சோமீதரன் இயக்கத்தில் நவீன் சந்திரா, சனந்த், ரூபா, விது, சிந்து குமரேசன் எனப் பலரும் நடித்துள்ள படம் `நீளிரா'. இப்படம் ஏப்ரல் 3ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் படத்திற்கான செய்தியாளர் சந்திப்பு நேற்று இரவு நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசிய இயக்குநர் வசந்தபாலன், "தூர்தர்ஷன் இந்தியாவில் ஆரம்பிக்கப்பட்டபோது ஒளிபரப்பப்பட்ட சீரியல் இராமாயணம். இந்தியா முழுக்க இராமாயணம் ஒளிபரப்பானது. எல்லா ஊரிலும் இராமாயணம் ஒளிபரப்பாகும் ஞாயிற்றுக்கிழமை சாமி கும்பிட, வணங்க என நேரத்தை ஒதுக்க ஆரம்பித்தார்கள்.
இந்திய முழுக்க அது ஒரு தீபோல பரவியது. அப்படி பரவியபோதுதான், ராம ஜென்ம பூமி குழு கிளம்பி ஒரு பெரிய கருத்தியலை விதைக்கிறது, `பாபர் மசூதி இடிப்பு'. இப்படியான கருத்தியல் இன்றும் இந்தியாவில் விதைக்கப்படுகிறது. வெறுப்பு பரப்பப்பட்டுக்கொண்டே இருக்கிறது. The Kashmir Files ஆகட்டும், Dhurandhar ஆகட்டும் இந்தியா முழுக்க இப்படி ஒரு வெறுப்பை பரப்பக்கூடிய பெரிய சூழலில், வெறுப்புக்கு எதிராக கலையைக் கையில் வைத்திருக்கும் இயக்குநர்கள் இந்திய இயக்குநர்கள் மட்டும்தான் என்பதை ஆணித்தரமாக நான் சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன். வெற்றிமாறன், கார்த்திக் சுப்பராஜ், ராஜூ முருகன் வரைக்கும் இந்தியாவில் இருக்கும் மொத்த சினிமாவின் வழியாக எதிர்ப்பு முன்வைக்கப்பட்டுக் கொண்டே இருக்கிறது.
கார்த்திக் சுப்பராஜின் `இறைவி', `டபுள் எக்ஸ்' போன்ற படங்கள் மிகவும் பிடிக்கும். தன்னுடைய அரசியலை சொல்லிக்கொண்டே இருக்கிறார். இந்தியா முழுக்க ஆயுதமும் இரத்தமும் வெறுப்பும் ஏதேதோ காரத்திற்காக கக்கப்பட்டுக் கொண்டே இருக்கிறது. படங்கள் மூலமாக அதனை எதிர்க்க வேண்டிய சூழலில் `வெறுப்பின் கொட்டம் வீழ்க, அன்பு அறமென எழுக' எனச் சொல்லும் படமாகத்தான் சோமீயின் `நீளிரா'வைப் பார்க்கிறேன். இப்படத்தைப் பார்க்கச் செல்லும் முன் என் மகன் `போர் வந்துவிடுமா? மறுபடி லாக் டவுன் வந்துவிடுமா?' எனக் கேட்டான். என் மனைவி, ’சினிமா எல்லாம் இருக்குமா? மொத்தமாக மூடிவிடுவார்களா?’ எனக் கேட்டார். அந்தக் கேள்விக்கு என்னால் பதில் சொல்ல முடியவில்லை. தேர்தலுக்குப் பிறகு நாம் கடுமையான சூழலைச் சந்திக்க இருக்கிறோம். போரின் மொத்த சூழலும், நம் ஊருக்குள், நம் வீட்டுக்குள் வரப்போகிறது. அது தவிர்க்கவே முடியாததாக இருக்கும்.
போர்க் கதைகளை ரத்தம் தெறிக்க, துப்பாக்கி வெடிக்க கேட்டுக் கொண்டிருந்த சூழலில், இரத்தம் இல்லாமல் ஒரு மரணம்கூட இல்லாமல் சோமீதீரன் படத்தை எடுத்த விதம் கலையின் தீவிரத்தன்மையைக் காட்டுகிறது. இந்தப் படத்தை ஏன் நேசிக்கிறேன் என்றால், எதுவும் இல்லாமல் ஒரு கலையை முன்வைக்க முடியும் எனக் காட்டி இருக்கிறார். ஒரு மரணம் நிகழக் கூடாது என்பதை முன்வைக்கும்போது, இவன் பெரிய ஆள் என தோன்றியது. இப்படத்தின் இறுதியில் இந்திய ராணுவத்தின் தலைவன், மன்னிப்பு கேட்பான். `போர் நடக்கும் எல்லா இடங்களிலும் போய் இப்படி மன்னிப்பு கேட்கப் போகிறீர்களா?' என்ற கேள்வி வரும். அது எதேச்சதிகாரத்தைப் பார்த்துக் கேட்கும் கேள்வி" என்றார்.