76வது பெர்லின் சர்வதேச திரைப்பட விழா, பிப்ரவரி 12 - 22 நடைபெற உள்ளது. இதில் ஃபோரம் (Forum) பிரிவில் இரா. கௌதமின் 'சிக்கலான குடும்பத்தின் உறுப்பினர்கள்' (Members Of The Problematic Family) திரைப்படம் தேர்வாகியுள்ளது. இது இரா. கௌதமின் முதல் திரைப்படமாகும்.
தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு அறிமுக இயக்குநரின் முதல் படமே பெர்லின் திரைப்பட விழாவிற்குத் தேர்வாவது இதுவே முதல்முறை. ஒரு சிறுவனின் மரணத்தை சுற்றி நடக்கும் விஷயங்களாக இப்படம் உருவாகியுள்ளது. இதற்கு முன்பு அலைபாயுதே (2001), பருத்திவீரன் (2008) கொட்டுக்காளி (2024) உள்ளிட்ட படங்களுக்கு அடுத்து, இப்பிரிவில் தேர்வாகும் நான்காவது தமிழ்த் திரைப்படம் இது.
இப்படம் குறித்து இயக்குநர் இரா. கௌதம் கூறுகையில்: "2025-ம் ஆண்டு தொடங்கி, மிகக் குறுகிய காலத்தில் மிகக் குறைந்த பொருட்செலவில் சிறந்த கருப்பொருளுடன் எடுக்கப்பட்ட படம், பெர்லின் திரைப்பட விழாவிற்குத் தேர்வாகுவது மிகவும் பெருமைமிகு தருணமாகும். அதுவும் என்னை போன்ற அறிமுக இயக்குநரின் முதல் படமே தேர்வாகுவது உண்மையில் இங்கு ஓங்கியிருக்கும் தமிழ்க் கலைச் சூழலின் எதிரொலிப்பாகும். அலைபாயுதே, பருத்திவீரன், கொட்டுக்காளி வரிசையில் என் படமும் இணைவது தெற்காசியப் பகுதியிலிருந்து நமது தமிழ்த் திரைப்படங்கள் உலகத் திரைப்பட விழாக்களுக்குச் செல்வது இனி ஒரு தொடர் நிகழ்வாகும் என்பதையே சுட்டுகிறது. இதைச் சாத்தியமாக்கிக் கொண்டிருக்கும் சீரிய கலை இலக்கியவாதிகள், கைமாறு கருதாத திரைப்பட இயக்கத்தினர்கள், முன்சென்ற மூத்தோர் அத்தனை பேருக்கும் நன்றிகளை உரிதாக்குகிறோம்" என்றார்.