Vijay TVK
கோலிவுட் செய்திகள்

சகோதரர் விஜய் ஒரு தூய ஆட்சியை தந்திட வேண்டும்! - FEFSI | Vijay

வாக்கே கேட்காமல், பணம் ஏதும் கொடுக்காமல் ஒன்றரை கோடி மக்கள் உங்களுக்கு வாக்குகளை செலுத்தி உள்ளார்கள் என்றால் தங்கள் மீது மக்களுக்கு உள்ள நம்பிக்கையும், தாங்கள் ஒரு நல்லாட்சியை தருவீர்கள் என்ற எதிர்பார்ப்பு.

Johnson

விஜய் தலைமையிலான தவெக கட்சி 108 தொகுதிகளில் வெற்றி பெற்று நூற்றாண்டின் வெற்றியாகப் போற்றப்படும் சாதனையை படைத்துள்ளது. இதனை முன்னிட்டு, 25 ஆயிரம் தொழிலாளர்கள் குடும்பங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனம், பணமின்றி வாக்களித்த ஒன்றரை கோடி மக்களின் நம்பிக்கையை மதித்து, தமிழகத்திற்கு நல்ல, தூய ஆட்சியை வழங்க வேண்டும் என அன்புடன் வேண்டுகோள் விடுத்து வாழ்த்து தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் விஜய் தலைமையிலான தவெக 108 தொகுதிகளில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது. இதற்கு பிரபலங்கள் பலரும் வாழ்த்துகள் தெரிவித்துள்ளனர். மேலும் திரைத்துறையினரும், திரைத்துறை சங்கங்களும் வாழ்த்தி வரும் வேளையில் தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனம் வாழ்த்தை வெளியிட்டுள்ளது.

அந்த வாழ்த்தில் "அன்புள்ள சகோதரர் விஜய் அவர்களுக்கு, தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனத்தின் சார்பில் உங்களுடைய மாபெரும் வெற்றிக்கு வாழ்த்துக்களையும், வணக்கங்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம். உங்களின் வெற்றி ஒரு நூற்றாண்டின் வெற்றி கடந்த 75ஆண்டுகளில் தமிழ்நாட்டில் எந்த ஒரு கட்சியும் செய்திடாத மாபெரும் சாதனையை தாங்கள் செய்துள்ளீர்கள். 

Vijay & VS Babu

கடந்த 75 ஆண்டுகளில் நடந்த அனைத்து தேர்தல்களிலுமே தேர்தலில் வெற்றி பெற்ற கட்சிகள் ஏதோ ஒரு கூட்டணி வைத்தே வெற்றி பெற்று உள்ளது. தனி ஒரு கட்சியாக இதுவரை யாரும் வெற்றி பெற்றதில்லை. தமிழகத்தில் இந்த மாபெரும் சாதனை புரிந்த உங்களுக்கு மீண்டும் ஒரு முறை எங்களின் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றோம். 1000, 5000 என பணம் கொடுத்தவர்களுக்கெல்லாம் வாக்களிக்காத தமிழக மக்கள், பணமே கொடுக்காமல் உங்களுக்கு இந்த மாபெரும் வெற்றியை அளித்திருக்கிறார்கள். தங்களின் வெற்றி நிச்சயமாக தமிழக சரித்திரத்தில் ஒரு புதிய அத்தியாயத்தை தொடங்கி உள்ளது என்றே கூற வேண்டும். தங்களின் வேட்பாளர்கள் பலர் பரிச்சயம் இல்லாதவர்கள், ஒரு சிலர் பொதுமக்களிடம் வாக்குக்கூட சென்று சரியாக கேட்காதவர்கள். 

ஆனால் வாக்கே கேட்காமல், பணம் ஏதும் கொடுக்காமல் ஒன்றரை கோடி மக்கள் உங்களுக்கு வாக்குகளை செலுத்தி உள்ளார்கள் என்றால் தங்கள் மீது மக்களுக்கு, உள்ள நம்பிக்கையும், தாங்கள் ஒரு நல்லாட்சியை தருவீர்கள் என்ற எதிர்பார்ப்பு, இந்த அதீத எதிர்ப்பையும், நம்பிக்கையையும் நீங்கள் காத்திட வேண்டும். தமிழகத்திற்கு ஒரு நல்ல ஆட்சியை நீங்கள் சொன்னது போல, ஒரு தூய ஆட்சியை தந்திட வேண்டும் என்று அன்புடன் வேண்டிக்கொண்டு உங்களுக்கு தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனத்தின் சார்பில் 25 ஆயிரம் தொழிலாளர்களின் குடும்பங்களின் சார்பில் எங்களுடைய சகோதரன் ஆகிய உங்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம்." எனக் குறிப்பிட்டுள்ளனர்.