பிரபல திரைப்பட இயக்குநர் ப்ரியதர்ஷனின் மகள் கல்யாணி பிரியதர்ஷன். கேரளாவைச் சேர்ந்த இவர், கடந்த 2017-ஆம் ஆண்டு வெளியான ‘ஹலோ’ தெலுங்கு படம் மூலம் நடிகையாக அறிமுகமானார். தொடர்ந்து தெலுங்கு படங்களில் நடித்து வந்தவர், தமிழிலும் முன்னணி நடிகையானார். இந்த நிலையில், அவருடைய வளர்ச்சி குறித்து தந்தையும் இயக்குநருமான ப்ரியதர்ஷன் தெரிவித்துள்ளார்.
அவர், "நான் என்னுடைய படங்கள் பற்றி அவளுடனோ, அவளுடைய படங்கள் பற்றி அவள் என்னுடனோ எதுவும் பகிர்ந்து கொண்டதில்லை. அவள் இந்த தலைமுறையைச் சேர்ந்தவள். அவர்களுக்கான சினிமாவை நோக்கி அவர்கள் செல்கிறார்கள். நான் என்னுடைய ஓல்ட் ஸ்கூல் சினிமாவை மனதில் வைத்திருப்பவன். ஒரு தந்தையாக அவளுடைய ’லோகா’ படம் பார்த்தபோது எனக்குப் பெருமையாக இருந்தது.
அவள் கேமரா முன் வருவாள் என்றே நான் நம்பியதில்லை. படப்பிடிப்புத் தளங்களுக்கு வரக்கூட விரும்பாத நபர் அவள். ஒரு ஆர்க்கிடெக்ட் ஆக விரும்பி அதனைப் படித்தவள். திடீரென நாகர்ஜூனா இவளை நடிக்கவைக்கக் கேட்டபோது, `அவளால் நடிக்க முடியாது' என்றுதான் கூறினேன். அப்போது, ’நான் முயற்சி செய்து பார்க்கிறேனே’ என கல்யாணி கேட்டாள். ’ஒருவேளை வெற்றி கிடைக்கவில்லை என்றாலும் நான் இழக்க எதுவும் இல்லை, திரும்ப ஆர்க்கிடெக்ட் வேலைக்குச் சென்று விடுவேன்’ என்றாள். அப்படித்தான் அது நடந்தது.
அவளுக்குச் சரியாக மலையாளம் பேசக்கூட வராது, அவள் கேரளாவில் வளர்ந்தவள் இல்லை. ஆனால், ஒவ்வொரு விஷயங்களையும் அவளாக கற்றுக்கொண்டு முன்னேறி இருக்கிறாள். இது என்னுடைய மகள் என்றில்லை, இன்றைய கால இளைஞர்கள் ஒன்றைச் சாதிக்க முடிவெடுத்தால் அதில் தீவிரமாக இயங்குகிறார்கள். ’லோகா’ பொறுத்தவரையில் நான் அந்த மொத்தக் குழுவையும் பாராட்டுவேன். அவர்கள் ஒரு அவெஞ்சர் எடுத்திருக்கிறார்கள், அத்தனையும் ஓர் இந்திய தன்மையோடு எடுத்திருக்கிறார்கள்” என்றார்.