ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ளது ’மதராஸி’. இப்படம் செப்டம்பர் 5 வெளியாகவுள்ள நிலையில் படத்தின் புரமோஷன் பேட்டிகளை கொடுத்து வருகிறார் ஏ ஆர் முருகதாஸ்.
நேர்காணல் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற இயக்குநர் ஏஆர் முருகதாஸ் இடம், சிவகார்த்திகேயனை, விஜயாக மாற்றும் எண்ணம் உங்களுக்கு இருந்ததா எனக் கேட்கப்பட்டது.
அதற்கு பதிலளித்த அவர், "ஒருவரைப் போல இன்னொருவர் வர வேண்டும் என்ற அவசியம் கிடையாது. எம் ஜி ஆரின் இமேஜ் வேறு, மீண்டும் அதே ரூட்டில் வரும் போது, ரஜினி சாருக்கும், எம் ஜி ஆர் சாருக்கும் சம்பந்தமே இருக்காது. அவர் சினிமாவில் சிகரெட் மதுவே இருக்காது. ஆனால் ரஜினி அதற்கு முற்றிலும் எதிராக இருந்தார்.
அதே போல ஆரம்ப கட்டத்தில் விஜய் சார், ரஜினி சாரின் பாணியை பின்பற்றினாலும், தனக்கென ஒரு பாணியை உருவாக்கிக் கொண்டார். போலவே சிவகார்த்திகேயனும் தனக்கென ஒன்றை உருவாக்கிக் கொண்டார். இம்மூவருக்கும் ஒற்றுமை என சொல்வதென்றால், மூன்று பேரையும் குழந்தைகளுக்கு பிடிக்கும்." எனக் கூறினார்.
அதே போல ஒரு படம் ஏன் வெற்றி? ஏன் தோல்வி என நீங்கள் சிந்திப்பீர்களா என்று கேட்ட போது, "துப்பாக்கி படத்தின் போது என்னிடம் முதல் பாதி மட்டுமே இருந்தது, அதனுடன் ஷூட் சென்றோம். அங்கு கதை யோசித்து யோசித்து எடுத்தேன். அதே போல தான் கத்தி படத்திற்கும். இவை இரண்டும் வெற்றி என்றதும், எனக்கு கதை எளிமையாக வருகிறது என நினைத்துவிட்டேன். ஆனால் படம் தோல்வி அடையும் போதுதான், இது சரியான முறை இல்லை என உணர்ந்தேன்" எனக் கூறினார்.
அதே போல் தன் குடும்ப நிகழ்வில் டான்ஸ் ஆடியது பற்றி பேசிய முருகதாஸ், "எங்கள் வீட்டில் பெரிய நிகழ்ச்சி நடந்து நாளாகிவிட்டது என்பதால், என் மகளின் மஞ்சள் நீராட்டு விழாவை பெரியதாக செய்ய வேண்டும் என நினைத்தோம். நிகழ்ச்சி ஏற்பாடுகள் எல்லாம் மனைவியுடையது. டான்ஸ் ஆட வேண்டும் என்பதே மாலையில்தான் சொன்னார்கள். சரி உறவினர்கள் முன்பு தானே என ஆடினேன். ஆனால் அது இவ்வளவு வைரலாகும் என நினைக்கவில்லை" என்றார்.
சல்மான்கானுடன் பணியாற்றிய அனுபவம் பற்றி பேசியவர், "நாம் காலையில் பணியாற்றும் வழக்கம் உள்ளவர்கள். ஆனால் சல்மான் இரவு 8 மணிக்கு தான் ஷூட்டுக்கு வருவார். ஒரு பகல் காட்சி எடுப்பதென்றால், பகல் போல லைட் செய்து இரவில் தான் எடுக்க வேண்டும். ஹீரோ சுறுசுறுப்பாக இருந்தாலும், மற்ற நடிகர்கள் சோர்ந்துவிடுவார்கள். எனவே காட்சிகளின் தரம் குறையும்." என்று கூறினார்.
தொடர்ந்து சிக்கந்தர் படத்தின் தோல்வி பற்றி பேசியவர் "அந்தக் கதையின் அடிப்படை என் மனதுக்கு நெருக்கமான ஒன்று. ஒரு ராஜா, தன் மனைவியை வாழும் காலத்தில் புரிந்து கொள்ளவில்லை. அவள் இறந்த பின், அவள் உடல் உறுப்புகளை கொடையாக பெரும் நபர்களுக்கு ஹீரோ உதவ நினைக்கிறான். அதற்கு ஒரு ஊரே உறுதுணையாக இருக்கிறது என்ற ஒன்லைனை வைத்து எழுதினேன். ஆனால் அதை சரிவர செய்ய முடியவில்லை. அதற்கு நான் மட்டும் காரணமில்லை." என்றார்.