Ken Karunas Youth
கோலிவுட் செய்திகள்

"தெலுங்கே தெரியாது, உனக்கு தெலுங்கு மார்க்கெட்டானு கேட்டு..." - உடைத்து பேசிய கென் கருணாஸ் | Youth

நாங்கள் இங்கு பரிட்சயமான முகங்கள் கிடையாது. மார்ச் 26 எங்கள் படம் வெளியாகவுள்ளது. தெலுங்கில் `ரகுவரன் பி டெக்' (வேலையில்லா பட்டதாரி தெலுங்கு டப்) படம் பிடித்தவர்களுக்கு இந்தப் படம் கண்டிப்பாக பிடிக்கும். இது ஒரு பொழுதுபோக்கு படம்.

Johnson

கென் கருணாஸ் நாயகனாகவும் இயக்குநராகவும் அறிமுகமாகியுள்ள படம் `யூத்'. இப்படத்தில் சுராஜ் வெஞ்சரமூடு, தேவதர்ஷினி, நளினி, அனிஷ்மா, மீனாக்ஷி, ப்ரியான்ஷி எனப் பலரும் நடித்திருந்த இப்படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருந்தார். இந்தப் படம் வெளியாகி பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. 4 நாட்களில் உலக அளவில் படம் 28.3 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக அறிவித்தனர். படத்தைப் பார்த்த திரைபிரபலங்களும் பாராட்டி வருகின்றனர். சிம்பு, சூர்யா, கார்த்தி ஆகியோர் படக்குழுவை நேரில் அழைத்து பாராட்டியுள்ளனர்.

Youth

இப்படத்தின் தெலுங்குப் பதிப்பு மார்ச் 26ம் தேதி வெளியாகவுள்ளது. அதற்காக ஹைதராபாத்தில் நடைபெற்ற ப்ரீ ரிலீஸ் நிகழ்வு நடைபெற்றது. இதில் பேசிய கென் கருணாஸ் "தமிழில் இப்படம் நன்றாக ஓடிக் கொண்டிருக்கிறது. தெலுங்கில் எங்களை நம்புவது என்பது பெரிய விஷயம். நாங்கள் இங்கு பரிட்சயமான முகங்கள் கிடையாது. மார்ச் 26 எங்கள் படம் வெளியாகவுள்ளது. தெலுங்கில் `ரகுவரன் பி டெக்' (வேலையில்லா பட்டதாரி தெலுங்கு டப்) படம் பிடித்தவர்களுக்கு இந்தப் படம் கண்டிப்பாக பிடிக்கும். இது ஒரு பொழுதுபோக்கு படம். நான் நேற்று சூர்யா சார், கார்த்தி சாரை சந்தித்த போது, 26ம் தேதி படம் தெலுங்கில் வெளியாகிறது எனக் கூறினேன். `தமிழில் உனக்கு என்ன அன்பு கிடைத்ததோ, அதேபோல் தெலுங்கிலும் கிடைக்கும். ஏனென்றால் தெலுங்கு மக்கள் நடிகர்களை விட கதையை அதிகம் மதிப்பவர்கள். அது நன்றாக இருந்தால் படத்திற்கு ஆதரவு தருவார்கள்.' எனக் கூறினார்கள்.

நானும் அதனை உறுதியாக நம்புகிறேன். ஒருமுறை என் நண்பன் `உன் படம் தெலுங்கில் வெளியாகுமா?' எனக் கேட்டான், `ஆம் வருகிறது'  என்றேன்.`உனக்கு தெலுங்கு தெரியுமா?' என்று கேட்டான், `இப்போதுதான் கற்றுக் கொள்கிறேன், ஆனால் புரியும்' என்றேன். `உனக்கு தெலுங்கு தெரியாது, ஆனால் தெலுங்கு மார்க்கெட்டில் வர விரும்புகிறாயா?' என்றான். `இது தெலுங்கு மார்க்கெட் சம்பந்தப்பட்டது இல்லை, தெலுங்கு மக்கள் சம்பந்தப்பட்டது . என்னுடைய படத்தை அவர்கள் பார்க்க வேண்டும் என விரும்புகிறேன்.' என்றேன். ஏனென்றால் SIR (வாத்தி) தெலுங்கு மக்கள் கொண்டாடி பார்த்தனர். அந்தக் கொண்டாட்டத்தை நான் நேசிக்கிறேன். மெல்ல மெல்ல நான் தெலுங்கு கற்கிறேன். ஆனால் சினிமாவுக்கு மொழி கிடையாது, அது கலை வடிவம். அதை தான் நான் நம்புகிறேன். நீங்கள் எங்களுக்கு ஆதரவு தருவீர்கள் என எண்ணுகிறேன்." எனப் பேசினார்.