புஸ்ஸி ஆனந்த்
புஸ்ஸி ஆனந்த் @BussyAnand | Twitter
கோலிவுட் செய்திகள்

காலில் விழும் விஜய் ரசிகர்கள்... தளபதியின் படைத் தளபதி... யார் இந்த புஸ்ஸி ஆனந்த்?

இரா.செந்தில் கரிகாலன்

பத்திரிகைகள், தொலைக்காட்சிகள், சமூக வலைதளங்கள் என ஊடகங்களில் சமீபமாக அடிபடும் பெயர் புஸ்ஸி ஆனந்த். நடிகர் விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச் செயலாளர். `தலைவர்களின் சிலைகளுக்கு மரியாதை, பட்டினி தினத்தை முன்னிட்டு அன்னதானம், பள்ளி மாணவர்களுக்கு ஊக்கத்தொகை, நடிகர் விஜய் பயிலகம் என விஜய் மக்கள் இயக்கத்தின் சமீபத்திய செயல்பாடுகளால் பிரபலமாகி வருகிறார்.

விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச் செயலாளர் என்பதைத் தாண்டி, விஜய் ரசிகர்கள் காலில் விழும் அளவுக்கு செல்வாக்கு மிக்கபவராக வலம் வரும் புஸ்ஸி ஆனந்த் யார், விஜய்யின் நம்பிக்கைக்குரியவராக அவர் உருவெடுத்தது எப்படி உள்ளிட்ட விஷயங்களைப் பார்ப்போம்.

புஸ்ஸி ஆனந்த்

புதுச்சேரியைச் சேர்ந்தவர் புஸ்ஸி ஆனந்த். புதுச்சேரியின் முன்னாள் அமைச்சரும் காங்கிரஸ் பிரமுகருமான அஷ்ரப்பின் உதவியாளர், ரியல் எஸ்டேட் அதிபர் உள்ளிட்டவைதான் அவரின் அடையாளம். காங்கிரஸ் கட்சியில் பயணித்துவந்த புஸ்ஸி ஆனந்துக்கு, 2000-ம் ஆண்டின் தொடக்கத்தில், எம்.எல்.ஏ ஆசை பிறக்கிறது. தொடர்ந்து, புதுச்சேரியில் உள்ள புஸ்ஸி என்கிற தொகுதியைக் குறிவைத்து களப்பணியில் இறங்குகிறார். மீனவ மக்கள், இஸ்லாமியர் நிறைந்த அந்தத் தொகுதிகள் நடிகர் விஜய்க்கென தனி ரசிகர் பட்டாளமுண்டு.

அவர்கள் வழியாக அந்தத் தொகுதி மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் செய்து வந்தார். இவரின் அணுகுமுறையைக் கண்ட, அந்தப்பகுதி விஜய் ரசிகர்கள் இவரை மன்றத்தின் கௌரவத் தலைவராக்குகின்றனர். அந்த அடையாளத்தின் மூலமாகவும், விஜய் ரசிகர் மன்றத்துக்கு செய்துவரும் உதவிகளின் வழியாகவும் விஜய், மற்றும் அவரின் தந்தை எஸ்.ஏசியின் அறிமுகமும் புஸ்ஸி ஆனந்துக்குக் கிடைக்கிறது. (ஆனால், புஸ்ஸி ஆனந்த் ஒரு நேர்காணலில், 97-ம் ஆண்டிலிருந்தே விஜய் மன்றத்தில் இருப்பதாக பதிவு செய்திருக்கிறார்)

விஜய்யுடன் புஸ்ஸி ஆனந்த்

இந்தநிலையில்,. 2005-ம் ஆண்டு, புதுச்சேரி காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களுள் ஒருவரான கண்ணன், அப்போது முதல்வராக இருந்த ரங்கசாமிக்கு எதிராகச் செயல்பட்டதாகக் கூறி கட்சியை விட்டு நீக்கப்பட்டார். தொடர்ந்து, புதுச்சேரி முன்னேற்ற காங்கிரஸ் என்கிற கட்சியைத் தொடங்கினார் கண்ணன். அந்தக் கட்சியில் இணைந்து, 2006 தேர்தலில் போட்டியிட்டு எம்.எல்.ஏவாகத் தேர்ந்தெடுக்கப்படுகிறார் புஸ்ஸி ஆனந்த். மக்கள் பிரதிநிதி என்பதால் அவருக்கு புதுச்சேரி மாநில விஜய் மன்றத்தின் பொறுப்பு கிடைக்கிறது. தொடர்ந்து அவருடைய செயல்பாடுகளால், ஒட்டுமொத்த மன்றங்களின் பொறுப்பாளராகிறார். தற்போது விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச் செயலாளராக இருக்கிறார்.

