நடிகர் மாதவன் நடிப்பில் கிருஷ்ணகுமார் ராமகுமார் இயக்கியுள்ள படம் `GDN'. இந்தியாவின் புகழ்பெற்ற கண்டுபிடிப்பாளர் ஜி.டி. நாயுடுவின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகியுள்ள இப்படத்தில் சத்யராஜ், ஜெயராம், பிரியாமணி, துஷாரா விஜயன், வினய் ராய், தம்பி ராமையா, டிஜே அருணாசலம், கருணாகரன், அதிதி பாலன், மோகன் ராமன், கனிகா, ரமேஷ் திலக் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சமீபத்தில் கோவையில் நடைபெற்றது. விண்டேஜ் கார்களின் அணிவகுப்பு, அதிவேக சூப்பர் கார் அனுபவத்துடன் இந்நிகழ்வு நடந்தது. ஜி.டி. நாயுடுவின் இந்திய ஆட்டோமொபைல் துறைக்கான பங்களிப்பை நினைவுகூரும் வகையில் இந்த அணிவகுப்பு அமைந்திருந்தது.
படம் பற்றி ஆர். மாதவன் கூறிய போது, "ஜி.டி. நாயுடு ஒரு கண்டுபிடிப்பாளர் மட்டுமல்ல. அவர் ஒரு தொலைநோக்கு பார்வை கொண்ட தலைவர், அசாதாரண சாதனையாளர், அதைவிட மிக முக்கியமாக தேசபக்தி கொண்டவர். பல துறைகளில் அவரது பங்களிப்பு அளப்பரியது. ஆனால், அவரது ஆட்டோமொபைல் மீதான பேரார்வத்தை மட்டுமே நாம் கொண்டாடுகிறோம். அவரது வாழ்க்கை தமிழ்நாடு மட்டுமல்ல, இந்தியா முழுவதும் அறியப்பட வேண்டியது அவசியம். அதுவே இந்த திரைப்படத்தை உருவாக்க எங்களுக்கு ஊக்கமாக அமைந்தது" என்றார்.
நடிகை துஷாரா விஜயன் பகிர்ந்து கொண்டதாவது, "பள்ளி நாட்களில் ஜி.டி. மியூசியத்திற்கு வந்திருக்கிறேன். அப்போது, பின்னாளில் ஜி.டி. நாயுடுவின் மனைவியாக திரையில் நடிப்பேன் என்று கனவிலும் நினைக்கவில்லை. பல தலைமுறைகள் அவரது சாதனைகளைப் பாராட்டி வருகின்றன. ஆனால், 'ஜி.டி.என்’ திரைப்படம் அவரது கண்டுபிடிப்புகளுக்குப் பின்னால் இருந்த அன்பும் மனிதநேயமும் நிறைந்த மனிதரை உலகிற்கு அறிமுகப்படுத்தும்" என்றார்.
இயக்குநர் கிருஷ்ணகுமார் ராம்குமார் பகிர்ந்து கொண்டதாவது, "ஒரு புத்தகக் கண்காட்சியில் ஜி.டி. நாயுடு பற்றிய ஒரு புத்தகத்தை வாங்கிப் படித்த நாள்தான் இந்த திரைப்படத்திற்கான ஆரம்பப்புள்ளி. அவரது சாதனைகள், போராட்டங்கள், யாருக்கும் தெரியாத வாழ்க்கை அத்தியாயங்கள் என்னை ஆழமாக பாதித்தன. இப்படிப்பட்ட வாழ்க்கை வரலாறு பெரிய திரைக்கும் கொண்டு வரவேண்டும் என்று தோன்றியது" என்றார்.