Ranveer Singh Dhurandhar The Revenge
கோலிவுட் செய்திகள்

தமிழ் `துரந்தர்'-க்கு சென்சார் வந்தாச்சு... ரிலீஸ் எப்போது? | Dhurandhar The Revenge

இப்படத்தின் சிறப்புக்காட்சி மார்ச் 18ஆம் தேதி மாலை மற்றும் இரவு என இரு காட்சிகள் இந்தியா முழுக்க ஐந்து மொழிகளிலும் வெளியிட திட்டமிடப்பட்டது. ஆனால் படத்தின் இந்தி பதிப்பே மார்ச் காலையிலும், இரண்டாம் பாதி, மதியமும்தான் திரையரங்குகளுக்கு அனுப்பப்பட்டது.

Johnson

ரன்வீர் சிங் நடிப்பில் ஆதித்யா தர் இயக்கி கடந்த ஆண்டு இறுதியில் வெளியான படம் `துரந்தர்'. ஸ்பை த்ரில்லர் படமாக உருவான இப்படம் உலகளவில், ரூ.1300 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. இப்படத்தின் இரண்டாம் பாகமான `துரந்தர் தி ரிவென்ஞ்' மார்ச் 19 வெளியானது. முதல் பாகம் போலவே இந்த பாகத்திற்கும் பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. இப்படத்தின் முதல் நாள் இந்திய வசூல் 173 கோடி ரூபாய் எனச் சொல்லப்படுகிறது. இந்திய அளவில் முதல் நாள் வசூலில் சாதித்த படங்களை எல்லாம் முறியடித்து முதல் இடத்தில் இருக்கிறது துரந்தர் 2. உலக அளவில் முதல் நாள் வசூல் 247 கோடி.

Dhurandhar The Revenge

இப்படத்தின் சிறப்புக்காட்சி மார்ச் 18ஆம் தேதி மாலை மற்றும் இரவு ஆகிய இரு காட்சிகள் இந்தியா முழுக்க ஐந்து மொழிகளிலும் வெளியிட திட்டமிடப்பட்டது. ஆனால் படத்தின் இந்திப் பதிப்பே மார்ச் காலையிலும், இரண்டாம் பாதி மதியமும் தான் திரையரங்குகளுக்கு அனுப்பப்பட்டது. இந்திக்கே இந்த நிலை என்பதால், பிற மொழிப் பதிப்புகள் எதுவுமே திரையரங்குகளுக்கு அனுப்பப்படவில்லை. அதற்கு அந்தந்த மொழிகளில் சென்சார் சொன்ன திருத்தங்களை உடனடியாகச் செய்து சான்றிதழ் பெற முடியாததுதான் காரணம் எனச் சொல்லப்படுகிறது. எனவே, மார்ச் 18ஆம் தேதி சிறப்புக் காட்சிகள் இந்தியா முழுக்க இந்தியில் மட்டுமே திரையானது. பிற மொழிக் காட்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு, இந்திப் பதிப்பே திரையிடப்பட்டது. சில திரையரங்குகள் படத்தையே கேன்சல் செய்து, டிக்கெட் பணத்தைத் திருப்பிக் கொடுத்தனர்.

இந்த நிலையில், ஒருவழியாக `துரந்தர்' தமிழ் டப் பதிப்புக்கான சென்சார் சான்றிதழ் வழங்கப்பட்டுவிட்டது. எனவே நாளை முதல் துரந்தரை தமிழில் பார்க்கலாம். தெலுங்குப் பதிப்புக்கான சென்சார் சான்றிதழும் வழங்கப்பட்டுவிட்டது. ஆனால் எப்போதிலிருந்து திரையாக உள்ளது என தெரியவில்லை. என்னதான் வசூலில் பெரிய சாதனைகள் செய்தாலும் இவ்வளவு பெரிய படத்தின் வெளியீட்டில் இத்தனை குளறுபடிகள் ஏற்பட்டதால், ரசிகர்களும் திரையரங்க உரிமையாளர்களும் அவதிக்குள்ளானார்கள்.

Ranveer Singh

மேலும் இப்போது வந்திருக்கும் படமும் 2K தரத்தில்தான் வந்துள்ளது. 4K தரத்திலான பதிப்பு அடுத்த வாரம்தான் வரும் எனச் சொல்லப்படுகிறது. ஐமாக்ஸ் பதிப்புக்கான கன்டென்ட் இன்னும் வரவில்லை எனவும் சொல்லப்படுகிறது. இதெல்லாம் சீராகி அனைத்து மொழி மற்றும் தரத்தில் எப்போது ’துரந்தர்’ வெளியாகும் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. எது எப்படியோ நாளையில் இருந்து தமிழில் பேசப்போகிறார் ஹம்சா!