அரசியல் கட்சிகளுக்கு இணையாக தமிழ்நாடு முழுவதும் மாவட்டம், தொகுதி, நகரம், வட்டம், கிளை என கட்டமைப்பையும் மகளிர் அணி, இளைஞர் அணி, வர்த்தக அணி, மீனவரணி என நிர்வாக அமைப்பையும் கொண்டிருக்கிறது விஜய் மக்கள் இயக்கம்.

தமிழ்நாட்டில் மட்டுமல்லாது கேரளா, கர்நாடகா, ஆந்திரா என பல்வேறு மாநிலங்களிலும் இலங்கை, சிங்கப்பூர் உள்ளிட்ட பல நாடுகளிலும் விஜய் மக்கள் இயக்கம் செயல்பட்டு வருகிறது. அத்தனை மன்றங்களையும் புஸ்ஸி ஆனந்த்தான் நிர்வகித்து வருகிறார்.

விஜய் மக்கள் இயக்கம் சார்பாகத் தொடங்கப்பட்ட, விலையில்லா விருந்தகம், விலையில்லா மருந்தகம், நடிகர் விஜய் பயிலகம் என அனைத்திலும் புஸ்ஸி ஆனந்தின் பங்கு மிக முக்கியமானது. தவிர, மக்கள் இயக்கத்தின் நிர்வாகிகள் கூட்டம் அனைத்தையும் புஸ்ஸி ஆனந்த்தான் ஒழுங்குபடுத்துகிறார்.

அண்ணல் அம்பேத்கர் சிலைக்கு தொகுதி வாரியாக மாலை அணிவித்து மரியாதை செய்ய கடந்த ஏப்ரல் மாதம் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளுக்கு உத்தரவிடப்பட்டது. அரசியல் கட்சிகளுக்கு இணையாக, விக்கிரவாண்டியில் மிகப்பெரிய படையோடு அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்தார் புஸ்ஸி ஆனந்த்.

நடிகர் விஜய் பயிலகத்தையும், சென்னை கொருக்குப் பேட்டையில் உள்ள முத்தமிழ் நகரில் தொடங்கிவைத்தார் புஸ்ஸி ஆனந்த். தொகுதி வாரியாக, அதிக மதிப்பெண் எடுத்த பத்தாம் மற்றும் பண்ணிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பரிசளிக்கும் விழாவிலும் விஜய்க்கு பக்கபலமாக நின்று நிகழ்ச்சியை நடத்தினார் புஸ்ஸி ஆனந்த்.

எளிய அணுகுமுறையும், களத்தில் இறங்கி வேலை செய்வதுமே புஸ்ஸி ஆனந்தின் அடையாளம் என்கிறார்கள் விஜய் மக்கள் நிர்வாகிகள். விஜய் தந்தை எஸ்.ஏசி, முன்னாள் மக்கள் இயக்க நிர்வாகிகள் என பலரின் விமர்சனங்களையும் மீறி, விஜய் அவரைப் பக்கத்தில் வைத்துக் கொள்வதற்கு, விஜய்யின் வார்த்தையை மீறி அவர் எந்தச் செயலையும் செய்யமாட்டார் என்பதையும் தாண்டி, விஜய்யின் மனவோட்டத்தைப் புரிந்து செயல்படுபவர் என்பதையே காரணமாகச் சொல்கிறார்கள்.

விஜய்யின் அரசியல் வருகை குறித்து, பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பும்போதெல்லாம், மழுப்பலாகவும் அதை விஜய்தான் அறிவிக்கவேண்டும் என்றுகூறி வரும் புஸ்ஸி ஆனந்த், ஒருவேளை விஜய் அரசியலுக்கு வந்தால் அந்த இயக்கத்தின் முக்கிய முகமாக இருப்பார் என்பதில் எந்தச் சந்தேகமுமில்லை.