REELS-ஆல் தான் படம் ஓடுகிறதா? - கிச்சா சுதீப் சொன்ன சுவாரஸ்ய பதில் | Kiccha Sudeep | Mark
நடிகர் கிச்சா சுதீப் நடித்துள்ள தமிழ்ப்படம் `மார்க்'. இது டிசம்பர் 25ம் தேதி வெளியாகவுள்ளது. படம் குறித்து புரமோஷன் பேட்டிகளை அளித்து வருகிறார் சுதீப். அப்படியான ஒரு பேட்டியில் சினிமாவில் அதிகரித்து வரும் ரீல்ஸ் கலாச்சாரம் பற்றி பேசி இருக்கிறார் சுதீப்.
அந்தப் பேட்டியில் "ரீல்ஸ் நேரம் இல்லாதவர்கள் பார்ப்பது. ஆனால் படத்திற்கு வருபவர்கள் அவர்களுடைய நேரத்தை உங்களுக்கு தருகிறார்கள். அடுத்த சில மணிநேரம் உங்களுடையது, அதில் எதற்கு REELS காட்டுகிறீர்கள். கதையை சொல்லுங்கள். ஒரு REELல் பாட்டோ, படத்தின் காட்சியோ பிரபலமானால் தான் படம் ஓடும் என பேசுவார்கள். அது தப்பில்லை, ஆனால் அதுதான் நிஜம் என நான் நம்ப மாட்டேன். நீங்கள் செய்வது REELS ஆக வேண்டும். ஆனால் REEL க்காக நீங்கள் பண்ணுவது எவ்வளவு சரியென எனக்கு தெரியவில்லை. நாங்கள் கதையை உருவாக்கும் போது போனை ஓரமாக வைத்துவிட்டு யோசியுங்கள் என தான் சொல்வோம். எடுக்க வேண்டியது பெரிய திரைக்கான படம். ஆனால் உலகிலேயே சிறிய திரையை மனதில் வைத்து பேசுவார்கள். ஐமாக்ஸ் வரை சென்றுவிட்டோம், அங்கு செல்லுங்கள், அதற்கு நியாயம் செய்யுங்கள். அங்கயே என்ன வருகிறதோ அதுதான் ரீல்ஸ் ஆகிறது.
மேலும் படத்தில் என்ன காட்சி, என்ன பாடல், என்ன நடனம் ரீல்ஸ் ஆகும் என்பது யாருக்குமே தெரியாது. ஆடியன்ஸ் அதை தேர்வு செய்வார்கள். மார்க் படத்தின் டிரெய்லர் வெளியிட்டோம். அதில் எத்தனையோ இருந்தது. ஆனால் அதிலிருந்து பார்வையாளர்கள் தேர்ந்தெடுத்தது இரண்டு விஷயங்களை. ஒன்று `மொதோ முறை என்ன இவ்வளோ க்ளோஸ் அப்ல பாக்குறீல்ல ஸ்டீஃபன். நல்ல இருக்கேனா?' என்பது. இன்னொன்று `தம்மடிக்கிறத கம்மி பண்ணனும் டா' என்ற வசனம். எனவே இதுதான் ரீல் ஆகும் என்பதை நீங்கள் கணிக்கவே முடியாது. அவர்கள் தேர்வு செய்வார்கள். அதை அவர்களே பிரபலமும் செய்வார்கள். எவ்வளவு நட்சத்திரங்கள் இருக்கிறார்கள். ஒரு 100 நட்சத்திரங்கள் என வைத்துக் கொள்வோம். அவர்களில் இருந்து உங்களை தேர்ந்தெடுத்துவிட்டார்கள். அவர்களால் ஒரு ரீலை தேர்வு செய்ய முடியாதா?" என பேசியுள்ளார். இந்த பதில் இப்போது அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

