொருள். இந்த ஜோகிக்கு எல்லோரும் உங்கள் அன்பை கொடுத்திருக்கிறீர்கள். அதை என் மனதில் வைத்திருக்கிறேன்" என்றார்.

இது கடவுள் நம்பிக்கை சார்ந்த படம் என்கிறீர்கள். புனீத் மரணம் இன்றும் வருத்தம் அளிக்கக் கூடிய ஒன்று. இது போன்ற இழப்புகளை சந்திக்கும் போது உங்களுக்கு கடவுள் மேல் கோபம் வரவில்லையா? என்றவுடன் "என் தம்பி இறந்தபோது அவனுக்கு வயது 46 தான்.வாழ்க்கையில் எல்லா விஷயத்தையும் எதிர் கொண்டுதான் ஆக வேண்டும். சிலர் 20 வயதிலேயே கூட இறப்பதுண்டு. நேரம் வந்துவிட்டால் போக வேண்டியதுதான். சின்ன வயதில் அவன் எப்போதும் அம்மாவுடன் தான் இருப்பான். என்னை விட அவன் தான் அதிகம் இருந்தான். அப்பாவின் எல்லா படப்பிடிப்புகளுக்கும் செல்வான். சின்ன வயதிலேயே நட்சத்திரம் ஆகிவிட்டான், தேசிய விருது கிடைத்தது. அப்பா, அம்மாவுக்கு அவன் தேவையாக இருந்திருப்பான் போல, அதனால் தான் கூப்பிட்டுக் கொண்டார்கள்" என்றார்.