Cheran x page
கோலிவுட் செய்திகள்

"எம்.ஜி.ஆர். அன்று போட்ட உத்தரவு.. அரசாங்கம் இதை செய்ய வேண்டும்" - சேரன் ஆதங்கம் | Cheran | Theater

ஒழுங்குபடுத்தப்படாத சினிமாவுக்குள் முண்டியடித்து ஓடிக் கொண்டிருக்கிறோம். டிராபிக்கில் சிக்கியதைப்போல ஒரு படத்தை எப்படி வெளியே கொண்டுவருவது என இருக்கிறது சினிமா தயாரிப்பு.

Johnson

ஆரி நடிப்பில் உருவாகியுள்ள `4த் ஃப்ளோர்' படத்தின் செய்தியாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட சேரன் பேசியபோது, "ஒரு படத்தை எடுத்து விடுகிறோம். ஆனால் அந்தப் படத்தை மக்களிடம் கொண்டு செல்லவும், மக்களைப் பார்க்க வைக்கவும் மிகவும் கஷ்டப்படுகிறோம். நான் ’திருமணம்’ என்ற படத்தை ஒரு புது தயாரிப்பாளரை வைத்து எடுத்தேன். அந்தப் படம் நஷ்டமாகவில்லை என்றாலும், புது தயாரிப்பாளரைப் பயன்படுத்த பயம் வருகிறது. அவர், கஷ்டப்பட்டு உழைத்த பணத்தைக் கொண்டுவந்து படத்தில் போடுகிறார். ஆனால் அதனைத் திருப்பி எடுக்க வழி இருக்கிறதா என்று கேட்டால் இல்லை. நாங்கள் மனசாட்சியை அடமானம் வைத்துவிட்டு தெரிந்தே ஒருவரைக் குழிக்குள் தள்ளுகிறோமா என்று கேட்டால், ஆம். இங்கிருக்கும் எல்லா தொழில்நுட்ப கலைஞர்களும் சம்பளம் பெற்றுவிட்டுச் சென்று விடுவார்கள். ஆனால், அந்தப் படத்தை வைத்துக் கொண்டு தயாரிப்பாளர் தனியாக நிற்கிறார்.

இயக்குநர் சேரன்

இதை எங்கே வெளியிட, எத்தனை காட்சி தருவார்கள் என எதுவும் தெரியாது. இதற்கு காரணம் ஒழுங்குபடுத்தப்படாத சினிமாவுக்குள் முண்டியடித்து ஓடிக் கொண்டிருக்கிறோம். டிராபிக்கில் சிக்கியதைப்போல ஒரு படத்தை எப்படி வெளியே கொண்டு வருவது என இருக்கிறது சினிமா தயாரிப்பு. இதைச் சரி செய்யும் வழி மிகவும் சுலபம். ஒரு கட்டுப்பாடு, ஒழுங்கு, எல்லோரும் பிழைக்க வேண்டும் என்ற நல்ல சிந்தனை தேவை. அதனை தயாரிப்பாளர்களால் கொண்டுவர முடியவில்லை என்றால், தயாரிப்பாளர் சங்கம் சரி செய்ய முயலவேண்டும். திரையரங்கில் போதிய காட்சிகள் கொடுக்கப்படவில்லை என்ற சிக்கல் உள்ளது. வெறுமனே பெரிய நடிகர்கள், பெரிய தயாரிப்பாளர்களுக்குத்தான் வாய்ப்பு என மாறிவிட்டது.

இந்த சமயம் ஓடிடி என்ற ஒரு நம்பிக்கை வந்தது. ஆனால் இப்போது அவர்களும், ’தியேட்டரில் ஓட்டி பின்னர் வாருங்கள்’ என்கிறார்கள். எனவே, இதனை முறைப்படுத்த வேண்டும். அந்த அதிகாரம் அரசாங்கத்திடம்தான் உள்ளது. எல்லோரும்தான் வரி கட்டுகிறோம். எனவே, சிறு தயாரிப்பளர் பிழைக்க அரசாங்கம் ஒரு வழியை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். அது அரசாங்கத்தின் கடமை.

சேரன்

எம்.ஜி.ஆர். என்ற ஒரு முதலமைச்சர் முன்பு இருந்தார். அப்போது நிறைய டப்பிங் படங்கள் வர ஆரம்பித்தன. அதற்கு நடுவே தமிழ் சினிமா காணாமல் போய்விடும் அபாயம் உண்டானது. உடனே எம்.ஜி.ஆர். ஓர் உத்தரவைப் பிறப்பித்தார். எல்லா திரையரங்கங்களும் 90 நாட்கள் தமிழ்ப் படங்களைத்தான் திரையிட வேண்டும். இல்லை என்றால், லைசன்ஸ் ரத்து என்று அறிவித்தார். அதைத்தான் இப்போது சிறு படங்கள் வெளியாவதற்கு 3 மாதங்களை ஒதுக்கிக் கொடுங்கள், அது எந்த மூன்று மாதமானாலும் சரி. மீதமுள்ள 9 மாதங்களில் பெரிய படங்களை வெளியிட்டு கொள்ளுங்கள் என்று சொல்கிறேன். இந்தத் திட்டத்தை நான் சொல்வதால் நடக்காது. ஒரு கூட்டமாக போய்க் கேட்டால் நடக்கும். நான் இப்போது இதனைப் பேச காரணம்கூட, இது எப்போதாவது அரசாங்கத்தின் காதில் விழும். அரசாங்கம் தயாரிப்பாளர் சங்கத்தை அழைத்து, சேரன் இப்படி பேசினாராமே, ’வாருங்கள் பேசுவோம்’ எனக் கூப்பிட்டால், இந்த மேடையில் நான் கலந்துகொண்டது பிரயோஜனமாக இருக்கும்" என்றார்.