”வரலாறு படைத்துவிட்டீர்கள்..” விக்ரம் முதல் சிவகார்த்திகேயன் வரை விஜய்க்கு வாழ்த்து!
தமிழக அரசியலில் திமுக, அதிமுக ஆதிக்கத்தை உடைத்து, 2026 சட்டமன்றத் தேர்தலில் தவெக சுமார் 35% வாக்குகள் பெற்று, 107 தொகுதிகளில் முன்னிலை பெற்று வரலாறு படைத்துள்ளது. விஜயின் முதல் தேர்தல் வெற்றிக்கு, விக்ரம், சிவகார்த்திகேயன், ஜீவா, சிபி சத்யராஜ், ஜிவி பிரகாஷ் உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் சமூக வலைதளங்களில் பாராட்டு மழை பொழிந்து வருகின்றனர்.
தமிழக அரசியலை பொறுத்தவரை இருபெரும் திராவிடக் கட்சிகளான திமுக மற்றும் அதிமுக இடையேயான இருமுனைப் போட்டியே இருந்துவந்த நிலையில், நடிகர் விஜயின் வருகையால் இந்த முறை ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தேர்தலை தமிழகம் கண்டுள்ளது.
தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகளின்படி, விஜய் ஒரு முக்கியக் காரணியாக இருந்தாலும், தமிழகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் திமுக மீண்டும் ஆட்சிக்கு வர வாய்ப்புள்ளது எனத் தெரிவித்திருந்தன. ஆனால் மிகப்பெரிய ரசிகர் பட்டாளமும் இளைஞர்களின் செல்வாக்கும் இந்தத் தேர்தல்களில் விஜயை ஒரு கணிக்க முடியாத சக்தியாக மாற்றியிருந்தன.
இந்தசூழலில் 2026 சட்டமன்ற தேர்தலில் ஆளுங்கட்சியான திமுக மற்றும் அதிமுக இரண்டு கட்சிகளையும் பின்னுக்குதள்ளியிருக்கும் தவெக கிட்டத்தட்ட 35% சதவீத வாக்குகளை பதிவுசெய்துள்ளது.
தற்போதுவரை 107 தொகுதிகளில் தவெக முன்னிலையில் இருந்துவரும் நிலையில், விக்ரம், சிவகார்த்திகேயன், ஜீவா, சிபி சத்யராஜ் உள்ளிட்ட பல திரைப்பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
விகர்ம் முதல் சிவகார்த்திகேயன் வரை வாழ்த்து..
எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருக்கும் சிவகார்த்திகேயன், “போட்டியிட்ட முதல் தேர்தலில் இவ்வளவு பெரிய தாக்கத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்தி இந்த வெற்றியை பெற்றிருக்கும் விஜய் சாருக்கு வாழ்த்துகள் நீங்கள் திரைத்துறையை சார்ந்தவர் என்பதில் கூடுதல் மகிழ்ச்சி, மக்கள் பணி சிறக்க வாழ்த்துகள் சார்” என வாழ்த்து தெரிவித்துள்ளார்.
நடிகர் விக்ரம், “வாழ்த்துக்கள் நண்பா, இன்று நீங்கள் வரலாறு படைத்துவிட்டீர்கள்” என இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
நடிகர் ஜீவா, விசிலடித்து கண்ணீருடன் வீடியோ பதிவிட்டுள்ளார்.
நடிகர் சிபி சத்யராஜ், நல்லா இருப்போம், நல்லா இருப்போம், எல்லோரும் நல்லா இருப்போம் என பதிவிட்டுள்ளார்.
இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ், “இது மிகப்பெரியது. மேலும் இதற்கு முன் எப்போதும் இல்லாத, இதற்குப் பின் எப்போதும் பெறமுடியாத ஒரு வரலாற்று வெற்றி” என பதிவிட்டுள்ளார்.
இயக்குநர் அமீர், விருப்பு வெறுப்புகளை மறந்துவிடுங்கள், மக்கள் தீர்ப்பே, மகேசன் தீர்ப்பு என்று வாட்சப்பில் பதிவிட்டுள்ளார்.

