கோவையில் நடந்த ‘விஸ்வநாத் & சன்ஸ்’ இசை வெளியீட்டில் சூர்யா, கோயம்புத்தூருடன் உள்ள தனது குழந்தைப் பருவ நினைவுகளை பகிர்ந்து கொண்டார். தியா, தேவ்வை ஊருக்கு அழைத்து சென்று புளியமரம், கிணறு, வயல் போன்ற இடங்களை காட்டிய அனுபவத்தை கூறினார். டிஜிட்டல் ஸ்கிரீன் நேரத்தை குறைத்து குடும்பத்துடன் நேரம் செலவிட வேண்டும் என ரசிகர்களை கேட்டுக்கொண்டார்.
சூர்யா நடித்துள்ள `விஸ்வநாத் & சன்ஸ்' படம் ஆகஸ்ட் 14ம் தேதி வெளியாகவுள்ள நிலையில் நேற்று மாலை இப்படத்தின் இசை வெளியீட்டு விழா கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பேசிய சூர்யா "கோவை விமான நிலையத்திலிருந்து இந்த விழா நடைபெறும் இந்த தருணம் வரை இதனை ஒரு திருவிழாவை போல் கொண்டாடிவரும் ரசிகர்களுக்கு என் மனமார்ந்த நன்றி. என் மீது நீங்கள் வைத்திருக்கும் இந்த அன்பிற்கு நன்றி. ஒரு காரணத்திற்காக நான் என் பிறந்த நாளை கொண்டாடவில்லை. இருந்தாலும் ரசிகர்களாகிய நீங்கள் ஒவ்வொருவரும் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்... என்ன செய்தீர்கள்... என்பதை நான் கவனித்துக் கொண்டே தான் இருக்கிறேன். ஐயாயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் ரத்த தானத்தை வழங்கியுள்ளீர்கள். நாற்பதாயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கியிருக்கிறீர்கள். குட்டி குழந்தைகள் முதல் அனைவருக்கும் அவர்கள் விரும்பிய ஆடைகளை வாங்கி பரிசாக வழங்கி இருக்கிறீர்கள். இவை எல்லாவற்றையும் நான் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறேன். என் மீது வைத்திருக்கும் அன்பிற்கு நன்றி.
கோயம்புத்தூர் பிறந்த மண் என்பதால் இங்கு வந்தவுடன் நிறைய 'பிளாஷ்பேக்'குகள் வந்து கொண்டே இருக்கிறது. அதில் ஒன்றை மட்டும் சொல்கிறேன். பனிரெண்டாம் வகுப்பு படிக்கும் வரை ஒவ்வொரு வருடத்திலும் கோடை விடுமுறைக்கு கோயம்புத்தூர் வந்து விடுவேன். கோயம்புத்தூர் ரயில் நிலையத்தில் இருந்து காரில் பயணிக்கும் போது சூலூர் - காசி கவுண்டர் புதூர்- புளியம்பட்டி- கவுண்டம்பாளையம் - இளையராஜாவின் பாடல்கள் - ஆடு மாடு மேய்ப்பது- மாட்டு வண்டி ஒட்டுவது - வயலில் நடப்பது- வரப்பில் உறங்குவது- கிணற்றில் குதிப்பது.. என எல்லா செயல்களையும் செய்திருக்கிறேன்.
கடந்த வருஷம் தியாவையும், தேவ்வையும் அழைத்துக் கொண்டு வந்து... இந்த புளிய மரத்தில் தான் விளையாடினேன்.... இந்த கிணற்றில் தான் குதித்தேன்.... இந்த வாய்க்காலில் தான் படுத்துக் கொண்டிருந்தேன்... என ஒவ்வொரு விசயத்தை அவர்களிடம் மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டேன். அதன் பிறகு குலதெய்வ கோயிலுக்கும் சென்று வந்தோம். இது எல்லாம் நான் ஏன் இங்கே குறிப்பிடுகிறேன் என்றால்... நாம் டிஜிட்டல் ஸ்கிரீனுடன் செலவழிக்கும் நேரம் அதிகமாகி விட்டது. நான் என்னையும் சேர்த்து தான் சொல்கிறேன். ஆனால் குடும்ப உறுப்பினர்களுடன் செலவிடும் நேரம் குறைவாகிவிட்டது. அதனால் தயவு செய்து குடும்பத்தினருக்கான நேரத்தை இன்னும் கொஞ்சம் அதிகமாக செலவிட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். நான் மீண்டும் குறிப்பிட விரும்புகிறேன் இதில் நானும் அடங்கி இருக்கிறேன். நானும் ஸ்கிரீன் நேரத்தை குறைத்துக் கொண்டு, குடும்பத்துடன் செலவிட வேண்டும் என எனக்கு நானே சொல்லிக் கொள்கிறேன். நினைவுகளை உருவாக்குங்கள். சேமித்திடுங்கள். அது ஊரில் இருக்கும்போதுதான் கிடைக்கும். இதனை ஒருபோதும் யாரும் தவற விட்டு விடாதீர்கள். ஃபோனை பார்ப்பதன் மூலம் கிடைக்கும் நினைவுகளை விட, உங்களை சுற்றி உள்ள மக்களைப் பற்றி... ஊரைப் பற்றி... உறவுகளைப் பற்றி... நிறைய விசயங்களை பேசி, கலந்து உரையாடி, நினைவுகளை உருவாக்கிக் கொள்ளுங்கள். இதைப் பற்றி சொல்ல வேண்டும் என்று தோன்றியது. அதனால் பகிர்ந்து கொள்கிறேன்.
