சிவகார்த்திகேயனின் 25வது படமாக உருவாகியுள்ள படம் `பராசக்தி'. இப்படத்தின் இசைவெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய சிவகார்த்திகேயன் "பராசக்தி பெயரே சக்திவாய்ந்த பெயர், இந்த பெயர் எவ்வளவு சக்திவாய்ந்ததோ, அப்படித்தான் படமும். இது என்னுடைய 25வது படமாக அமைந்தது எனக்கு சந்தோஷமான விஷயம். உங்கள் அனைவரையும் 60களுக்கு அழைத்து செல்லும் படம் இது. அதற்காக தான் இந்தக் குழு தீவிரமாக உழைத்திருக்கிறார்கள். மாணவர்கள், இளைஞர்கள் எப்போதும் சக்திவாய்ந்தவர்கள். அவர்கள் எவ்வளவு சக்தி கொண்டவர்களாக இருந்தார்கள் என சொல்வதுதான் இந்தப் படம். இந்தப் படம் எப்படி இருக்கும் என பல விஷயங்கள் சொல்கிறார்கள், அதை எல்லாம் நம்பாதீர்கள். இது யாருக்கும் எதிரான படமோ, தவறாக சித்தரிக்கும் படமோ அல்ல. இந்த மண்ணுக்காக, மொழிக்காக, இன்று நாம் வாழ்வதற்கும் சேர்த்து அன்று போராடு உயிர்நீத்த தியாக செம்மல்கள் அனைவருக்கும் வணக்கம் செலுத்தும் படமாக இருக்கும். இந்தப் படம் மண்ணை பற்றி மக்களை பற்றி சொல்லும் அதேவேளையில், உங்களுக்கு உத்வேகத்தையும் கொடுக்கும்.
இந்தப் படத்தில் நான் நடிக்க வந்தது சுவாரஸ்யமான கதை. கொத்துக்களை பார்ப்பதற்காக அருண் விஷ்வா அலுவலகத்துக்கு சுதா மேம் வந்திருந்தார்கள். அருண் நெடுநாட்களாகவே சுதா மேம் இயக்கத்தில் நான் நடிக்க கதை இருக்கிறதா என கேட்டு வந்திருப்பார் போல. அப்போது ஒரு ஐடியா இருக்கிறது என சொன்னார், அது ஒரு காதல் கதை. நான் பெரிய எதாவது படமாக இருக்கும் என நினைத்தேன். ஆனாலும் அந்தக் கதை பிடித்துள்ளது, வேறு கதை இருக்கிறதா எனக் கேட்டேன். இன்னொரு ஐடியா மட்டும் சொல்லிவிட்டு, இதற்கு மேல் வேண்டும் என்றால் ஸ்க்ரிப்ட் புத்தகம் தருகிறேன் எனக் கூறினார். படித்து முடித்த உடன் கதை மிகவும் பிடித்தது. ஷூட் தொடங்கும் முன்பு மேடம் ரொம்ப டெரெர் என பலரும் கூறினார்கள். எனக்கு ரொம்ப பதற்றம் ஆனது. பாடல் காட்சியை தான் முதலில் எடுத்தோம், அதன் பிறகு சீன் எடுக்கும் போது, காட்சிகளை ஆங்கிலத்திலேயே விளக்கினார். அதுவும் ஷேக்ஷ்பியர் இங்க்லிஷ். அவர் சொல்லும் சில வார்த்தைகளை சாட் ஜிபிடி பார்த்துதான் புரிந்து கொள்வேன். பின்பு ஒருநாள் சிவா உங்களுக்கு என்ன பிரச்னை என அவரே கேட்டார், `மேடம் யு ஒன்லி டாக் இன் இங்க்லிஷ், அதான் ப்ராப்ளம்' என சொன்னேன். அதன் பிறகு நல்ல சிங்க் வந்தது. அவர் ஒரு அர்பணிப்பான இயக்குநர், காலை 7 மணிக்கு முதல் ஷாட் வைப்பார். அதனால் தான் இப்படத்தை 82 நாட்களில் எடுத்து முடிக்க முடிந்தது.
ரவிமோகன் சார், கல்லூரி நாட்களில் உங்கள் படம் பார்த்தது தான் நினைவுக்கு வருகிறது. எம் குமரன் படத்தில் நீங்கள் அணிந்த டி ஷர்ட் போலவே கிடைக்குமா என அலைந்திருக்கிறேன். படங்களில் ரசித்த உங்களை, ஒரு மனிதராக ரசிக்க கிடைத்த வாய்ப்பு தான் பராசக்தி. `ரவி இந்த வில்லன் ரோலுக்கு ஓகே சொல்லிட்டார்' என மேடம் சொன்னதும் எது நாகார்ஜுனவா என தலைவர் மாதிரி ஜெயம் ரவியா என கேட்டேன். அவருக்கு இது நல்ல அனுபவமாக இருக்க வேண்டும் என மெனக்கெட்டோம். அவர் மிக இனிமையான மனிதர், ஆனால் அதற்கு நேர்மாறாக ஒரு டெரர் வில்லனாக படத்தில் வருவார்.
