அம்பேத்கர் சிலைக்கு மரியாதை; அரசியல் கட்சியாக மாறுகிறதா விஜய் மக்கள் இயக்கம்..தேர்தல் பாதை ஆரம்பமா?

நடிகர் விஜய் வெளியிட்டுள்ள அறிவிப்பு ஒன்று தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த அறிவிப்பு என்ன? விவரமாக பார்க்கலாம்.
Actor vijay
Actor vijayInstagram

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம்வரும் விஜய், நடித்த வாரிசு திரைப்படம் ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்ற நிலையில், தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

உள்ளாட்சி தேர்தல் களத்தில் போட்டியிட்ட விஜய் மக்கள் இயக்கத்தினர்!

கடந்த உள்ளாட்சி தேர்தலில் களமிறங்கிய விஜய் மக்கள் இயக்கத்தினர் ஒரு சில இடங்களில்வெற்றிகளை பெற்றனர். அவர்களை நேரில் வரவழைத்து பாராட்டியதுடன், இணைந்து புகைப்படமும் எடுத்துக்கொண்டார், விஜய். அப்போதே விஜய் மக்கள் இயக்கம் எதிர்காலத்தில் அரசியல் கட்சியாக மாறக்கூடும் என பேசப்பட்டது.

இந்தச்சூழலில், சமீபகாலமாக விஜய், தனது மக்கள் இயக்க நிர்வாகிகளை அழைத்து ஆலோசனை கூறி வருவது அரசியல் கட்சிக்கான அச்சாரமா? என பலரையும் யோசிக்க வைத்துள்ளது. குறிப்பாக, விஜய் மக்கள் இயக்கத்தை வலுப்படுத்த தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செல்லுமாறு நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டது, இயக்கத்தில் உறுப்பினர் சேர்க்கையை அதிகரிக்க அறிவுறுத்தல் போன்றவை பேசு பொருளாகி உள்ளது.

”அம்பேத்கர் சிலைக்கு மாலை அணியுங்கள்” - விஜய் அறிவுறுத்தலால் பரபரப்பு

இதற்கு ஒருபடி மேலே போய், விஜய் மக்கள் இயக்கத்தின் கீழ் செயல்படும் பத்துக்கும் மேற்பட்ட அணிகளுக்கு புதிய நிர்வாகிகளை நியமித்த விஜய், அம்பேத்கர் பிறந்தநாளன்று அவரதுசிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும்படி நிர்வாகிகளை அறிவுறுத்தியுள்ளார். இந்தத் தகவலை விஜய் மக்கள் இயக்கத் தலைவர் புஸ்ஸி ஆனந்த், ரசிகர் மன்ற நிர்வாகிகளுக்கென உருவாக்கப்பட்டுள்ள வாட்ஸ் அப் குழுவில் பதிவிட்டுள்ளார்.

இதையடுத்து, தமிழ்நாடு முழுவதும் உள்ள விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் அம்பேத்கர் சிலைகளுக்கு மாலை அணிவிக்க நேரம் ஒதுக்கக்கோரி காவல்துறையில் மனு கொடுத்துள்ளனர். 2021 சட்டமன்ற தேர்தலில் வாக்களிக்க நடிகர் விஜய் சைக்கிளில் சென்றார். இது பெட்ரோல், டீசல் விலை உயர்வை மறைமுகமாக விமர்சிக்கும் வகையிலான செயல் எனப் பேசப்பட்டது. வலதுசாரி கொள்கைகளுக்கு எதிரானவன் என தன்னைக் காட்டிக் கொள்ளவே விஜய் விரும்புவதாகவும் கூறப்பட்டது.

அடிக்கடி பனையூர் இல்லத்தில் நிர்வாகிகள் உடனானசந்திப்பு, விஜய் மக்கள் இயக்கத்தை பலப்படுத்த எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தல்களுக்கான முன்னோட்டமா? என்ற கேள்வி அனைவரது மனதிலும் எழுந்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com