நடிகர் ஹரீஷ் கல்யாண் நடிப்பில் `லிஃப்ட்' படத்தை இயக்கிய வினீத் வரப்பிரசாத் இயக்கத்தில்உருவாகும் `தாஷமக்கான்' படத்தின் அறிமுக விழா இன்று நடைபெற்றது.
இந்த நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய ஹரீஷ் "முதன்முறையா நான் நடிக்கும் படத்துக்கு இப்படி ஒரு அறிமுக விழா. தாஷமக்கான் குழுவுக்கு நன்றி. ஃபர்ஸ்ட் லுக்கிற்கே எதற்கு இப்படி ஒரு விழா என்ற கேள்வி எனக்கு இருந்தது. ஆனால் இந்த தலைப்பு பற்றி விளக்க வேண்டும் என தோன்றியது. தாஷமக்கான் என்ற பகுதியைப் பற்றி நிறைய பேர் கேள்விப்பட்டிருப்போம். நான் சென்னையில் பிறந்து வளர்ந்திருந்தாலும், நான் அந்த இடம்பற்றி பெரிய அளவில் புரிந்து கொண்டது கிடையாது. இந்தப் படத்தின் இயக்குநர் அங்கேயே பிறந்து வளர்ந்தவர் என்பதால் அவருக்கு நல்ல புரிதல் இருக்கும். அவர் மூலமாகவே நிறைய கற்றுக் கொண்டேன். தாஷமக்கான் பற்றி முதலில் சொல்ல வேண்டும் என்றால் அது இறைச்சிகள் தலைநகரம். அங்கிருந்துதான் தமிழ்நாட்டில் பல இடங்களுக்கு இறைச்சி அனுப்பப்படுகிறது. இது அந்த ஏரியாவின் முக்கிய அடையாளம், அதற்கு என ஒரு வரலாறும் உண்டு.
அதன் பிறகு என்னுடைய கதாபாத்திரம் பற்றி சொல்வதென்றால், ஒரு ராப் பாடகராக நடித்திருக்கிறேன். ராப் என்றால் ஆங்கில கலைஞர்கள் நிறைய கேள்விப்பட்டிருப்போம். இங்கு யோகி பி, பிளாஸ்ஸே, ஹிப் ஹாப் ஆதி போன்ற பிரபலங்களையும் தெரியும். இப்போது சுயாதீன இசையில் ராப் கல்ச்சர் நிறைய வளர்ந்திருக்கிறது. இன்று வந்திருக்கும் அறிவு, அசல் கோலார், பால் டப்பா உலகம் முழுக்க செல்கிறார்கள். அதன் மூலம் ஒரு புரட்சி செய்கிறார்கள். இவை எல்லாம் இந்தக் கதையை செய்வதற்கு உந்துதலாக இருந்தது. நான் இந்த பாத்திரத்தில் நடிக்க ஒரு ராப் பாடகராக, எனக்கு பலரும் பயிற்சி கொடுத்தார்கள் அவர்களுக்கு நன்றி. பிரிட்டோ இசையில் இந்த ஆல்பம் பயங்கரமாக வந்திருக்கிறது.
இயக்குநர் வினீத் என்னிடம் வந்த போது, நான் இந்த பாத்திரத்தில் பொருத்தமாக இருப்பேனா, மற்ற யாரிடமாவது நான் ஓகேவா எனக் கேட்டீர்களா என்றேன், இல்லை அவர்கள் சந்தேகமாகத்தான் சொன்னார்கள் என்கிறார். ஓ அப்படி என்றால் கண்டிப்பாக நான் செய்கிறேன் என சொன்னேன். இது மிகவும் சவாலான பாத்திரமாக இருந்தது. என்னுடைய கம்ஃபர்ட் ஸோனில் இருந்து வெளியேவந்து நடித்திருக்கிறேன்" என்றார்.