சின்னத்துரை ரோல் படித்ததும் யார் நடிக்க போகிறார் என யோசித்தேன். அதில் அதர்வா நடித்தது மிகவும் சிறப்பு. உங்களுடன் நடித்து ஒரு மகிழ்ச்சி என்றால், நீங்கள் வாங்கிக் கொடுத்த இனிப்பு, பலகாரங்களுக்கு இன்னொரு நன்றி. இந்த துறையில் சில நண்பர்கள் தான் இருக்கிறார்கள். ஆனால் நீங்கள் நண்பர் என்பதை தாண்டி சகோதரர் ஸ்தானத்தில் நீங்கள் வந்துவிட்டீர்கள். ஸ்ரீலீலா அபாரமான எனர்ஜி உள்ள நபர். அவரது நடனம் மிக சிறப்பாக இருக்கும். முதன்முதலாக குர்ச்சி மடத்தப்பட்டி பாடலில் அவரது நடனத்தை பார்த்தேன். அவருடைய டான்ஸை ரசித்த அளவு அவரது நடிப்பை இந்தப் படத்தில் ரசிப்பீர்கள். ஜி விக்கு இது 100வது படம். குறுகிய காலகட்டத்துக்குள் 100 படம் என்பது பெரிய சாதனை. அமரனில் முதன்முதலாக பணியாற்றினோம். அது வெற்றியடைய இசையும் பெரிய காரணம். இந்தப் படமும் அந்த மேஜிக்கை திரும்ப செய்யும் என நம்புகிறேன். ஜிவி மெலடி பாடல்கள் போடுவதில் வல்லவர். அவரின் பாடல்கள் காதில் ஏதோ ரகசியம் சொல்வதை போலவே இருக்கும். அதே நேரம் அதில் காதல் ஃபீல் நிறைவாக இருக்கும். இன்னும் பல நூறு படங்கள் பணியாற்றுங்கள் ஜிவி.
இப்போது இந்த ரிலீஸ் விஷயம் குறித்து சொல்கிறேன். இந்தப் படத்தை முதலில் துவங்கிய போது தயாரிப்பாளர் ஆகாஷ் `டிசம்பரில் ஷூட் துவங்கி, தீபாவளிக்கு அக்டோபரில் வரலாம்' என சொன்னார். ஆனால் தீபாவளிக்கு விஜய் சார் வருகிறார், எனவே ஜனவரி பொங்கலுக்கு வரலாம் என்றேன். ஆனால் விஜய் சாரின் `ஜனநாயகன்' தேதி பொங்கலுக்கு வருகிறது என அறிவித்தார்கள். விஜய் சார் படமாச்சே நாம் தள்ளி வரலாமா என ஆகாஷிடம் கேட்டேன். `அதில் இரண்டு சிக்கல் இருக்கிறது, நாம் அனைவரிடமும் ஜனவரி என்று சொல்லித்தான் வியாபாரம் செய்திருக்கிறோம், இன்னொன்று தள்ளிப்போனால் ஏப்ரல் மேக்கு தான் போக வேண்டும். அப்போது தேர்தல் நேரம் சிக்கலாகிவிடும்' என்றார்.
ஆனாலும் இதில் தவறான புரிதல் வரக்கூடாது, இடையில் புகுந்து யாரும் காமெடி பண்ணக்கூடாது என விஜய் சாரின் மேனேஜர் ஜெகதீஷுக்கு கால் செய்தேன். "அதெல்லாம் ஒன்னும் இல்ல சூப்பரா பொங்கலுக்கு வரட்டும் நீங்க எஸ்கேவுக்கு என் வாழ்த்துகள சொல்லுங்க" என விஜய் சார் சொன்னதாக ஜெகதீஷ் சொன்னார். இதனை வேறுவிதமாக சிலர் பேசுகிறார்கள். சிலருக்கு வன்மம், சிலருக்கு வியாபாரம். அவர் மேல் நான் என்ன மரியாதை வைத்திருக்கிறேன் என எனக்கு தெரியும். `GOAT' படம் பார்த்துவிட்டு விஜய் சாருக்கு போன் செய்து `GOAT மிகவும் பொழுதுபோக்காக இருந்தது சார்" என சொன்னேன். அவர் `தேங்க்ஸ் ப்ரோ' என அவர் சொன்னதும் `சார் எனக்கு எதற்கு சார் நன்றி, உங்களோடு நடித்ததில் எனக்கு மகிழ்ச்சி சார்' என்றேன். ஆனால் அவர் `நீங்கள் ஏற்றுக் கொண்டு வந்து நடித்தீர்கள், என்னால் எவ்வளவு முடியுமோ, அத்தனை முறை நன்றி சொல்வேன்' என்றார். இதுதான் எங்களுக்கு இடையில் இருக்கிற நட்பு, இதுக்கு நடுவில் யார் என்ன பேசினாலும் நீங்கள் கவலைப்படாதீர்கள். அதனால மக்களே 33 வருஷமாக நம்ம எல்லோரையும் என்டர்டைன் செய்த ஒருவர், தனது கடைசி படம் என சொல்லி இருக்கிறார். எனவே அதனால ஜனவரி ஒன்பதாம் தேதி ஜனநாயகனை பார்த்து கொண்டாடுங்கள், ஜனவரி பத்தாம் தேதி பராசக்தி பார்த்துவிட்டு கொண்டாடுங்கள். யார் என்ன வேண்டுமானாலும் சொல்லட்டும் இந்தப் பொங்கல் அண்ணன் - தம்பி பொங்கல் தான்.
