ரஜினிகாந்தின் அடுத்தபடமான `தலைவர் 173' படத்தை சிபிசக்கரவர்த்தி இயக்க, கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்கிறது. தற்போது ரஜினிகாந்த் நடித்து நெல்சன் திலீப்குமார் இயக்கி வரும், `ஜெயிலர் 2' படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. `தலைவர் 173' படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் மாதம் துவங்கும் என ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு செய்தியாளர்களை சந்தித்தபோது தெரிவித்திருந்தார் ரஜினிகாந்த்.
இப்படத்தின் இயக்குநரான சிபி, 'தாய் கிழவி' பட ப்ரீ ரிலீஸ் நிகழ்வில் பேசியபோது, "ஏப்ரல் மாத மத்தியில் படப்பிடிப்பு துவங்கும்" என அறிவித்தார். மேலும் இம்மாத துவக்கத்தில் படத்தின் கதை எழுதும் பணிகள் எல்லாம் நிறைவடைந்து, படத்தின் ப்ரீ புரொடக்ஷன் பணிகளை நோக்கி நகர்ந்துள்ளது என ஸ்க்ரிப்ட் புக்கை ராஜ்கமல் மகேந்திரனிடம் கொடுக்கும் புகைப்படங்களை வெளியிட்டனர். தற்போது இப்படத்தில் ரஜினியின் தோற்றம் குறித்த ஒரு தகவல் உலவி வருகிறது. அதாவது, இப்படத்தில் ரஜினியின் தோற்றத்துக்காக 83 வித்தியாசமான தோற்றங்களை சிபி வடிவமைத்ததாகவும், அதிலிருந்து தனித்துவமான மூன்று தோற்றங்களை முடிவு செய்து அதனை ரஜினியிடம் காட்ட உள்ளதாகவும் சொல்லப்படுகிறது. இதிலிருந்து சிறந்த ஒன்றை ரஜினியே தேர்வு செய்ய உள்ளாராம்.
இப்படம் குறித்து ’வித் லவ்’ பட விழாவில் பேசிய சிபி சக்கரவர்த்தி, "நான் 'தலைவர் 173' படம் பண்றேன்னு அறிவிச்சதும் பலர் வாழ்த்தினாங்க. சிலர் இவன் பண்றானானு பயந்தாங்க. தலைவர் ஃபேனா நான் சொல்றேன், இது ரசிகர்களும் குடும்பங்களும் தியேட்டர்விட்டு வெளிய வர்றப்போ திருப்தியோட வர்ற படமா இருக்கும். இது என் Promise!" என்றார். இந்தப் படம் அடுத்தாண்டு பொங்கலுக்கு வெளியாகவுள்ளது.