Sherif Kattalan
கோலிவுட் செய்திகள்

250 பாடல்களை கடந்த `கனிமா' ஷெரீஃப் மாஸ்டர்! | Sherif

எனது 250வது பாடலை எட்டியிருப்பது கனவு போலவும், மிகுந்த உணர்ச்சிகரமான அனுபவமாகவும் உள்ளது. இந்த மைல்கல் எனக்கு மட்டுமல்ல; என்னை நம்பி, இந்தப் பயணத்தில் என்னுடன் நின்ற அனைவருக்கும் சொந்தமானது.

Johnson

புகழ்பெற்ற நடன நிகழ்ச்சியான உங்களில் யார் அடுத்த பிரபுதேவாவில் வெற்றி பெற்று, இன்று தென்னிந்திய திரைப்பட உலகின் பல ஹிட் பாடல்களை வடிவமைத்த நடன அமைப்பாளராக மாறியிருப்பவர் ஷெரீஃப்.  சூது கவ்வும் திரைப்படத்தின் “காசு பணம்” போன்ற நினைவில் நிற்கும் ஹிட் பாடல்களிலிருந்து, பேட்ட படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை ரசிகர்கள் ரசிக்கும் வகையில் நடனமாட வைத்தது, மேலும் ரெட்ரோ திரைப்படத்தில் சூர்யாவின் “கனிமா” பாடலுக்கு புதுமையான நடன விருந்தை படைத்தது என ஷெரீஃபின் நடன அமைப்புகள் எப்போதும் தனித்துவமானவை. சமீபத்தில் ட்ரென்டிங் ஆன பவளமல்லி பாடல் கூட இவர் வடிவமைத்ததே. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் அசாமி திரைப்படங்களில் பல பாடல்களுக்கு நடனம் அமைத்துள்ள ஷெரீஃப், தற்போது `காட்டாளன்' படத்தின் மல்லிகா பாடல் மூலம் தனது 250வது பாடலை நடன அமைப்பாளராக நிறைவு செய்து ஒரு சிறப்பான மைல்கல்லை எட்டியுள்ளார்.

இது குறித்து ஷெரீஃப் கூறும் போது "எனது 250வது பாடலை எட்டியிருப்பது கனவு போலவும், மிகுந்த உணர்ச்சிகரமான அனுபவமாகவும் உள்ளது. இந்த மைல்கல் எனக்கு மட்டுமல்ல; என்னை நம்பி, இந்தப் பயணத்தில் என்னுடன் நின்ற அனைவருக்கும் சொந்தமானது. என் வழிகாட்டிகள், பெற்றோர், குடும்பத்தினர், நண்பர்கள், உதவி நடன அமைப்பாளர்கள், நடனக் கலைஞர்கள், இயக்குநர்கள், இசையமைப்பாளர்கள், தயாரிப்பாளர்கள் மற்றும் என் பணியை நம்பி ஊக்கமளித்த திரைத்துறையின் ஒவ்வொரு சகோதரருக்கும் என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஒவ்வொரு பாடலும் எனக்கு ஒரு புதிய கற்றல் அனுபவமாக இருந்துள்ளது. பல ஆண்டுகளாக என்மீது பொழிந்த அன்புக்கும் ஆதரவுக்கும் நான் எப்போதும் நன்றியுடன் இருப்பேன்.

நடிப்பும் இயக்கமும் நான் மிகவும் மதிக்கும் துறைகள். சரியான நம்பிக்கையுடனும் பொருத்தமான வாய்ப்புடனும் ஏதாவது வந்தால், அதை ஆராய நான் விரும்புகிறேன். ஆனால், நடன அமைப்பாளராக இருப்பதே எனக்கு இந்தத் துறையில் மதிப்புமிக்க இடத்தை அளித்துள்ளது. இப்போது அதிலேயே கவனம் செலுத்தி, என்னைவிட திறமையான பல இளம் கலைஞர்களை உருவாக்கவும் வளர்க்கவும் விரும்புகிறேன். சினிமாதான் என் ஆன்மா. எனது திறமையையும், என் தொழிலையும் தொடர்ந்து மேம்படுத்திக் கொள்ள நான் பாடுபடுவேன்.” என்றார்.