'கருப்பு' படத்திற்கு பிறகு இப்போது தான் உங்களை நான் சந்திக்கிறேன். 'கருப்பு' படத்தை மிகப்பெரிய வெற்றிப்படமாக மாற்றிய அனைவருக்கும் நன்றி. இப்படத்தின் வெளியீட்டில் சிக்கல் ஏற்பட்ட போது உடன் நின்று ஆதரவு அளித்து படத்தை வெளியிட ஒத்துழைப்பு வழங்கிய விநியோகஸ்தர்கள்- திரையரங்கு உரிமையாளர்கள்- ஃபைனான்சியர்கள்- என அனைவருக்கும் இந்தத் தருணத்தில் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இப்படத்தின் நூறாவது நாள் விழா விரைவில் நடைபெற உள்ளது. அதற்கான ஏற்பாடுகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சித்தாரா என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பாளர் வம்சி சார்- இந்த நிறுவனம் ஒரு ஆண்டிற்கு பத்திற்கும் மேற்பட்ட திரைப்படங்களை தயாரிக்கும் நிறுவனமாக இருந்தாலும்.... ஒவ்வொரு திரைப்படத்தின் பணிகள் குறித்து அவருக்கு எல்லா விசயங்களும் தெரியும். அவர் பணத்தை மட்டும் முதலீடு செய்யாமல்... மக்களுக்கு எந்த மாதிரியான படத்தை வழங்குகிறோம்..? எப்படி வழங்க வேண்டும்..? என ஒவ்வொரு விசயத்திலும் கவனம் செலுத்தும் ஒரு அற்புதமான தயாரிப்பாளர்.
'ஜெர்சி', 'லக்கி பாஸ்கர்' என தொடர்ந்து நல்ல படங்களை கொடுத்த அவர், அடுத்து என்ன மாதிரியான படத்தை வழங்கலாம் என்று யோசித்து, அவர் தயாரித்த திரைப்படம் தான் 'விஸ்வநாத் & சன்ஸ்'. இதற்காக என்னை தேர்வு செய்ததற்கு நன்றி. இந்தப் படத்தை நான் பார்த்து விட்டேன். பார்த்த பிறகு அவருக்கு எனக்கு ஒரு நல்ல படத்தை வழங்கி இருக்கிறீர்கள் என்று அவரிடம் தெரிவித்தேன். இந்த வாய்ப்பு அளித்ததற்காக அவருக்கு நன்றி. நானும், சுனிலும் ஒன்றாக படிக்கவில்லை. ஆனால் நிறைய ஊர் சுற்றி இருக்கிறோம். நாங்கள் இருவரும் மீண்டும் 25 வருடத்திற்கு பிறகு இணைந்து நடித்திருக்கிறோம்.
மீசை முளைக்காத நாட்களில் பார்த்து வியந்த இன்றைய விழாவின் நாயகன் ஜீவி பிரகாஷ் குமார். ரேடியோ மிர்ச்சியில் ஜிங்கிள்ஸிற்கு இசையமைத்தது இவர் தான் என சிறுவனாக இருந்த இவரை காட்டிய போது நான் வியந்து ரசித்தேன். அது மட்டுமல்லாமல் மேடையில் ஏறி பாடி, ஆடி நடித்த முதல் இசையமைப்பாளர் இவர்தான். 'ஆடுகளம்' படத்தில் இடம்பெற்ற அந்தப் பாடலை மேடையில் பாடி ஆடியதை நான் பார்த்து 'அட!' என வியந்திருக்கிறேன். அந்த தருணத்திலிருந்து அவருடன் இணைந்து பயணித்திருக்கிறேன். அதில் 'சூரரை போற்று' மிக முக்கியமான படம். உச்சக்கட்ட காட்சியில் பாடலை வைத்து இன்னும் மெருகேற்றினார். அந்தப் படத்திற்கு தேசிய விருது எனும் மரியாதையும் கிடைத்தது. அவருடனான ஏராளமான நல்ல நினைவுகள் - அனுபவங்கள் பசுமையாய் இருக்கிறது. என் மீது அவர் காட்டும் நிபந்தனையற்ற அன்பிற்கு நன்றி.
