தமிழ்நாடு முதலமைச்சர் விஜயை மரியாதை நிமித்தமாக சந்தித்த இயக்குநர் விக்ரமன், 32 ஆண்டுகளுக்கு முன் இருந்த அதே நட்புணர்வோடு அவர் பேசினார் என நெகிழ்ச்சியுடன் கூறுகிறார். “நான் எப்பவும் உங்க விஜய் தான்” என்ற முதல்வரின் வார்த்தைகள் தன்னை கண்கலங்கச் செய்ததாகவும், எந்த ஆணவமும் இல்லாத எளிமை அவரில் தெரிந்ததாகவும் விக்ரமன் பாராட்டினார்.
தமிழ்நாடு முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்றதில் இருந்து பலரும் அவரை சந்தித்து கோரிக்கைகளை முன்வைப்பதும் வாழ்த்துக்கள் தெரிவிப்பதும் நிகழ்ந்து வருகிறது. அந்த சூழலில் இன்று இயக்குநர் விக்ரமன் முதல்வரை சந்தித்திருக்கிறார். இந்த சந்திப்பு பற்றி அவர் கூறுகையில் "மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சரை மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்து தெரிவித்தோம். மிகவும் நட்புணர்வோடு என்னிடம் பேசினார். முதலமைச்சர் என்ற பந்தா துளிகூட அவரிடம் இல்லை. 32 ஆண்டுகளுக்கு முன்பு அவரிடம் எப்படி பழகினேனோ, அதேபோல நட்புணர்வுடன் மிகவும் சகஜமாக பழகினார். அது எனக்கு மிகவும் நெகிழ்ச்சியாக இருந்தது. `நான் எப்பவும் உங்க விஜய் தான், எப்போ என்னனாலும் என்னிடம் சொல்லுங்க' என்று கூறினார்.
எனக்கான தனிப்பட்ட கோரிக்கை எதையும் எந்த முதல்வரிடமும் கேட்டதில்லை, திரைப்பட துறை நலனுக்காக தான் பல முதல்வரிடம் கோரிக்கைகளை வைத்திருக்கிறேன் என சொல்லி சில கோரிக்கைகளை வைத்திருக்கிறேன். குறிப்பாக FEFSI தொழிலாளிகளுக்கு முன்னாள் முதல்வர் கலைஞர் பையனூரில் 105 ஏக்கருக்கு மேல் இடம் கொடுத்தார். அங்கு வீடு கட்ட தொழிலாளர்களுக்கு பண வசதி இல்லை. முடிந்தால் அரசாங்கமே அதனை முன்னெடுத்து அவர்களுக்கு இலவசமாக வீடு கட்டி கொடுக்க வேண்டும்.
நான் இயக்குநர் என்பதால் இயக்குநர் சங்கத்தில் 2001 உதவி இயக்குநர்கள் வேலை இல்லாமல் மிகவும் சிரமத்தில் இருக்கிறார்கள். அவர்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்த 50 ஏக்கர் நிலம் கொடுக்க வேண்டும். சிறிய படங்களுக்கு மல்டி ப்ளக்ஸ் தியேட்டரில் சரியாக திரைகளை கொடுக்க வேண்டும். உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்தேன். வர உடனடியாக அவருடைய உதவியாளரை அழைத்து நான் சொன்ன விஷயங்களை எழுதி வாங்கிக் கொள்ளுமாறு கூறினார். பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. நிச்சயமாக சின்ன படங்களுக்கு ஒரு விடிவு காலம் வரும் என நம்பிக்கை இருக்கிறது.