Hip Hop Thamizha Porunai
கோலிவுட் செய்திகள்

சர்வதேச திரைப்பட விழாவில் ஹிப்ஹாப் தமிழாவின் `பொருநை' | Porunai | Hip Hop Thamizha

தாமிரபரணி என்று அழைக்கப்படும் `பொருநை' நதிக்கரையில் 2020-2021 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற அகழாய்வுப் பணிகளை முழுமையாக பதிவு செய்து இந்த ஆவணப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.

Johnson

தனி இசை பாடல்கள் மூலம் பிரபலமாகி `ஆம்பள' படம் மூலம் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஹிப் ஹாப் தமிழா ஆதி. தொடர்ந்து பல படங்களுக்கு இசையமைத்தவர், `மீசைய முறுக்கு' படம் மூலம் ஹீரோவாகவும் அறிமுகமாகி வரவேற்பு பெற்றார். இவற்றை தாண்டி சில ஆவணப் படங்களையும் தயாரித்திருக்கிறார். ஹிப்ஹாப் தமிழாவின் தமிழன்டா இயக்கம் 2019 ஆம் ஆண்டு `தமிழி' என்ற ஆவணப்பட இணையத் தொடரை உருவாக்கி வெளியிட்டிருந்தது. சுமார் 20,000 கிமீ பயணித்து, பண்டைய தமிழிக் கல்வெட்டுகள் முதல் அசோகர் கல்வெட்டுகள் வரை பலவற்றையும் ஒருங்கிணைத்து உருவாக்கப்பட்ட இந்த ஆவணப்படத் தொடர் பெரும் வரவேற்பைப் பெற்றது.

Porunai

இதனைத் தொடர்ந்து, ஹிப்ஹாப் தமிழாவின் தமிழன்டா இயக்கத்தின் முன்னெடுப்பில், `பொருநை' என்ற ஆவணப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. தாமிரபரணி என்று அழைக்கப்படும் `பொருநை' நதிக்கரையில் 2020-2021 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற அகழாய்வுப் பணிகளை முழுமையாக பதிவு செய்து இந்த ஆவணப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. பொருநை ஆவணப்படத்தை ஹிப்ஹாப் தமிழா எண்டர்டெயின்மெண்ட் நிறுவன தயாரிபில் பிரதீப்குமார் - இளங்கோ சம்பத்குமார் ஆகியோர் இந்த ஆவணப்படத்தையும் இயக்கியுள்ளனர்.

பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களுக்கும் அனுப்பட்டுள்ள இப்படம் தற்போது துருக்கியில் நடைபெறும் Foca International Archaeology & Cultural Heritage Film Festival-இல் திரையிட தேர்வாகியுள்ளது. வரும் அக்டோபர் மாதம் நடைபெறும் திரையிடலில் 'பொருநை' ஆவணப்படம் திரையிடப்படவுள்ளது. தொல்லியல், பண்பாடு உள்ளிட்ட துறைகளில் முக்கியத்துவம் வாய்ந்த இந்த திரைப்பட விழாவில் திரையிடப்படவுள்ள முதல் தமிழ் ஆவணப்படம் 'பொருநை' என்பது குறிப்பிடத்தக்கது.