இந்தப் படத்தில் ராதிகா மேடத்திற்கும் மமீதாவிற்கும் இடையேயான கெமிஸ்ட்ரி ஸ்பெஷலாக இருக்கும். இந்தப் படத்தின் கதையைக் கேட்டவுடன் நாங்கள் அனைவரும் ஒன்றிணைந்து ஒரே ஆப்ஷனாக செலக்ட் செய்தது மமீதாவை தான். நாங்கள் இருவரும் இணைந்து ஏற்கனவே ஒரு படத்தில் நடிக்க இருந்தோம். ஆனால் சில காரணங்களால் அது நடைபெறவில்லை. ஆனால் இந்த படத்தில் இணைந்திருக்கிறோம். இதில் மமீதா ஒரு மேஜிக் செய்திருக்கிறார். அந்த கதாபாத்திரத்தை அவ்வளவு அற்புதமாக ஏற்று நடித்திருக்கிறார். தமிழில் அவரே பின்னணியும் பேசியிருக்கிறார். தமிழிலும் நன்றாக பேசியிருக்கிறார்.
இந்தப் படத்திற்காக இயக்குநர் வெங்கி பிரார்த்தனை செய்ததாக சொன்னார். நானும் பிரார்த்தனை செய்தேன். நான் அவருடைய 'லக்கி பாஸ்கர்' படத்தைப் பார்த்து பிரமாதமாக இருக்கிறதே..! என வியந்து ரசித்தேன். எனக்கு வெவ்வேறு இயக்குநர்கள்- வெவ்வேறு அடையாளத்தை கொடுத்திருக்கிறார்கள். அதில் 'விஸ்வநாதன் & சன்ஸ்' எனக்கு ஒரு புது அடையாளம். அந்த அடையாளத்தை கொடுத்தது இயக்குநர் வெங்கி. நான் இதைப் போன்றதொரு படத்தில் நடித்து நீண்ட நாட்கள் ஆகிவிட்டது. அவருடைய எழுத்தின் மீது எனக்கு நிறைய மரியாதை உண்டு. இந்தப் படத்தில் மூன்று பெண்கள் இருக்கிறார்கள். அந்த மூன்று கதாபாத்திரங்களையும் எழுத்தில் அழகாக உருவாக்கியிருக்கிறார். உறவுகளைப் பற்றி அற்புதமாக பேசியிருக்கிறார். இந்த படத்தை பார்க்கும்போது உங்களின் உதட்டோரம் சின்ன புன்னகை எட்டிப் பார்க்கும். இது படம் முழுவதும் இருக்கும்.
இந்தப் படத்தில் ரொமான்ஸ்- ஃபேமிலி- காமெடி- என எல்லாம் இருக்கும். ஹீரோயிசமும் இருக்கும். எல்லாம் கலந்த ஃபேமிலி என்டர்டெய்னராக இருக்கும். இயக்குநர் வெங்கி சொன்னது போல்.. இது என்னுடைய ரசிகர்களுக்கான படம் மற்றும் என்னுடைய ரசிகர்களின் குடும்பத்தினர்களுக்கான படமும் கூட. ஆகஸ்ட் 14ஆம் தேதி வெளியாகிறது. உங்களுடைய அன்பும், ஆதரவும் இந்தப் படத்திற்கும் வழங்குங்கள். இன்று நண்பர்கள் தினம். அனைவருக்கும் நண்பர்கள் தின வாழ்த்துக்கள். எனக்கு கிடைத்த வெற்றியை போல் உங்கள் அனைவருக்கும் உங்களுடைய வாழ்க்கையில் இதற்கும் மேலான வெற்றிகளை பெற வேண்டும் என வாழ்த்துகிறேன். அதே தருணத்தில் நீங்கள் ஆசைப்பட்ட அனைத்து விசயங்களும் நடந்தேற வேண்டும் என்றால் ..முதலில் நம்பிக்கை வைக்க வேண்டும். நம்பிக்கையுடன் பயணித்தால் வெற்றி கிடைக்கும். மகிழ்ச்சி கிடைக்கும். சந்தோஷம் கிடைக்கும். இவை அனைத்தும் கிடைக்க ஆண்டவனிடம் நானும் பிரார்த்திக்கிறேன். இந்த நிகழ்ச்சியை திருவிழா போல் மாற்றிய அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி'' என்றார்.