Dhanush Vada Chennai 2
கோலிவுட் செய்திகள்

"எனக்கு கல்லூரி வாழ்க்கை கிடைக்கவில்லை..." - ஏக்கத்தோடு சொன்ன தனுஷ் | Dhanush

என்னை நான் workaholic என்று சொல்ல முடியாது. குழந்தைகளுக்கு வீடியோ கேம் விளையாடுவது எப்படி பிடிக்குமோ, எனக்கு வேலை செய்வது அந்த மாதிரி. எனவே எனக்கு வேலைக்கு செல்லும் உணர்வே இருக்காது.

Johnson

தமிழ் சினிமாவின் மிக பிஸியான நடிகர் தனுஷ். நேற்று இரவு தனியார் கல்லூரி நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட தனுஷ் "எனக்கும் இந்த கல்லூரிக்கும் (வேல்ஸ்) ஒரு தொடர்பு உண்டு. என்னுடைய முதல் படமான துள்ளுவதோ இளமை படப்பிடிப்பை இங்கு தான் துவங்கினோம். இங்கிருந்து தான் என் பயணம் ஆரம்பித்தது. ஆனால் அதற்கு பிறகு கல்லூரி பக்கமே நான் செல்லவில்லை. ஆனால் இத்தனை வருடங்களுக்கு பிறகு இதே இடத்தில் உங்களை எல்லாம் சந்திப்பது மகிழ்ச்சி."

25 வருட சினிமா பயணம் குறித்து கேட்டதும் "அதற்கு முக்கியமாக நாம் கடைபிடிக்க வேண்டியது ஒரு விஷயம், நமக்கு கிடைத்திருப்பது எவ்வளவு பெரிய ஆசிர்வாதம் என்பதை நாம் உணர வேண்டும். அதை உணர்ந்துவிட்டால், அதனை தக்க வைத்துக் கொள்ள பகலிரவு பாராமல் நாம் வேலை செய்வோம். 25 வருடம் என்பது மிக கம்மி, இப்போதுதான் துவங்கியே இருக்கிறேன். இனிமேல் தான் செகண்ட் இன்னிங்க்ஸ்" என்றார்.

Dhanush

ஊடகம் என்பதை தள்ளிவைத்துவிட்டு, உங்களது `மீ டைம்'ல்  என்ன செய்வீர்கள் என்றதும் "நிறைய புத்தகங்கள் படிப்பேன். படங்கள் பார்ப்பேன், இல்லை என்றால் என் மகன்களோடு விளையாடுவேன். இடைவேளையே அபூர்வமாக தான் கிடைக்கும், கிடைத்தால் இது மூன்று தான். என்னை நான் workaholic என்று சொல்ல முடியாது. குழந்தைகளுக்கு வீடியோ கேம் விளையாடுவது எப்படி பிடிக்குமோ, எனக்கு வேலை செய்வது அந்த மாதிரி. எனவே எனக்கு வேலைக்கு செல்லும் உணர்வே இருக்காது. காலையில் போகும் போதே ஜாலியாக தான் போவேன்." என்றார்.

`குட்டி', `படிக்காதவன்' மாதிரியான படங்கள் எப்போது செய்வீர்கள் எனக் கேட்ட உடன் "எனக்குள் எல்லா ஜானர் படங்களும் செய்ய ஆசைதான். நானும் மாறி மாறி தான் செய்கிறேன். ஆனால் `குட்டி', `உத்தமபுத்திரன்' போன்ற படங்களை செய்ய இப்போது நிறைய இளைஞர்கள் வந்திருக்கிறார்கள். அவர்கள் அந்த மாதிரி படங்கள் பண்ணட்டும். நானும் செய்வேன், ஆனால் கம்மியாக செய்வேன்." என்றார்.

தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் பற்றி பேசிய தனுஷ் "துள்ளுவதோ இளமை படத்தில் ஒரு காட்சியில் என்னை அடிக்க வேண்டும். இரண்டு மூன்று டேக் எடுத்தும் ஓகே ஆகவில்லை. இயக்குநர் இவரிடம் நல்ல அடிங்க சார் என சொல்ல, ஐவரும் பூட்ஸ் காலில் போட்டு மிதி மிதி என மிதித்து தள்ளினார். என்னுடைய முதல் படத்திலிருந்து இவருடன் தொடர்பு இருக்கிறது." என்றார்.

Dhanush

வேல்ஸ் நிறுவனத்தின் கனவுப்படம் `வட சென்னை 2' என ஐசரி கணேஷ் சொல்ல, அதைனைத் தொடர்ந்து பேசிய தனுஷ் "ஆம் அவர் தான் வட சென்னை 2 தயாரிக்கிறார். நீங்கள் கேட்டுக் கொண்டே இருந்தீர்கள். விரைவிலேயே துவங்க இருக்கிறோம். இனிமேலாவது மேடைகளில் `வட சென்னை 2' டாப்பிக்கை தவிர்ப்போம்."

மாணவ மாணவிகளுக்கு தன் அனுபவத்தை பகிர்ந்த தனுஷ் "பள்ளிக்கு போகும் போது, சீக்கிரம் கல்லூரி போக வேண்டும் , நினைக்கும் போதெல்லாம் கட் அடிக்கலாம் என தோன்றும். ஆனால் கல்லூரி செல்லும் முன் நடிகராகிவிட்டேன். கல்லூரி போன என் நண்பர்கள் எல்லோரும் வேலைக்கு போனால் நாம் நினைத்த மாதிரி வாழலாம் என சொன்னார்கள். ஆனால் இரண்டையும் கடந்து வாழ்க்கைக்குள் நுழையும் போது தான் தெரியும், பள்ளி, கல்லூரி காலம் தான் வாழ்க்கையில் சிறந்த காலம் என. ஏனென்றால் அதன் பின் எதுவுமே நம் கட்டுப்பாட்டில் இருக்காது. எனவே நீங்கள் உங்களுடைய இந்த அழகான நாட்களை வெறுமனே கடந்து செல்லாமல், ஒவ்வொரு நாளையும் அனுபவித்து வாழுங்கள். இதுதான் உங்கள் வாழ்க்கையின் மகிழ்ச்சியான பகுதி." என்றார்.

நடிகர் தனுஷ்

இதே நிகழ்வில் ஐசரி கணேஷ் தயாரிப்பில் தனுஷ் நடித்து `போர் தொழில்' விக்னேஷ் ராஜா இயக்கியுள்ள `கர' படம் ஏப்ரல் 30 வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டது.