ஜி.வி.பிரகாஷ் நடித்த 'பேச்சுலர்' படத்தின் மூலம் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் திவ்யபாரதி. தொடர்ந்து `மஹாராஜா', `கிங்ஸ்டன்' படங்களும் இவர் நடிப்பில் வெளியானது. தற்போது G.O.A.T என்ற தெலுங்கு படம் ஒன்றில் நடித்து வரும் இவர், அப்பட இயக்குநர் படப்பிடிப்பில் தகாத வார்த்தையை இயல்பாக உபயோகிப்பதாகக் குற்றம்சாட்டியிருக்கிறார். இது இப்போது சர்ச்சையாக எழுந்துள்ளது.
இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருக்கும் திவ்யபாரதி, "பெண்களை 'Chilaka' (தெலுங்கில் கிளி என்று பொருள்) சொல்வது வெறும் நகைச்சுவை அல்ல, அது 'misogyny' மனநிலையின் வக்கிரமான பிரதிபலிப்பு. பெண்ணை புகழ்வதுபோல அவர்களது வெளித்தோற்றத்தை வக்கிரமாக வர்ணிக்கும் சொல் அது. இது ஓர் உதாரணம்தான். இது ஒருமுறை மட்டுமே நடந்த சம்பவம் அல்ல. அந்த இயக்குநர் படப்பிடிப்பு தளத்திலும் இதேபோன்று பெண்களை அவமதிக்கும் வகையில் நடந்துகொண்டார். இது அவர் உருவாக்க நினைக்கும் கலைக்கே நேர் எதிரானது. இயக்குநரின் இச்செயலுக்கு இப்படத்தின் ஹீரோவும் அமைதியாக இருப்பதும், இதுபோன்ற கலாச்சாரம் நிலைத்திருக்க உதவுவதும் எனக்கு ஏமாற்றமாக இருந்தது. நான் தேர்வு செய்வதெல்லாம் பெண்கள் கேலிக்கு ஆளாகாத சூழல் கொண்ட பணி இடங்கள். ஒவ்வொரு குரலும் முக்கியம். மரியாதையை பேரம் பேச முடியாத இடங்களை நான் தேர்வு செய்கிறேன். இது வெறும் தேர்வு மட்டுமல்ல. ஒரு கலைஞராகவும், ஒரு பெண்ணாகவும் இதுதான் எனது உறுதியான நிலை.
`நான் எப்போதும் பிரச்சினை செய்கிறேன்' என்று கூறுபவர்களுக்கு சில உண்மைகளை பதிலாக முன்வைக்கிறேன். தமிழ் சினிமாவில் ஒரே நடிகர்கள் மற்றும் படக்குழுவினருடன் நான் பலமுறை பணியாற்றியுள்ளேன் அப்போதெல்லாம் எந்த பிரச்னைகளும் இல்லை. இந்த ஒரு இயக்குநர் மட்டுமே எல்லை மீறி அவமரியாதையான கருத்துக்களை தெரிவித்தார். அவரே தான் இதனை பொதுவெளிக்கு கொண்டு வர செய்தார். அதற்கு பதிலளிக்க எனக்கு முழு உரிமை இருக்கிறது. இன்னமும் நீங்கள் இந்த நடத்தையை ஆதரிக்க விரும்பினால் அது உங்கள் விருப்பம். அதனால் எனது தூக்கம் கெடாது. யாராவது என்னைப் பற்றி இழிவாக பேச முடிவுசெய்தால், நான் அவர்களுக்கு உண்மையிலேயே நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
நடிகை திவ்யபாரதி, இயக்குநர் நரேஷ் குப்பில மீது வைத்துள்ள பகிரங்க குற்றச்சாட்டு தற்போது பேசுபொருளாகியுள்ளது. சமீபத்தில் நடிகையின் உடல் எடை குறித்து கேள்வி கேட்ட பத்திரிகையாளரை நடிகை கௌரி கிஷன் செய்தியாளர் சந்திப்பிலேயே கண்டனம் தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.