இப்போது என் ரசிகர்களிடம் பேசுகிறேன் இது என்னுடைய 25வது படம், ஆனால் நான் 25 படங்கள் என்பதை பார்க்கவில்லை. இந்த 19 வருடங்களை தான் பார்க்கிறேன். கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த சமயம் அப்பா இறந்துவிட்டார். அவர் உடலை முன்னால் வைத்துவிட்டு, என் அம்மா சொன்னது `தம்பிய இப்படி விட்டுட்டு போயிட்டீங்களே அவன் என்னங்க பண்ணுவான்'. அன்று முதல் அந்த கேள்வி என் மனதில் நின்றுவிட்டது. அப்போதுதான் எனக்கு ஒரு அடையாளத்தை உருவாக்க நினைத்தேன். கடுமையாக உழைத்து சினிமாவுக்குள் வந்தேன். வெற்றிகளை சந்தித்த போது மீண்டும் பிரச்சனைகள் வந்தது. இங்கிருந்த சில ஹீரோக்கள், தயாரிப்பாளர்கள், சங்கங்கள் என பலரும் என்னை கார்னர் செய்தார்கள். அம்மா கேட்ட அந்த கேள்வி மீண்டும் கேட்டது. எனக்கு தெரிந்தது உழைப்பது மட்டும் தான் என, திரும்ப உழைத்தேன், வளர்ந்தேன். இப்போது சமூக வலைத்தளங்கள் மூலம் மறுபடி தாக்குகிறார்கள். இப்போது குடும்பத்தை திட்டுவது வரை வளர்ந்துவிட்டது. மறுபடி அம்மா கேட்ட `இவனுக்கு யார் இருக்கா?' என்ற கேள்வி வந்தது. அம்மா இப்போ சொல்லணும்னு தோணுது, இங்க உன் பையனுக்கு இவ்வளோ பேர் இருக்காங்க. ஆயிரம் பேர் தள்ளவிட நினைத்தால், தாங்கி பிடிக்க லட்சம் பேர் இருக்கிறார்கள். அவர்களால் தான் நான் ஜெயித்துவிட்டேன் என தோன்றுகிறது.
19 வருட அனுபவம் எப்படி இருக்கிறது எனக் கேட்கப்பட "நமக்கு முன்னாள் போனவர்கள் வாழ்க்கையை பாடமாகவும், பின்னால் வருபவர்களுக்கு நம் வாழ்க்கை பாலமாகவும் இருக்க வேண்டும். இதுதான் நான் இந்த பயணத்தில் கற்றுக் கொண்டது" என்றார். " `பராசக்தி' சிவாஜி சார் நடித்த படம், சிவாஜி படத்தில் ரஜினி சார் பராசக்தி ஹீரோடா என்பார், இப்போது நீங்கள் பராசக்தி ஹீரோவாக நிற்கிறீர்கள்" என்றதும் "இந்த தலைப்பு எப்போதும் அவர்களுடையது தான். அவர்களின் ஆசிர்வாதம் எனக்கு இருக்கிறது என நம்புகிறேன். ஒன்று மட்டும் சொல்லலாம், இந்த பராசக்தி அவர்களுக்கும் மரியாதை செய்யும் படமாக இருக்கும்" என்றார். "இப்போது அரசியல் சார்ந்த படம் செய்கிறீர்கள், வருங்காலத்தில்" என்றதும் இடைமறித்த சிவா "நம்ம வேலை நடிப்பது, அதை செய்வோம். எல்லா ஜானரிலும் படம் செய்ய வேண்டும், சமூகம் சார்ந்த படங்களும் செய்ய வேண்டும். அப்போது சில விமர்சனங்களும் வரத்தான் செய்யும். அமரன் செய்யும் போது இது இவர்களுக்கு ஆதரவான படம் என்றும், பராசக்தி அவர்களுக்கு ஆதரவான படம் என்றும் சொன்னார்கள். நாம் யாருக்கும் ஆதரவோ, எதிர்ப்போ இல்லை. என்னைப் பொறுத்தவரை தாய் நாட்டுக்காக செய்த படம் `அமரன்', தாய் மொழிக்காக செய்த படம் `பராசக்தி' " எனக் கூறி பேச்சை நிறைவு செய்தார்.